சவூதி அரேபியாவும், இலங்கையும் 60 துறைகளில் ஒன்றிணைய ஒப்பந்தம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையும், சவூதி அரேபியாவும் தங்களுக்கிடையிலான அரசியல் புரிந்துணர்வு மற்றும் நட்புறவினை 60க்கும் மேற்பட்ட துறைகளில் பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கிடையில் அண்மையில் இடம் பெற்ற சந்திப்பில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது.
இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் சவூதி அரேபியா ரியாத் நகரில் சவூதி அரேபிய பிரதிநிதிகளுடன் இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு சவூதி அரேபியாவின் மனித வள பிரதியமைச்சர் கலாநிதி அப்துல்லா அபு துனைன் மற்றும் இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பால சூரிய ஆகிய இருவரும் இணைத் தலைமை வகித்தனர்.
சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவு மேலும் பலமடைந்து வருகின்றமை பெரிதும் மகிழ்ச்சிக்குரியதாகும் என இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான இணை அங்கத்தவர்கள் குழு 63 துறைகளில் ஒன்றிணைந்து அபிவிருத்திக்காக செயற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. அரசியல் ரீதியான புரிந்துணர்வு இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொடர் பேச்சு வார்த்தைகளுக்கு வழிவகுக்கும் எனவும் இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். சர்வதேச அரங்கில் சவூதி அரேபியா பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்கின்றமையை காணக்கூடியதாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பிட்ட இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான கூட்டம் இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதாரம்,வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாசாரம், விளையாட்டு, விவசாயம், மனிதாபிமான செயற்றிட்டங்கள் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் என இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் மற்றும் அரசியல் உறவில் இந்த உடன்படிக்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு வழி சமைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கு மிடையிலான நல்லுறவு உச்ச நிலையை எய்தியுள்ளதெனவும் இரு நாடுகளும் தங்களுக்குள் சர்வதேச ரீதியில் ஒத்துழைப்புகளைப் பரிமாறிக்கொள்கின்றன எனவும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பக்கீர் மொஹிதீன் ஹம்ஸா தெரிவித்தார்.– Vidivelli
மேலே உள்ள சிறீலங்கா - சவூதி அரேபியா நல்லுறவு ஓங்குதல், இருதரப்பு ஒப்பந்தங்களில் 63 துறைகளில் ஒப்பந்தம் கைச்சாத்து. இவை நீண்ட நாட்களில் எந்தப் பயனுமற்ற வெறும் இராஜதந்திர பேச்சுக்கள் மட்டும்தான் .இலங்கை வௌிநாட்டு அமைச்சு ஏதாவது ஓரிரண்டு உத்தேச திட்டங்களை முன்வைத்து அவற்றுக்கு போகும் செலவைச் சரியாக குறிப்பிட்டு உதவி வேண்டினால் அதை எமக்குச் சார்பாக கவனிப்பார்கள். அது தவிர சவூதி அரேபிய இராஜதந்திர பேச்சுக்களில் எந்தப்பயனுமில்லை. இலங்கை அதிகாரிகள் இராஜதந்திர வசனங்களையும் பிரயோகங்களையும் சவூதி அரேபிய அதிகாரிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வார்த்தைகளும் பரஸ்பர உறவுகளும் ஒரு சதத்துக்குப் பிரயோசனமில்லை என்பதை எனது சொந்த அனுபவம் மூலமாக கூறிவைக்க விரும்புகின்றேன்.
ReplyDelete