வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி, 130 இலட்சம் ரூபாயை மோசடி செய்த பெண் கைது
- டி.கே.ஜீ.கபில் -
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, 130 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலந்து நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியே இவ்வாறு மோசடியில் அப்பெண் ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிராக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த போதே, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தில் வைத்து, வெள்ளிக்கிழமை (30), குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான அந்தப் பெண், பத்தரமுல்லையை வசிப்பிடமாகக் கொண்டவர்.
போலந்துக்கு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாகக் கூறி, இந்த பணத்தை மோசடி செய்துள்ளதுடன், கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டு அவற்றை சட்டவிரோதமான முறையில் அப்பெண் தம்வசம் வைத்துக்கொண்டுள்ளார்.
அப்பெண்ணினால் கொண்டு நடத்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம், சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் தடைச் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு எதிராக கடுவளை நீதவான் நீதிமன்றத்தால் விமானப் பயணம் தடைச்செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அந்தப் பெண், இந்தியாவில் இருந்து வௌ்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இலங்கைக்குத் திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அப்பெண், கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, ஜூலை 4 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment