சகல கட்சிகளும் இணைந்தாலும் 50 % பலத்தை பெற முடியாது, தேர்தலுக்காக ஒன்றுபடுவதை நிறுத்துங்கள்
தற்போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற "2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதால் நெருக்கடியிலிருந்து இலங்கை முற்றாக மீண்டுவிட்டது என்று கருத முடியாதென வலியுறுத்திய ஜனாதிபதி இந்தச் செயன்முறையின் வெற்றிக்கு எதிர்காலத்தில் பாரிய அர்பணிப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.
கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக இலங்கை முன்னொருபோதும் காணாத பொருளாதார நெருக்கடியை கண்டதென தெரிவித்த ஜனாதிபதி, அந்த நெருக்கடியிலிருந்த மீண்டு வருவதற்கான முயற்சிகளை தாம் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்திருந்தமையையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
தேசிய சட்ட மாநாட்டில் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் பற்றி ஆராயப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்காக நுவரெலியா தெரிவு செய்யப்பட்மையும் பொருத்தமானதென கருதுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கோப்பி நடுகை மற்றும் பெருந்தோட்ட பொருளாதாரத்தை ஆரம்பித்து வைத்தவர்களின் முன்னோடியாக திகழ்ந்த ஆளுநர் எட்வட் பான்ஸ் அவர்களுக்கும் நுவரெலியாவில் வீடொன்று காணப்பட்டது.
கடந்த 10 – 11 மாதங்களுக்கு முன்பாக வலுவிழந்த நாடாக மாறிவிடும் வகையிலான நிலைமைகளை கடந்து வந்துள்ளோம். எவ்வாறாயினும் தற்போது சட்டம் ஒழுங்கு , அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மையும் உருவாகியுள்ளது. இந்த நிலைத் தன்மை குறுகிய காலத்திற்குரியது என்பதால் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை உணர வேண்டும்.
முன்னருபோதும் காணாத வகையிலான சவாலை இந்நாட்டின் பொருளாதாரம் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக கண்டிருந்தது. இருப்பினும் சட்டம் ஒழுங்கு , அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் அர்பணிப்புடன் முன்னெடுத்திருந்தாலும் நாடு நெருக்கடியிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதென கூற முடியாது.
தற்போதும் பெரும்பாலான பொதுமக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.
பாராளுமன்றம், நீதிமன்றம், ஊடகம், தனியார் துறை,தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள், நமது நாட்டின் பொதுமக்கள் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்பு மீதான நம்பிக்கை முற்றாக இழந்துள்ளனர். என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
Post a Comment