Header Ads



அறிவுரை கூறிய, முதியவர் படுகொலை


கிரான் பிரதேசெயலாளர் பிரிவின் முறுத்தானையில் வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.


சித்தாண்டியைச் சேர்ந்த க.கிருஷ்ணப்பிள்ளை வயது (74) என்ற முதியவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


நேற்று பிற்பகல் வேளை நாற்பதாவது வில் முறுத்தானையில் உள்ள தமது வயலில் உள்ள வாடியில் அயலவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது கத்தியுடன் வந்த நபர் ஒருவர் முதியவரை தலையில் வெட்டி காயப்படுத்தி விட்டு, தப்பி ஓடியுள்ளதாக முதியவரின் மகன் தகவல் தெரிவித்தார்.


காயமடைந்தவரினை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.


சந்தேக நபரினை பொதுமக்கள் பிடித்து வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.


சந்தேக நபர் நாளாந்தம் முதியவரின் வயல் காணிக்குள் அத்துமீறி சென்று அங்குள்ள பலன் தரும் மரங்களில் உள்ள காய் கனிகளை களவாடுவதும் அவற்றினை சேதம் விளைவிற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை கண்டு முதியவர் அவ்வாறு செய்ய வேண்டாம் என கூறியதனால் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கொலை சம்பவத்தில் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.


வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாக சென்ற வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்ற பதில் நீதிபதி எம்.எச்.எம்.றம்சீன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு கட்டளை பணித்தார்.


குறித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


-குகதர்ஷன்-

No comments

Powered by Blogger.