Header Ads



முஸ்லிம் லீக் மதச்சார்பற்றது, மரணத்திற்கு நான் அஞ்சவில்லை, 1500 Km நிலம் சீனாவினால் ஆக்கிரமிப்பு, மோடி கண்டுகொள்ளவில்லை


 பாட்டி, தந்தை கற்றுக் கொடுத்த பாடத்தின்படி நான் மரணத்தை கண்டு அஞ்சவில்லை என்று அமெரிக்காவில் நடந்த கலந்துரையாடலில் ராகுல்காந்தி கூறினார். அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாஷிங்டன் டிசியில் உள்ள நேஷனல் பிரஸ் கிளப்பில் நடந்த கலந்துரையாடலின் போது அவர் கூறுகையில், 


‘இந்தியா – சீனா இடையேயான இன்றைய சூழ்நிலை மிகவும் கடினமானதாக உள்ளது. அவர்கள் நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. அதாவது டெல்லிக்கு இணையான நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது உண்மை, மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்விசயத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், பிரதமர் மோடி இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது, அதிகமான மக்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது. ஆனால் அதற்கான வழிமுறைகளை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவின் அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் ஆளும் பாஜக அரசு கைப்பற்றி உள்ளது.


எனக்கு எதிராக வரும் கொலை மிரட்டல்களை கண்டு நான் அச்சப்படவில்லை. எல்லோரும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். என்ன நடந்தாலும் பின்வாங்க கூடாது என்பதை என் பாட்டி (இந்திரா காந்தி), என் அப்பா (ராஜிவ் காந்தி) ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்’ என்றார். 


முன்னதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது ராகுல் கூறுகையில், 


‘கேரளாவில் முஸ்லீம் லீக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது குறித்து கேட்கின்றனர். என்னை பொறுத்தவரை முஸ்லிம் லீக் கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சி. எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். எதிர்காலத்தில் இன்னும் பல கட்சிகள் ஒன்று சேரும். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ளும். அதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்று கூறினார்.

No comments

Powered by Blogger.