Header Ads



முசம்மில், வீரவன்ச ஆகியோருக்கு நீதிபதியின் எச்சரிக்கை


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கு நீதிமன்றத்தால் இன்று(19) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகம் இளவரசர் செய்ட் அல் ஹுசைன் 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த போது, கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையூடாக பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன டி அல்விஸ் முன்னிலையில் இன்று(19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


வழக்கின் முதலாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விமல் வீரவன்ச இன்று(19) மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.


வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான வீரகுமார திசாநாயக்கவும் இன்று(19) மன்றில் ஆஜராகாத போதிலும், அவர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகி மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தனர்.


வழக்கின் ஏனைய பிரதிவாதிகளான மொஹமட் முசம்மில், ஜயந்த சமரவீர, ரோஜர் செனவிரத்ன, பியசிறி விஜேநாயக்க ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.


வழக்கு அழைக்கப்படும் அனைத்து நாட்களிலும் பிரதிவாதிகள் ஒருவருக்கு ஒருவராக, மாறி மாறி மன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கை விசாரணை செய்வதற்கு உரிய தினத்தை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நீதவான் இதன்போது அறிவித்துள்ளார்.


பிரதிவாதிகள் வழக்கில் ஆஜராகாமல் புறக்கணிப்பாளர்களாயின், அனைத்து சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைத்து வழக்கு விசாரணையை நடத்த நேரிடும் என பகிரங்க நீதிமன்றத்தில் நீதவான் அறிவித்துள்ளார்.


வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.