Header Ads



பதில் கட்டுரை


வரலாற்றில் தோன்றிய மிகப்பெரும் 30 மூதேவிகள் எனும் தலைப்பில் ஜப்னா முஸ்லிம் எனும் வலை தளத்தில் 2023 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆதாரமில்லாத தலைப்புக்கு விடையளிப்பதற்காகவும் வாசகர்கள் இமாம் கொமைனி (ரஹ்) அவர்களை  ஒழுங்காக அறிந்து கொள்வதற்காகவும் இந்த ஆக்கம் வாசகர்களின் சிந்தனைக்காக விருந்தளிக்கப்படுகிறது.


1979 - 1989 காலகட்டத்தில் அதிகம் பேசப்பட்டவர் ஈரானின் மறைந்த ஆயதுல்லா ரூஹுல்லா கொமெய்னி. ஏனெனில் அவர் பாரசீக வளைகுடாவின் போலீஸ்காரர் என்று அழைக்கப்பட்ட சக்திவாய்ந்த ஷா பஹ்லவிக்கு எதிராக ஒரு வெற்றிகரமான புரட்சியை வழிநடத்தினார்.


இந்தப் புரட்சி, அதன் இயல்பு காரணமாக, ‘புரட்சிகளை புரட்சிமயப்படுத்தும் புரட்சி’ என்று அடையாளம் காணப்பட்டது, ஏனெனில் இது நிராயுதபாணியான மக்கள் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அந்நியச் சார்பிலிருந்து முற்றிலும் விடுபட்டது.

 

இமாம் கொமெய்னிக்கு நாட்டின் விவகாரங்களில் ஏறக்குறைய முழு அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் அவர் மக்களின் விருப்பப்படி இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் குடியரசு ஆட்சி முறையைத் தேர்ந்தெடுத்து நிறுவினார்.


முதல் நாளில் இருந்தே இந்த புரட்சிகர அரசாங்கத்தை வீழ்த்த பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன, MKO (Mojahideen Kalk Org) பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளில் புரட்சியின் தலைவர்கள் பலர் உயிரிழந்தனர். ஆனால் இமாம் இந்த சதிகளுக்கு எதிராக உறுதியாக நின்று விரும்பிய அரசாங்கத்தை நிறுவுவதில் வெற்றி பெற்றார்.


இமாம் கொமெய்னி மிக உச்சபட்ச அதிகாரத்தை கொண்டிருந்தவராக இருந்த போதிலும், தேவைப்படும்போது வழிகாட்டுதலைத் தவிர, அரசாங்க நிர்வாகத்தில் அவர் தலையிட்டதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரச அமைப்பை நடத்த அனுமதித்தார்.


இமாமின் தனிப்பட்ட வாழ்க்கை

பரந்த மற்றும் செல்வம் கொழிக்கும் ஒரு நாட்டினது அதி சக்திவாய்ந்த ஆட்சியாளரின் தனிப்பட்ட வாழ்க்கையும் நடத்தையும் ஒரு ஏழையைப் போலவே இருந்தது. அவர் சாதாரண மனிதனின் உணவை மட்டுமே சாப்பிட்டார். அவரது ஆடை தேர்வு குறைவாகவே இருந்தது. அனைத்து ஆடம்பரங்களையும் அவர் தவிர்த்து வந்தார்.


சமகால தோழர்கள், சகாக்கள், அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.


ஷா பஹ்லவி அரசனால் கட்டப்பட்ட பல பளிங் மாளிகைகள் உள்ளன. அவற்றில் குடியேறி, ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை இமாம் வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் அதில் விருப்பம் காட்டவில்லை. அவரது வீடு அடக்கமாகவும் எளிமையாகவும் இருந்தது. அவருடைய வாழ்க்கை முறை ஒரு ஏழை, எளிய மனிதரைப் போல் இருந்தது. ஒரு பெரிய தேசத்தின் பாரிய பொறுப்பை சுமந்துகொண்டு உலகத் தலைவர்களைச் சந்திப்பதில் ஈடுபட்டிருந்த நேரத்திலும் அவர் தன்னிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

 

அவரது சமூக நடத்தை, நீதி நிர்வாகம் மற்றும் விருப்பு வெறுப்பு அனைத்தும் இறை திருப்தியை நாடியதாகவே இருந்தன. இவ்வளவு பெரும் அதிகாரத்தைக் கொண்ட தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவர் ஏன் இப்படிப்பட்ட எழிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சிந்திக்கும் எந்த மனமும் ஆச்சர்யப்படும்.


மறைந்த இமாமின் இறை பக்தி, அவரது தனிப்பட்ட நடத்தை மற்றும் சக்திவாய்ந்தவராக இருந்தபோது அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவர் பணிவு மற்றும் அவர் செய்த இறை வழிபாடுகள் தனித்துவமானது. இது அவரது ஆன்மீக முதிர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.


இமாமின் ஆன்மீக நிலைகள், அவரது ஏகத்துவ புரிதல், அவரது வழிபாட்டுச் செயல், இறைவனுடனான அவரது நெருக்கம் மற்றும் அவரது தூய்மை ஆகியவை உண்மையில் சாதாரண மனிதர்களால் இலகுவில் அடைய முடியாத உச்சமாகும்.

 

ஷியா மற்றும் சன்னி அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத அறிஞர்கள் உட்பட அனைத்து சிறந்த அறிஞர்களும் மறைந்த இமாமின் ஆளுமையின் இந்த பகுதியைப் புரிந்துகொள்வது கடினம் என்று கூறியுள்ளனர்.


மறைந்த இமாமின் வாழ்க்கையின் இந்தப் பகுதியும், அவரது உன்னதமான, அறிவு ரீதியான செயல்பாடுகளும் அனைவரின் கண்களையும் கவர்ந்த போதிலும், அவரது வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. இது அவருடைய ஆன்மீக பக்குவ நிலையை எடுத்துக்காட்டுகிறது.

 

நீதி நிர்வாகம்

நீதியை நிலைநாட்டுவதில் அவர் எப்போதும் உறுதியுடன் இருந்தார். தேசத்தின் மீது திணிக்கப்பட்ட போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் போன்ற கடினமான சோதனைகளை எதிர்கொண்ட போதிலும் அவர் பொறுமையுடனும் தைரியத்துடனும் அவற்றை எதிர்கொண்டார் என்பது எல்லா நிகழ்வுகளிலிருந்தும் தெளிவாகிறது.

 

மறைந்த இமாம் தனது நிகழ்வு நிறைந்த வாழ்க்கையில் சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினார். அவர் எப்போதும் நீதியையும் ஒற்றுமையையும் மிக உயர்ந்ததாகக் கருதினார், மேலும் அவர் கவனம் செலுத்திய விஷயங்களில் இவை மிக முக்கியமானவை. இந்த மாபெரும் தலைவரிடமிருந்து முஸ்லிம் உலகம் கற்க பெரும் பாடங்கள் உள்ளன.

 

முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு முக்கிய முன்னுதாரணம்

இன்றைய காலகட்டம் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு படிப்பினைகள் நிறைந்தது. இஸ்லாமிய உலகத் தலைவர்கள் இமாமின் இந்தப் படிப்பினைகளைப் பின்பற்றினால், நிச்சயமாக அவர்கள் செழிப்பு, சுயமரியாதை, பாதுகாப்புப் பாதையை நோக்கிச் செல்வார்கள். "கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம்" என்ற கொள்கையில் இமாம் உறுதியாக இருந்தார். இஸ்லாமிய உலகு இழந்த கண்ணியத்தை மீண்டும் பெற வேண்டுமானால் இமாமின் வாழ்விலிருந்து பாடம் கற்க வேண்டும்.

 

இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமை

இஸ்லாமிய சமுதாயம் எல்லா காலங்களிலும் அநீதிக்கு ஆளாகியிருக்கிறது. இது முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையின்மை, முரண்பாடு மற்றும் மோதல்களால் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையாகும். இந்த கசப்பான உண்மைகளால் இஸ்லாமிய உலகம் இன்றளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் வரலாற்றை - குறிப்பாக சமீபத்திய நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் வரலாற்றை நீங்கள் எவ்வளவு அதிகமாகக் ஆராய்கிறீர்களோ, அவ்வளவு தெளிவாக இந்த உண்மைகளை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.

 

இமாம் கொமெய்னி (ரஹ்) எப்போதும் நீதியை வலியுறுத்தினார், மேலும் அவர் அதை தீர்க்கமாக பின்பற்றவும் செய்தார். அவர் இறைவனுக்காகவும், இஸ்லாத்துக்காகவும், முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும் தனது சொந்த நலனில் கவனம் செலுத்தவே இல்லை. அவர் எவருடனும் மோதலில் ஈடுபட விரும்பவில்லை. அவர் எப்போதும் இஸ்லாமிய உம்மத்தையும் இஸ்லாமிய உலக ஒற்றுமையையும் மதிப்பவராக இருந்தார்.


இஸ்லாத்தின் எதிரிகள் பல்வேறு முஸ்லிம் குழுக்களிடையே கருத்து வேறுபாடுகளைத் தூண்ட முயற்சிக்கின்றனர், இதற்காக அவர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகிறார்கள். இவையெல்லாம் முஸ்லிம் உலகம் அறிந்திருக்க வேண்டிய உண்மைகள்.


இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபிஅல்-அவ்வல் 12 முதல் 17 வரையிலான நாட்களை இஸ்லாமிய ஒற்றுமை வாரமாக இமாம் கொமேனி அறிவித்தார். இந்த வாரத்தில் உலகம் முழுவதிலுமிருந்து வரும் அறிஞர்கள் இஸ்லாத்தின் அனைத்து சிந்தனைப் பள்ளிகளிலிருந்தும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், இஸ்லாமிய உலகின் தற்போதைய நிலைமையைப் பற்றி சிந்திக்கவும் அழைக்கப்படுகிறார்கள்.

இஸ்லாமிய உலகின் இன்றைய.தேவை ஒற்றுமை

        - தாஹா முஸம்மில்

No comments

Powered by Blogger.