பஸ்சை கட்டி பிடித்து அழுத டிரைவர்- சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
இந்தியா - கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது57). இவர் பண்ருட்டி அரசு பணிமனையில் உள்ள பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக பண்ருட்டியில் உள்ள பணிமனையில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வந்தது.
ஆனால் டிரைவர் அய்யப்பனுக்கு பணிமனை அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அடிக்கடி ஆப்சென்ட் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதி சம்பளம் பெற முடியாமல் அய்யப்பன் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் 6 நாள் முழுவதும் வேலைக்கு வந்தும் வருகை பதிவேட்டில் 6 நாளும் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அய்யப்பன் பணிக்கு வந்தார். அப்போது வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கிளை மேலாளரிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் கேட்ட போது அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அய்யப்பன் திடீரென தான் ஓட்டும் பஸ்சை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ் டிரைவருக்கு வருகை பதிவேட்டில ஆப்சென்ட் போடப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து ஊழியர்களின் நலன் காக்க வேண்டும் என அய்யப்பன் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு பஸ்சை டிரைவர் கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment