Header Ads



நீர்மூழ்கி 'வெடித்து' 5 பேரும் இறந்தது எப்படி..? உடல்கள் மீட்கப்படுமா..? தாவூத்தின் குடும்பம் பற்றி வெளியான தகவல்


111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.


டைட்டானில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது


இது அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன.


வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது. இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறியது.


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியது.


ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ROVs) தளத்தில் இருக்கும் என்றாலும், அடுத்த 24 மணிநேரத்தில் தேடுதல் பணி படிப்படியாக நிறுத்தப்படுகிறது.


எப்படி விபத்து நடந்தது?

அமெரிக்க கடலோரப்படையின் ரியர் அட்மிரல் ஜான் மௌகரின் கூற்றுப்படி, அவர்கள் கண்டறிந்தது ஒரு "பேரழிவு வெடிப்பு" நடந்திருப்பதைக் காட்டுகிறது.


ஏனென்றால், இரண்டு பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒன்று டைட்டனின் வால் கூம்பு மற்றும் மற்றொன்று அதன் தரையிறங்கும் சட்டகம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது கப்பல் சிதறியதாகக் தெரிய வருகிறது.


இது ஏன் நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை கிடைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று மீட்புக் குழு நிபுணர்கள் கூறுகிறார்கள்.


"கருப்புப் பெட்டி எதுவும் இல்லை, எனவே கப்பலின் கடைசி நகர்வுகளை உங்களால் கண்காணிக்க முடியாது," என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால் விசாரணையின் செயல்முறை விமான விபத்து போன்றதாக இருக்காது.


புலனாய்வாளர்கள் கிடைத்திருக்கும் துண்டுகளை மேற்பரப்பிற்கு கொண்டு வந்ததும், அந்த கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் அதை ஆய்வு செய்வார்கள்.


நீர்மூழ்கியின் பாகங்கள் நுண்ணோக்கின் கீழ் கவனமாக ஆராயப்படும். எந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டது, பிளவு எங்கே தொடங்கியது என்பது அதன் மூலம் கண்டுபிடிப்பார்கள்.


தந்தைக்காக நீர்மூழ்கியில் சென்ற மகன்


நீர்மூழ்கியில் சென்று உயிரிழந்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடங்குவார்கள்.


பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் பாகிஸ்தானின் பணக்கார குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். இவர் தனது மகன் சுலைமானுடன் நீர்மூழ்கியில் பயணம் செய்தார்.


தாவூத் தனது மனைவி கிறிஸ்டின் மற்றும் மகள் அலினாவுடன் தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிட்டனில் வசித்து வந்தார். நீர்மூழ்கியில் செல்வதற்கு முன்பு இவ்ரகள் குடும்பம் கனடாவில் ஒரு மாத காலம் தங்கியிருந்தது.


ஷாஜதா ஒரு பெரிய உர நிறுவனமான என்க்ரோ கார்ப்பரேஷன் என்ற பாகிஸ்தானின் கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.


அவர் தனது குடும்பத்தின் தாவூத் அறக்கட்டளை மற்றும் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட SETI இன்ஸ்டிடியூட் உடன் பணிபுரிந்தார். இது ஏலியன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம்.


ஷாஜதா மூன்றாம் சார்லஸ் அரசால் நிறுவப்பட்ட இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்பவராகவும் இருந்தார். அரண்மனையில் இருந்து அவருக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


ஷாஜதாவின் குடும்பத்தினர், அவர் "வெவ்வேறு இயற்கை வாழ்விடங்களை" ஆராய்வதில் ஆர்வமாக இருந்ததாகவும், இதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆக்ஸ்போர்டு யூனியன் ஆகிய இரண்டிலும் பேசியதாகவும் கூறினார்.


அவர் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவிலும், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.


அவரது மகன் சுலேமான் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார், அங்கு அவர் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் தனது முதல் ஆண்டை முடித்திருந்தார்.


நீர்மூழ்கிப் பயணம் குறித்து பயங்கரமானதாக உணர்ந்ததாகவும், எனினும் தனது தந்தையின் மகிழ்ச்சிக்காக அவருடன் சென்றதாகவும் சுலேமானின் அத்தை தெரிவித்திருந்தார். BBC

No comments

Powered by Blogger.