Header Ads



வேலை வழங்குவதாக கூறி 100 மில்லியன் ரூபாய் மோசடி


ஐரோப்பிய நாடுகளில் வேலை வழங்குவதாக உறுதியளித்து வேலை தேடுபவர்களிடம் இருந்து 100 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிதி மோசடி செய்த ஒருவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபரால் 50க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


கனடா, நெதர்லாந்து அல்லது சுவிட்சர்லாந்தில் வேலை பெற்று தருவதாக கூறி 500,000 ரூபா முதல் ஒரு மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்ட பணத்தை பெற்றுக் கொண்டதாக ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


சந்தேக நபர் பணத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் பல்வேறு காரணங்களை முன்வைத்து 1½ வருடங்களுக்கும் மேலாக செயல்முறையை தாமதப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.


சந்தேகநபருக்கு எதிராக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தில் மாத்திரம் 15க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சந்தேகநபருக்கு எதிராக 30 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், சந்தேக நபர் பல பிரதேசங்களில் இவ்வாறு பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.


மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபரை மிரிஹான மடிவெலவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.