இந்தியா - மணிப்பூரில் வன்முறை, கண்டவுடன் சுட உத்தரவு, ஊரடங்கு பிறப்பிப்பு, இணையச்சேவை முடக்கம்
மணிப்பூரில் அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம் நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டவுடன் சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு தொலைபேசி இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
வீடுகளும் கடைகளும் வாகனங்களும் பற்றி எரிவது போன்ற படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த வன்முறையில் இதுவரை மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தீவைப்பு தொடர்பான சில படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளதுடன், "மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்" என்று பதிவிட்டு, அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை Tag செய்துள்ளால்.
பட்டியல் பழங்குடி (ST) பிரிவில் மெய்தேயி சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஏப்ரல் 19 ஆம் திகதி மாநில அரசைக் கேட்டுக்கொண்டது. மத்திய அரசின் பரிசீலனைக்கும் இதை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் புதன்கிழமையன்று தலைநகர் இம்ஃபாலில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டோர்பாங் பகுதியில் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணிக்கு ஏற்பாடு செய்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது.
சுராசந்த்பூர் மாவட்டத்தைத் தவிர, எல்லா மலை மாவட்டங்களிலும் இத்தகைய பேரணிகள் நடத்தப்பட்டன.
டார்பாங் பகுதியில் நடந்த 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியில் ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். அதன் பிறகு பழங்குடி குழுக்களுக்கும் பழங்குடியினர் அல்லாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்ததாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.
மணிப்பூரின் மக்கள் தொகை சுமார் 28 இலட்சம். இதில் மெய்தேயி சமூகத்தினர் 53 சதவிகிதம் உள்ளனர். இந்த மக்கள் முக்கியமாக இம்ஃபால் பள்ளத்தாக்கில் குடியேறியுள்ளனர்.
மெய்தேயி சமூகத்திற்கு பட்டியலில் பழங்குடியினரின் அந்தஸ்து அளிக்கப்படுவதை எதிர்க்கும் குக்கி அமைப்பு, பல பழங்குடியின சமூகங்களை உள்ளடக்கிய ஒரு இனக்குழு ஆகும்.
மணிப்பூரில் பொதுவாக மலைப்பகுதிகளில் வாழும் பல்வேறு குக்கி பழங்குடியினர் தற்போது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவிகிதமாக உள்ளனர்.
மெய்தேயி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தங்கள் சேர்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்று மலைப் பகுதிகளில் குடியேறிய இந்தப் பழங்குடியினர் கூறுகிறார்கள், பெரும்பாலான இட ஒதுக்கீட்டை மெய்தேயி மக்கள் எடுத்துக்கொண்டு விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
மணிப்பூரில் நடந்த சமீபத்திய வன்முறையானது, மாநிலத்தின் சமவெளிகளில் வசிக்கும் மெய்தேயி சமூகத்திற்கும் மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையே நிலவும் பழைய இனப் பிளவை மீண்டும் திறந்துள்ளது.
Post a Comment