Header Ads



மணக்கும் முஹம்மத் நபிகளாரின் صلى الله عليه وسلم மண்ணறை - 2 பேரின் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்


நான், ஒரு நாள் காலைவேளையில் லண்டன் V&A நூதனசாலையில் இஸ்லாமிய கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த விசாலமான ‘சில்க்’ – பட்டுத்துணிகளின் முன்னால் நின்றுகொண்டிருந்தேன். அது 1800 களில் கண்ணியம் நிறைந்த கஹ்பாவை மூடிய ‘கிஸ்வா’ திரைச்சீலை ஆகும். மிகவும் ஆச்சரியான அதன் வடிவமைப்பும் சிவப்பு நிற நூல் இழையினால் அதில் இழைகப்பட்டிருந்த அரபுவாசகங்களின் அழகும் என் உள்ளத்தை கொள்ளையிட்டது. பல நூறு வருடங்களாக ‘கஹ்பா’ வை போர்த்திய அத்துணி பச்சைவண்னத்தில் சிவப்பு நிற நூல்கொண்டு இழைக்கப்பட்டிருந்தது,பிற்காலத்தில் ‘கிஸ்வா’ துணி கருப்புவண்னத்தில் நிறத்தில் தங்கம்,வெள்ளி நிறங்களில் உருவாக்கப்பட்டது.

V&A நூதனசாலையில் பச்சை நிறத்தில் இன்னும் இரண்டு விசாலமான பட்டுத்துணிகள் இருந்தது.அவைகள்  இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) صلى الله عليه وسلم அவர்களின் ‘கப்ரை’ - AL-QABR AL-SHARĪF – ஐ மூடிய துணிகள் ஆகும்.அவைகளில் ஒன்று 1517-1600 இடைப்பட்ட காலத்திலும், மற்றையது 1600-1700 இடைபட்ட காலத்திலும் இறைத்தூதரின் மண்ணறையை மேலால் போர்த்திய துணிகள் ஆகும்.

அப்பாசியர்களின் ஆட்சிக்காலத்தில் இத்துணிகள் எகிப்தில் நெசவு செய்யப்பட்டது. உதுமானியரின் ஆட்சிக்காலத்தில் கஹ்பாவின் உட்புர அழங்காரத்துணியும் இறைத்தூதரின் மண்ணறையை மூடுவதற்கான துணியும் துருக்கியிலும் கஹ்பாவை மூடுவதற்கான ‘கிஸ்வா’ துணி எகிப்திலும் உருவானது.சவுதி அரேபியாவை ஸ்தாபித்த அப்துல் அஸிஸ் அப்துல் ரஹ்மான் அல் சவுத்,அவரின் காலத்திலிருந்து இத்துணிகள் மக்காவிலேயே தயாராகிறது.

அரபு ஊடலவியலாளர் ஒமர் அல் மித்வாகி அவர்கள் இரண்டு புனிதத்தளங்கள் பற்றியும் கட்டுரைகளை எழுதியவர். அவர் ரசூலுல்லாஹ்வின் மண்ணறை தொடர்பாகவும் ஆச்சரியமான செய்திகளை எழுதினார். ஒமர் அல் மித்வாகி அவர்களுக்கு முஹம்மத் (ஸல்) அவர்களின் கப்ரை கடைசியாக மூடி அலங்கரித்த இருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உடன் அவர்களின் அனுபவத்தை கேட்டு கோவைப்படுத்தினார். 

அந்நேர்காணலின்போது அல்லாஹ்வின் பேரன்புக்குரிய ரசூலின் மண்ணறையின் சூழலில் அவர்கள் கண்டு அனுபவித்த அற்புதங்களை எழுதிய கட்டுரையின் முதலிரு பந்திகளுமே நீங்கள் வாசித்தது.தொடர்ந்து ஒமர் அல் மித்வஹி சொல்வதைக்கேளுங்கள்;

“அப்போது நான் மக்காவில் இருந்தேன்,ஆகவே என்னால் இலகுவாக ‘கிஸ்வா’  தொழிற்சாலைக்கு போகமுடிந்தது.அதன்பின் எனக்கும் கிஸ்வா தொழிற்சாலையில் இருந்த அந்த இரண்டு வயதானவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பாக்ஷனை அப்படியே நினைவில் இருக்கின்றது. அவர்கள் நூலை கோர்த்தவண்ணம் இருக்கும்போது அவர்களுடன் பேச்சுக்கொடுத்தேன்.அங்கு சென்ற பின்னர்தான் இன்னுமொரு செய்தியும் எனக்கு தெரியவந்தது அதுதான் பெருமானாரின் மண்னறைக்கு தேவையான துணியை அங்கேதான் செய்கிறார்கள்”.

“நான் அவர்களை சந்தித்தபோதே அவர்கள் அப்புனிதப்பணியில் ஈடுபட்டு பலவருடங்கள் கழிந்திருந்தது. அதனால் நான் எனக்குக்கிடைத்த சந்தர்ப்பத்தை வீணாக்க விரும்பவில்லை,ஏனென்றால் அப்போழுதே அவ்விருவரின் இளையவருக்கு அறுபது வயதாகியிருந்தது,சில வேளை நான் தாமதப்படுத்தினால் அவர்களிடம் கேட்டு அதனை கோவைப்படுத்தமுன் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்துவிடுவார்களோ எனப்பயந்தேன்”.

“அவர்களுடனான சந்திப்பில் அவர்களின் கண்ணீரும் பாவமன்னிப்பும் கலந்த அவர்களின் உரையாடலை பதிவு செய்து கொண்டேன். சில சமயங்களில் மற்றவர்கள் தங்கள் தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசும்போது வார்த்தைகள் அவர்களைக் காட்டிக்கொடுக்கும், அவர்களின் உணர்ச்சிகள் அவர்களைத் திணறடிக்கும். அதுபோலவே இவர்களின் கைகால்கள் கால் நூற்றாண்டுக்கு முன்பு அன்றி நேற்று நடந்தது போல பசுமை நினைவை மீட்டும்போது நடுங்கின”.

“முதலில் தொழிற்சாலையின் தன்னியக்க நெசவுப் பிரிவின் தலைவராக இருந்த ஷேக் முஹம்மது அலி மதனி அவர்களை சந்தித்தேன். நபியவர்களது அறையின் நபிகளாரின் மண்ணறையை மூடுவதற்கான நெசவு செய்வதிலும் அதனை அங்கு கொண்டு சென்று பொருத்துவதிலும் கடைசியாக பங்கு பற்றியவர்களில் இவரும் ஒருவர் என்பதை அவரிடமிருந்து அறிந்து கொண்டேன். நான் அவரிடம், ரசூலுல்லாஹ்வின் அறையில் அன்னாரின் ‘கப்ர் அல் க்ஷரீப்’  மூடுதல் பணிபற்றிய அனுபவத்தை எனக்குச் சொல்லுங்கள் எனக்கேட்டேன். எங்கோ பொக்கிஷமாக சேமித்து வைத்திருக்கின்ற  நினைவுகளை கொண்டு வருவது போல் அவன் பார்வை வெகுதூரம் அலைந்தது. பின்னர் அவர் பதிலளித்தார்”.

“அன்றைய தினம், நான் என்றுமில்லாத வியப்பிற்குள்ளானேன், அது விசாலமான அறை.., மிகவும் விசாலமானது....,அதன் சரியான சுற்றளவு எனக்குத்தெரியாது ஆனால் 48 மீற்றர்கள் இருக்கலாம் எனத்தோன்றியது. அதன் சூழலை கண்டதும் எனக்கு பிரமிப்பு அதிகமானது, அங்கு  இருந்த எதுவும் என் கவனத்தை ஈர்க்கவில்லை.கூரையில் இருந்து தொங்கும் விளக்குகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது.அவைகள் பழங்காலத்தின் பள்ளிவாசலுக்கு பரிசாக வழங்கப்பட்டவை. ரசூலுல்லாஹ்வின் இன்னும் சில நினைவுச்சின்னங்கள் வேறு ஓருடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிந்தேன். அவை எங்கே என்று எனக்குத்தெரியவில்லை.ஆனால் சில வரலாற்றுப்பொருட்கள் பக்கத்தில் இருந்த சையிதா பாத்திமா நாயகியின் அறையில் அவர் வாழ்ந்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதை அறிவேன்”.

ஷேக் முஹம்மது அலி மதனி மேலும் தொடர்ந்தார்;

“பெருமானாரின் மண்ணறையை மூடும் துணி பச்சைநிற தூய பட்டினால் நெசவு செய்யப்பட்டு,வலுவான பருத்தித்துணியில் தைக்கப்பட்டிருக்கும்.அதில் மூன்றில் ஒருபகுதிக்கு சூறா அல் பாத்திஹாவை எம்பிராய்டரி மூலம் பருத்திநூல்,தங்கம்,வெள்ளிக்கம்பிகளினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பெருமானாரின் புனித அறையின் துணிகள் கஹ்பாவின் துணிகளை மாற்றுவதனைப்போன்று ஒவ்வொரு வருடமும் மாற்றப்படுவதில்லை.அவை இலகுவில் பழுதுபடுவதோ அழுக்காவதோ இல்லை,எனவே தேவைப்படும்போது மட்டுமே மாற்றப்படுகின்றது.தற்போது ‘கப்ர் அல் க்ஷரிப்’ இன் திறவுகோள் செய்க் நூரி முஹம்மத் அலி (முதவல்லி –KEY HOLDER) அவர்களிடம் உள்ளது”.

“அடுத்து தொழிற்சாலையின் எம்பிராய்டரி பிரிவின் தலைவர் ஷேக் அஹ்மத் சாஹிர்தியை சந்தித்தேன். அவர் மிகவும் வயதானவர், அவரது பார்வையும் மிகவும் பலவீனமானது என்பது எனக்கு புரிந்தது. அவர் என்னுடன் பேசத்தயாரானார்”.

ஷேக் அஹ்மத் சாஹிர்தி;

“நான் ரசூலுல்லாஹ்வின் மண்ணறையுள்ள அறைக்குள் நுழைந்த தருணத்தில் என் உணர்வுகளைப் பற்றி உங்களிடம் எப்படிப் பேசுவது... என்னால் முடியாது..... அது என் பேச்சுத் திறமைக்கு மேலான பேச்சு, இந்த அனுபவத்தைப் பற்றி ஒரு நாள் என்னிடம் கேட்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. மேலும் என்னால் அதை மீண்டும் கடந்து செல்ல முடியாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என விம்மினார்.

“ ‘என் கண்ணாடியில் உள்ள வில்லையைப்பாருங்கள்’ என அவர் அவரின் கண்ணாடியின் வில்லையின் தடிப்பத்தைக்காட்டி என்னிடம் பேசினார். ‘எனது தலைமுடியின் வெண்மையைப்பாருங்கள்,அது எனது வயதைச்சொல்லும்’ என தலைமுடியைக்காட்டினார். ‘எனது வயதை நான் கணிக்கவில்லை,நான் ஹிஜ்ரி 1333 (1917) இல் நான் பிறந்ததாக கூறக்கேட்டிருக்கின்றேன். இந்த நீண்ட ஆயுளில் எனது பொழுதுபோக்காக நான் அழகான மணத்தையும் வாசனைத்திரவியங்களையும் விரும்பியதைத்தவிர வேறு எதுவும் எனக்குத்தெரியாது.இந்த நீண்டகாலத்தை அதற்காகவே செலவு செய்தேன்.என் கொந்தளிப்பான அந்தப்பசியை போக்கமுயற்சித்தேன்.நான் அதற்காக நிறைய பயணங்கள் சென்றேன்.நிறையக்கற்றுக்கொண்டேன்.ஆனால் நான் இதை உங்களுக்கு உறுதியாகச்சொல்வேன். ‘வேறு யாரிடமும் நீங்கள் காணாத, வேறு யாராலும் உற்பத்தி செய்ய முடியாத எனது சொந்த சிறப்பு கலவைகள் என்னிடம் உள்ளன”.

"நான் இதனை ஏன் உங்களுக்குச்சொல்கின்றேன் என்றால், ரசூலுல்லாவின் அறைக்குள் நுழையும் அருள்பாக்கியம் கிடைத்தநாள் இரவில் அவ்வறைக்கதவுகள் திறக்கப்பட்டு, நாங்கள் அதற்குள் நுழைந்தபோது நான் இதுவரை சுவாசித்திராத வாசனையை சுவாசித்தேன், அப்போது என் இயலாமையையும் என் அறிவின் குறைபாட்டையும் நான் கண்டுகொண்டதால் இதைச் சொல்கிறேன். அந்த அற்புத நறுமணத்தின் ரகசிய  கலவையை நான் அறியேன்.அது வாசணைகளுக்கு எல்லாம் மேலான வாசணை. நிபுணத்துவம் வாய்ந்த மக்கள், வர்த்தகர்கள் இதுவரை அனுபவித்திராத வேறு ஒன்று."

இவ்விடத்தில் இறைத்தூதரின் மண்ணறை மணக்கின்றது எனபதிவான ஒரு சம்பவத்தையும் நான் கூறவேண்டும்.

கலீபா அல் வலித் இப்னு அப்துல் மலிக் அவர்கள் உம்மஹாதுல் மூமினீன்களின் வீடுகளை வாங்கினார்.அதன்பின் மதினாவின் ஆளுநராக இருந்த ஒமர் இப்னு அப்துல் அஸிஸ் அவர்களுக்கு அவ்வீடுகளை உடைத்து புணர்நிர்மானம் செய்து மதினாப்பள்ளிவாசலை விஸ்தரிக்குமாறு கூறினார். முதலாவது அறையை உடைத்தபோது மண்ணினால் மூடப்பட்டிருந்த மூன்று மண்ணறைளையும் வெளியே இருந்து காணக்கூடியதாக இருந்தது. அப்துல்லாஹ் இப்னு உகைல் பின்வருமாறு கூறுகின்றார்;

“ஒரு மழைநாள் இரவு நான் அல் முஹீரா இப்னு சூபா அவர்களின் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது நான் அதுவரை அனுபவித்திராத வாசனையை நுகர்ந்தேன். நான் நேராக மஸ்ஜித் நபவிற்குச்சென்றேன். வாசணை இறைத்தூதரின் அடக்கப்பட்டிருந்த மண்ணறைகளில் இருந்தே வந்தது. அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த மண்ணறையின் மேற்குப்புறம் சரிந்திருந்தது. நான் திறந்திருந்த பகுதியை மூடினேன்”.

ஒமர் அல் மித்வஹி தொடர்கிறார்;

இறைத்தூதரின் அறையை எனக்கு விவரிக்கும்படி நான் அவரிடம்(ஷேக் அஹ்மத் சாஹிர்தி)) கேட்டபோது, லேசான குளிர் அவரைத் தாக்கியது போன்று அவரின் உடல் சிலிர்த்தது. அவர் மெல்லிய குரலில் கூறினார்:

"அவ்வறை 11 மீட்டர் உயரமானது என நினைக்கின்றேன். பச்சைக் குவிமாடத்தின் கீழே இன்னொரு குவிமாடமும் உள்ளது அதில் ‘இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் கல்லறை’ என எழுதப்பட்டுள்ளது. கலீபா அபூபக்ர் (ரலி), கலீபா உமர்(ரலி) ஆகியோரின் கல்லறைக்குப்பக்கத்தில் வெற்றிடமான ஒரு கல்லறையும் இருக்கின்றது. இவற்றிற்குப்பக்கத்தில் செய்யிதினா பாத்திமா நாயகி அவர்கள் வாழ்ந்த வீடு இருக்கின்றது”.

“குவிமாடத்தை எப்படி துப்புரவு செய்வது என எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. எங்கள் விரல்கள் நடுங்கியது. இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. எங்கள் பணியை முடிப்பதற்காக இஷாத் தொழுகைக்குப்பின் ஆரம்பித்து பஜ்ரின் முதல் அதான் வரை 14 முழு இரவுகள் வேலை செய்தோம். அந்த புனிதமான இடத்தில் ஒட்டியிருந்த தூசி, புறா இறகுகள்,கழிவுகள் அனைத்தையும் சுத்தம் செய்தோம். அப்போது குவிமாடத்திற்குள் புறாக்கள் வந்துபோக வாய்ப்பிருந்தது.இந்நிகழ்ச்சி 1971ம் ஆண்டிற்கு முன் இடம்பெற்றது. ஏற்கனவே இருந்த மூடுதுணி 75 வருடங்கள் பழைமையானது. அதன் பிறகு இன்னும் மாற்றப்படவில்லை”.

“மஸ்ஜித் நபவியின் முக்கியஸ்தர்களின் ஒருவரான செய்யித் ஹபீப் அவர்களும் நானும் அதனுள் முதலில் நுழைந்தோம். நாங்கள் 13 ஆண்கள், அவர்களில் பெரும்பாலோர் எனக்கு நினைவில் இல்லை”.

 “அவ்வறையின் சாவியை வைத்திருப்பவரும் இன்னும் சில ஊழியர்களும் எங்களுடன் இருந்தனர். நாங்கள் கண்ணியம் கருதி கிசுகிசுத்தோம்,ஏனென்றால் சமிக்ஞை தொடர்பாடலுக்கு போதாமல் இருந்தது. அப்போதும் நான் பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன், அந்த நாட்களிலும் இந்த கண்ணாடிகள் என் கண்களை விட்டு அகலவில்லை, ஆனால் அந்த அறையில் நான் வேறொரு நபராக இருந்தேன். வித்தியாசம் எனக்கு தெளிவாகத் தெரிந்தது”.

“அந்த மெல்லிய வெளிச்சத்திலும் கண்ணாடி இல்லாமல் ஊசிற்கு நூல் கோர்த்தேன்,அதனை எவ்வாறு புரியவைப்பது? நான் ஒவ்வாமை – allergy -  நோயினால் அவதிப்பட்டேன்,இப்போதும்தான்,ஆனால் அதனுள் எனக்கு எந்தவித ஒவ்வாமையும் இருக்கவில்லை. காற்றில் சிறிது தூசு இருந்தாலும் மோசமாக தும்முவேன், ஆனால் அதற்குள் மண்டியிருந்த தூசினால் எனக்கு ஒவ்வாமை வெளிப்படவில்லை. நான் ஒரு இளைஞனைப்போல எனக்கு இளமை திரும்பிவிட்டதைப்போல அவ்விரவுகள் அமைந்தன”.

“ இன்னுமொரு ஆச்சரியமும் எனக்கு ஏற்பட்டது. அங்கிருந்து அகற்றிய பழைய போர்வையை வெளியே கொண்டுவரவேண்டியிருந்தது. அது 36 மீற்றர் நீளமானது. நான் அவர்களிடம் அதை மடித்து வைக்குமாறு கூறினேன். நான் அதனை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.அதன் பாரத்தை அப்போது என்னால் உணரமுடியவில்லை. பிறகு அதனை ஐந்து இளைஞர்கள் சேர்ந்து தூக்கிச்செல்ல முயற்சித்தபோதும் அவர்களால் முடியாமல் போனது”.

இதனை சொல்லி முடிக்கும்போது ஷேக் அஹ்மத் சாஹிர்தி மெதுவாக அழுதார்.பின்னர்; “அங்கே நின்றவர்கள் என்னிடம் ‘இதை இங்கே யார் கொண்டு வந்தார் என்றபோது நான் என்றேன்,மேலும் அரபு எழுத்தணிக்கலைஞர் அப்துல் ரஹீம் புஹாரி இடம் கேட்டுப்பாருங்கள் என்றேன்”.

AKBAR RAFEEK



No comments

Powered by Blogger.