Header Ads



தாடி விவகாரம் - ஜூலை 4 வரை பரீட்சை நடாத்தக் கூடாதென நீதிமன்றம் உத்தரவு (வீடியோவுடன் முழு விபரம்)


தாடி வைத்திருந்தமைக்காக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு பீடத்தைச் சேர்ந்த மாணவன் நுஸைக், இரண்டு விரிவுரையாளர்களால் தாடியை மழிக்கும் வரைக்கும் விரிவுரைகளுக்கு வரமுடியாது என்றும், எதிர்வரும் பரீட்சையை எழுதமுடியாதென்றும் அறிவித்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்ற முதலாம் திகதி முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.


சென்ற 13ம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட இம்முறைப்பாட்டில், பல்கலைக்கழகம் சார்பாக பீடாதிபதி மட்டும் பிரதி துணை வேந்தர் ஆஜராகியிருந்தனர். குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான சட்டமுதுமானி முகைமின் காலித் மற்றும் சட்டத்தரணி உவைஸ் ஆகியோர் மாணவன் நுசைக் சார்பில் ஆஜராகியிருந்தனர்.

(வீடியோ)

விசாரணை இறுதியில் மாணவனை தாடி வைத்தவாறே, பரீட்சை எழுத அனுமதிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் பிரதிவாதிகள் பீடக் கூட்டத்தில் முடிவெடுத்தே சொல்ல வேண்டும் என்று பதிலளித்திருந்தனர்.


எதிர்வரும் திங்கட்கிழமை (19) மாணவனைப் பரீட்சை எழுத நிர்வாகம் அனுமதிக்காது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று ( 15) இலங்கையின் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கட்டாணை ( WRIT) மனுவொன்றை மாணவர் தாக்கல் செய்திருந்ந்தார். குறித்த வழக்கு இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் மரைக்கார் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. மாணவர் நுசைக் சார்பில் ஜனாதிபதி  சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களும் அறிவுறுத்தல் சட்டத்தரணியாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களும் ஆஜராகி இருந்தனர்.


இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றப் பதிவாளருக்கு,  கிழக்குப் பல்கலைக் கழக துணை வேந்தர் குறித்த பீடத்தின் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து மாணவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பரீட்சை நடந்தால் மாணவர் நுசைக் பரீட்சையை எதிர் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நீதிமன்றிடம் முன்வைத்தார். அதனைச் செவியுற்ற நீதிமன்றம் எதிவரும் ஜூலை 4ம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வரும் வரைக்கும் மாணவர் நுசைக் அவர்களின் பீடப் பரீட்சை நடாத்தப்படக் கூடாது என பல்கலைக்கழகத்தை அறிவுறுதியிருக்கிறது.


குறிப்பிட்ட விடயம் நீதிமன்றப் பதிவாளரினூடாக கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு அறிவிக்கப்பட்டிமிருக்கிறது. அதனடிப்படையில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சை எதிர்வரும் ஜூலை 4ம் திகதி வரைக்கும் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது.


குரல்கள் இயக்கம் மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு அமைப்பாகும். இவ்வழக்கில் மிகவும் வேகமகவும் துரிதமாகவும் குரல்கள் இயக்கம் செயற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.