தாக்குதலின் பின் முதல்முறை பொதுவெளியில் சல்மான் ருஷ்டி
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான, பிரிட்டிஷ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி முதல்முறை பொதுவெளியில் தோன்றியுள்ளார்.
நியூயோர்க் காலாவில் கடந்த வியாழக்கிழமை (18) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் ருஷ்டி பங்கேற்றிருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக நியூயோர்க்கில் வசித்துவரும் ருஷ்டி, கடந்த ஓகஸ்டில் இடம்பெற்ற தாக்குதலால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளார்.
வியாழனன்று நடந்த ‘பென் அமெரிக்கா’ விழாவில் ருஷ்டிக்கு கெளரவ விருது வழங்கப்பட்டது. 75 வயதான ருஷ்டி தனது வலது கண்ணை மாத்திரம் கறுப்பு கண்ணாடியால் மறைத்த வண்ணமே இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
முன்னர் அறிவிக்கப்படாத நிலையில் நிகழ்வில் பங்கேற்ற ருஷ்டி உரையாற்றும்போது, “பயங்கரவாதம் எம்மை பயமுறுத்த விடக்கூடாது. வன்முறை எம்மை தடுக்க விடக்கூடாது. போராட்டம் தொடர்கிறது” என்றார்.
ருஷ்டி 1988 இல் வெளியிட்ட புத்தகத்திற்காக மத நிந்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில் ஈரானின் முதலாவது உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா ரூஹுல்லா கொமைனி அவரை கொல்ல மதத் தீர்ப்பளித்தார். அது தொடக்கம் அவர் பல ஆண்டுகள் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.W
Post a Comment