Header Ads



அணு ஆயுதங்கள் பெலாரஸுக்கு அனுப்பிவைப்பு


உக்ரைன் போரில் தேவைப்படும்போது பயன்படுத்த ஏதுவாக முதல் தொகுதி அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார்.


கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்தப் போர் நீடித்து வருகிறது. அவ்வப்போது தாக்குதல்களை இருதரப்பும் தீவிரப்படுத்துகின்றன. அந்த வகையில் அண்மையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையான கக்கோவ்காவை ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டப்பட்டது. அணையிலிருந்து பெருமளவு தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். அணை தகர்ப்பு தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன.


இந்நிலையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பொருளாதார கூட்டமைப்பில் உரையாற்றிய அதிபர் புதின், முதல் தொகுதி அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.


அந்நிகழ்ச்சியில் புதின் பேசுகையில், "இப்போதைக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும்.


இருப்பினும் பெலராஸ் நாட்டுக்கு முதல் தொகுதி அணு ஆயுதங்களை அனுப்பிவைத்துள்ளோம். முழுமையாக இந்தக் கோடை முடிவதற்குள் அனுப்பிவைப்போம். பெலாரஸுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேற்குலகுக்கு ஒருவித எச்சரிக்கை. அவர்கள் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளட்டும். உக்ரைனில் இதுவரை ரஷ்யப் படைகள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. ஆனால் உக்ரைன் படைகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. ரஷ்யப் படைகளை எதிர்கொள்ளும் சக்தி அவர்களுக்கு இல்லை" என்றார்.


பெலாரஸ் நமது நட்பு நாடு. கடந்த பிப்ரவரியில் உக்ரைன் மீதான முதல் தாக்குதல் தொடங்கப்பட்ட பின்னர் பெலராஸில் உள்ள ஏவுதளத்தை ரஷ்யா முக்கியமான தளமாகப் பயன்படுத்தி ஏவுகணைகளை ஏவி வருகிறது. இந்நிலையில், முதல் தொகுதி அணு ஆயுதங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.