பொலிஸ் நிலையத்திற்குள் மக்கள் நுழைய முயன்றதால் பதற்றம் -38 முறை வானத்தை நோக்கிச் சுட்ட பொலிஸார்
ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு இரவு ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவொன்று பிரவேசிக்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து தெரியப்படுத்தப்பட்ட போதிலும், அந்த கும்பல் கலவரம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
அத்துடன், மேலும் ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலை உடைத்து பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
பெரும்பாலானோர் மது அருந்திக் கொண்டிருந்ததை பொலிஸார் அவதானித்ததையடுத்து, அங்கிருந்த சிலர் பொலிஸார் மீது கற்களை வீசியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் குழுவின் கலகத்தனமான நடத்தைக்கமைய, பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் கடமையில் இருந்த அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 38 முறை வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், கலவரக்காரர்கள் பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்துவிட்டு, ஹகுரன்கெத்த-கண்டியூர பிரதான வீதியில் ஏறக்குறைய ஒரு மணிநேரம் தங்கியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
சம்பவத்தினால் உயிர் சேதம் அல்லது காயம் ஏற்படவில்லை. எனினும், பொலிஸாரின் பிரதான வாயில் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
குழப்பத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஹகுரன்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹகுரன்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியதிலகபுர பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹகுராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக அவரை சிறையில் அடைத்தனர். குற்றத்துடன் தொடர்புடைய மேலும் 8 சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு குறித்த குழுவினர் இவ்வாறு நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment