Header Ads



இலங்கையில் நோயாளியான "சக் சுரின்" - மீள அழைக்க விமானத்தை தேடும் தாய்லாந்து


இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட யானை, நோய்வாய்ப்பட்டு மோசமான நிலைமைகளை சந்தித்துள்ளதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜூன் மாதம் தாய்லாந்துக்கு கொண்டுச்செல்லப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா தகவல் வெளியிட்டுள்ளார். சக் சுரின் எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த யானையை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


“சக் சுரினை தாய்லாந்திற்கு மீன அழைத்து வருவதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக கால்நடை மருத்துவர்கள் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


தகவல்களைத் தொகுத்த பிறகு, ஜூன் மாதத்தில் யானையை அழைத்துவர திட்டமிட்டுள்ளோம்” என்று வரவுட் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் விலங்கு உரிமைகள் பாதுகாப்பிற்கான அரச சார்பற்ற அமைப்பான Rally for Animal Rights & Environment (RARE) மூலம் கவலைகள் எழுப்பப்பட்டதை அடுத்து, தாய்லாந்து அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


குறித்த ஆண் யானைக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் யானையை அழைத்து வர தனது அமைச்சகம் முதலில் திட்டமிட்டிருந்ததாகவுமு் வரவுட் கூறினார்.


கடல் வழியை விட விமானப் பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், பொருத்தமான விமானத்தைத் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மூன்று யானைகளில் சக் சுரின் ஒன்றாகும்.


சக் சுரின் அவல நிலையை தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் அறிந்திருந்த நிலையில், கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்தை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டது.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் ஒரு முதன்மை விசாரணையை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.