இந்தியா ஆதரவளிக்காவிட்டால் சவூதியிடம் செல்வோம், எமக்காக குரல் கொடுக்க பல முஸ்லிம் நாடுகள் உள்ளன
தமிழ் மக்கள் சார்பில் இந்தியா ஆதரவு வழங்கும் நிலையில் , முஸ்லிம் மக்கள் சார்பில் ஆதரவு வழங்க இந்தியா விரும்பாவிட்டால் நாம் சவூதி அரசாங்கத்தின் ஆதரவுடன் அதை மேற்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான பைசல் காசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார்.
அதன் பின்னர் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.வடக்கு, கிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அந்தப் பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றவேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தும் உள்ளார்.
இந்த பாராளுமன்ற வரலாற்றில் ரணில் விக்கிரமசிங்கவுக்காக கடுமையாக உழைத்தவர்கள் நாங்கள். எமது மக்களும் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.அந்த வகையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் போது தமிழ் மக்களின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்துவதோடு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன.வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தில் முஸ்லிம்கள் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளனர். அவர்கள் தொடர்பில் எவரும் பேசுவதில்லை. உயர் நீதிமன்ற நீதிபதி நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவில் காணாமற்போயுள்ள முஸ்லிம் மக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது அந்த வகையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
அந்த வகையில் தமிழ் மக்கள் சார்பில் இந்தியா ஆதரவு வழங்கினால், இந்தியா முஸ்லிம் மக்கள் சார்பில் ஆதரவு வழங்க விரும்பாவிட்டால் நாம் சவூதி அரசாங்கத்தின் ஆதரவுடன் அதை மேற்கொள்ளவும் முடியும்.
நான் இனவாதம் பேசவில்லை. தற்போது நாட்டில் நடப்பதை பார்த்துவிட்டே பேசுகின்றேன். முஸ்லிம் மக்களுக்கு எதிரான அநீதி தொடர்பில் குரல் கொடுப்பதற்கு எமக்கு பல முஸ்லிம் நாடுகள் உள்ளன. எனினும் உள்நாட்டுப் பிரச்சினையை இந்த நாட்டிலேயே பேசி தீர்க்க வேண்டும்.
என நாம் நினைக்கின்றோம். வெளிநாடுகள் இதில் தலையிடும் அளவுக்கு இடம் வைக்க வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார.
Post a Comment