கபூரிய்யாவை பாதுகாக்கும் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை
மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய வக்ப் உடமைகளில் ஒன்றாகும். சுமார் 92 வருட வரலாற்றைக் கொண்ட இப்பாரிய சொத்து, அதனை வக்பு செய்த பெருந்தகை மர்ஹ{ம் என்.டீ.எச்.அப்துல் கபூர் ஹாஜியாரின் நான்காவது பரம்பரையில் வந்த அஸ்மத் என்பவரின் பேராசையாலும், பணமோகத்தாலும் இன்று சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
எமது மூதாதையர்கள் தங்களது செல்வத்தில் ஒரு பகுதியை தங்களது மறுமை வாழ்வின் மேம்பாட்டிற்காக அல்லாஹ்வின் பாதையில் நிரந்தர நன்மையை நாடி வக்பு செய்துவிட்டுச் சென்றார்கள். ஆனால் இன்றுள்ள அவர்களது பரம்பரையில் வந்த மறுமை பற்றியும், அவற்றின் வெகுமதிபற்றியும் அறியாமல் அவற்றை சூரையாட விளைந்திருப்பதன் காரணமாக, தற்போதுள்ள சந்ததியினர் தம்மால் முடியுமானதையும் அல்லாஹ்வின் பாதையில் வக்பு செய்வதற்கு பயப்படுகின்ற ஒரு சூழ்நிலையினைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய பொது உடமையான 17.5 ஏக்கர்கள் கொண்ட மஹரகம கபூரிய்யா வளாகமும், கபூரிய்யா மத்ரஸாவின் நலனுக்காக வக்பு செய்யப்பட்ட கிராண்ட்பாஸில் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த சுமார் 2.5 ஏக்கர் நிலப்பரப்பும் வக்பு சொத்தக்கள் அல்ல, இவை எமது குடும்பத்தின் தனியார் சொத்துக்கள் என்ற அஸ்மத்தும் அவர் சார்ந்தவர்களதும் வாதத்தின் காரணமாக இலங்கை முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுணிந்து நிற்கிறது.
இந்த உடமைகளின் பரிதாப நிலையினை அறிந்த கபூரிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர்கள் அந்த உடமைகளை பாதுகாப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இரண்டு உடமைகளுக்கும் ஏற்பட்டிருக்கும் சவால் ஏனைய வக்புடமைகளுக்கும் ஏற்படக்கூடாதென்பதற்காக அவற்றின் நிலைமையினை சமூகமயப்படுத்திவருகின்றனர்.
கல்லூரியின் பழைய மாணவர்கள் தாம் கற்ற கல்வி நிலயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தம்மாலான முயற்சிகளை செய்துவருகின்றனர். (இதுகாலவரை கல்லூரியையும் அதன் வளங்களையும் பாதுகாப்பதற்காக எடுத்த முயற்சிகளை இந்த இடத்தில் சொல்வதற்கு அவசியமில்லை எனக் கருதுகிறோம்.)
இலங்கையில் முஸ்லிம்களின் வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தினால் “இலங்கை வக்பு சபை” என்ற ஒரு தனி அளகு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒரு அங்கமாக இயங்குகிறது. இதற்கான உறுப்பினர்கள் இலங்கை அரசினாலே உள்வாங்கப்படுகின்றனர்.
கபூரிய்யா அரபுக் கல்லூரியின் பொது உடமைகள் தனியார் உடமையாக்கப்படுவதை சமூக மயப்படுத்தும் திட்டத்தில் கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் “கபூரிய்யாவை பாதுகாப்போம்” என்ற எண்ணக்கருவில் சமூக வலைத்தளங்களினூடாக விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.
அன்மையில் இது குறித்து “Save Ghafooriyya” என்ற முகநூல் பக்கத்தில் “இஸ்லாத்தில் வக்பு சொத்துக்களின் நிலைப்பாடும், கபூரிய்யா பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியமும்” என்ற கருத்தில் அஷ்ஷெய்க் பழீள் அவர்களது உரை பதிவேற்றப்பட்டிருந்தது. அதற்கு இன்றைய வக்பு சபையின் உறுப்பினரான “ரியாஸ் சாலி” “Nothing to save ghafooriya. It’s in the save hands” என்று பின்னூட்டம் பதிவிட்டிருந்தார்.
குறித்த பின்னூட்டத்திற்கு அளிக்கப்பட்டிருந்த விளக்கங்களைப் பார்க்கும் போது, அப்பட்டமாக கபூரிய்யாவின் கல்வி வளாகமும், கிராண்ட்பாஸ் இடமும் துண்டாடப்பட்டும், களவாடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இதனை பாதுகாப்பதற்கு பொறுப்பான ஓரு சபையின் உறுப்பினரின் கருத்தே இதனை எழுதத் தூண்டியது.
சகோதரர் ரியாஸ் சாலி அவர்களே! நீங்கள் உண்மையில் இலங்கை முஸ்லிம்களின் வக்பு சொத்துக்களை பாதுகாக்கப் போகிறீர்களா? அல்லது அதனை இல்லாமலாக்கி அழிக்க புறப்பட்டுள்ளீர்களா? அல்லது கபூரிய்யாவிற்கும், அதன் கிராண்;ட்பாஸ் இடத்திற்கும் என்ன நடந்துள்ளது என்பதை அறியாமல் தான் இவ்வாரு பேசுகிறீர்களா? அல்லது அஸ்மத் கபூர் முறைகேடாக பெற்ற 42 கோடிகளில் உங்களுக்கும் சில கோடிகள் கிடைத்தனவா?
17.5 ஏக்கர்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த மத்ரஸா தற்போது 2.5 ஏக்கர்களுக்குள் புதிதாக மதில் இட்டு மட்டுப்படுத்தப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியாதா?
எஞ்சிய பகுதிகளுக்கு பிரத்தியேகமாக நுளைவாயில் இட்டு அந்தப் பகுதியை வெளிக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு அல்லது வாடகைக்கு இடுவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிகள் தெரியாதா?
மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு சுமார் 80 பேர்ச்சஸ் தருவதாக அஸ்மத் கபூர் வாக்களித்திருப்பதாக ஒரு செய்தி அடிபடுகிதே. (அவ்வாரு செய்ய மாட்டார்கள் என்றே நாமும் நம்புகிறோம்) அது பற்றி விசாரித்து பார்த்தீர்களா?
சுமார் 85 வருடங்களாக கல்லூரியின் எந்த ஒரு முறைப்பாடும் மஹரகமையிலோ, அல்லது வேறு எந்த பொலிஸ் நிலையங்களிலோ இல்லாதிருந்த வரலாற்றை, இந்த அஸ்மத் கபூரின் வருகையின் பின்னர் மஹரகம, நுகேகொடை, மிரிஹான என்று எல்லா பொலிஸ் நிலையங்களுக்கும் கல்லூரி மாணவர்கள், உஸ்தாத்மார்கள், பழைய மாணவர்கள் என்று எல்லோரையும் சீரழித்துக் கொண்டிருப்பது மாத்திரமல்லாது கல்லூரியினதும், என்.டீ.எச்.குடும்பத்தினரின் நற்பெயரையும் அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியாதா?
அல்லாஹ்வின் உடமையான இவற்றை குடும்ப உடமையாக்க எடுக்கின்ற முயற்சியை விரும்பாத தனது தந்தையையும், பெரிய தந்தையையும், சமூக ஆர்வலரான ஜஸீம் ஆரிப் ஹாஜியார் அவர்களதும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் பதிவியிலிருந்தே விலக்கியது, அல்லது இராஜினாமா செய்வதற்கான அழுத்தங்களைக் கொடுத்தது உங்களுக்கு தெரியாதா?
இதுவரை காலமும் இல்லாத பெண் உறுப்பினரை (தனது மனைவி மற்றும் ஒரு பெண்) இந்த வக்பு சொத்துக்களுக்கு நம்பிக்கையாளராக்கியுள்ளதன் பின்னணி உங்களுக்கு தெரியாதா?
தான் நம்பிக்கையாளராக இருந்து கொண்டே தனதும் மனைவியின் பெயரிலுமுள்ள ஒரு நிறுவனத்திற்கு கிராண்ட்பாஸ் இடத்தை 25 வருடகால குத்தகைக்கு எந்த முற்பணமும் இல்லாமல் பெற்றுக் கொண்ட முறைகேடான செயலை நீங்கள் அறியவில்லையா?
74 கோடிகளுக்கும் மேலான ஒரு தொகைக்கு 25 வருடகால குத்தகைக்குவிட்ட இந்த நம்பிக்கையாளர்கள் எப்படி நம்பிக்கை பொறுப்பை நிறைவேற்ற தகுதியானவர்கள்? இவர்களிடமுள்ள கல்லூரியா பாதுகாப்பாக இருக்கிறது என்கிறீர்கள்.
74 கோடிகளை 25 வருடங்களுக்காக பெற்றுக்கொண்ட அஸ்மத், அதே தினத்தில் அதே இடத்தினை 20 வருடங்களுக்கு 116 கோடிகளுக்கு “ஸொப்ட் லொஜிக்” நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுத்ததன் மூலம் பெற்ற 42 கோடிகளும் நெருப்பில்லையா?
சரி இந்த அஸ்மத்தின் குல்ல நரித்தனத்தை புரிந்துகொள்ள இதைவிட இன்னும் என்ன சான்றுகள் உங்களுக்கு தேவை? இந்த அஸ்மத்தின் கைகளிலா கபூரிய்யா பாதுகாப்பாக உள்ளது என்கிறீர்கள்!
கபூரிய்யாவின் பெயரில் இருந்த அனைத்து அரச ஆவணங்களையும் நம்பிக்கையாளர்களது பெயர்களுக்கு மாற்றிக் கொண்டிருக்கும் மர்மம் இன்னும் உங்களுக்கு புரியவில்லையா?
2.5 ஏக்கரில் 42 கோடிகள் சுலபமாக பெற்ற அஸ்மத் மஹரகம 15.5 ஏக்கர் காணியில் எத்தனை கோடிகளை ஏப்பம்விடப் போகிறாரோ?
அஸ்மத் கபூர் தனது நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அவர் தன்சார்பாக ஆஜராகும் 90% சட்டத்தரணிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?
கபூரிய்யா அரபுக் கல்லூரியோடு தொடர்புபட்ட ஆவணங்களை இலங்கை வக்பு நியாய சபையில் இஸ்லாமிய ஒழுங்கில் தீர்வுகளைக்காண முற்படும் போது அவ்வழக்குகளை அங்கு அவற்றை தொடர விடாமல் மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றவைகளுக்கு இழுத்துச் செல்வதன் நோக்கம் தான் என்ன?
அவைகளும் இலங்கையின் நீதிமன்றங்கள் தான். நாம் அவற்றை புறக்கணிக்கவுமில்லை, அவற்றின் தீர்ப்புக்களை சவாலுக்குட்படுத்தவுமில்லை. இலங்கை முஸ்லிம்களின் விடயங்களை மேற்கொள்ளவென “முஸ்லிம் தனியார் சட்டம்” இருக்கும் போது, தனது சமய கடமைகளை பிற சட்டங்களோடு நிறைவேற்ற முற்படும் ஒரு முஸ்லிமைப் பற்றி நீங்கள் எப்படி எடைபோடுவீர்கள். அவ்வாரே எமக்கான ஒரு வக்பு சபையும், வக்பு நியாய சபையும் இருக்கும் போது அவற்றை புறக்கனித்து பிற நீதிமன்றங்களில் நியாயத்தை எதிர்பாரக்கும் அஸ்மத் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கபூரிய்யாவின் கல்விக் கொள்கையிலும், அதன் இயல்பு விடயங்களிலும் உண்மைக்கு புறம்பான அப்பட்டமான பொய்களையும் அவதூருகளையும் பரப்பிக் கொண்டிருக்கும் அஸ்மத்திற்கு நீங்களும் பக்கபலமாக இருப்பது யாவரும் அறிந்ததே. அப்படியானால் அஸ்மத்தின் நெருப்பு விளையாட்டில் உங்களுக்கும் பங்கிருக்கிறது என்று தானே அர்த்தம்.
கௌரவ ரியாஸ் ஸாலி அவர்களே! மேலே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு உங்களிடம் நியாயமான பதில்கள் இருந்தால் கூறுங்கள். பொறுப்பான ஒரு சபையில் பொறுப்பான ஒரு பதவியில் இருக்கும் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். உங்கள் பதவியும், பட்டமும் உங்களுக்கு ஒரு சோதனையா அமைந்து விடக்கூடாது.
கபூரிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர்களின் போராட்டத்தின் நியாயமான பக்கங்களை பாருங்கள். அவர்களது போராட்டமே இலங்கையில் வக்பு சொத்துக்கள் பற்றிய சிந்தனையை தூண்டிவிட்டுள்ளது. வக்பின் காவலர்களான நீங்கள் செய்ய வேண்டிய வேலையினை அவர்கள் ஆரம்பித்துள்ளார்.
கபூரிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர்களது சாத்வீக போராட்டத்தின் நியாயங்களை கண்ட பல மத்ரஸாக்கள், சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் இன்று அவர்களோடு கைகோர்த்துள்ளன. அதற்கான பிரதான காரணம் வக்புகளை பாதுகாக்க வேண்டிய வக்பு சபையினது பொறுப்பற்ற செயல்பாடும், அசமந்தப் போக்குமே.
ரியாஸ் ஸாலி பற்றி கடந்த காலங்களில் எவ்வாரு பேசப்பட்டது?
ரியாஸ் ஸாலி என்றாலே இன்றும் பலருக்கு நினைவுக்கு வருவது ஞானசார தேரரோடு உங்களிக்கிருந்த சகவாசம் தான். கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்வை இல்லாமலாக்கி, இஸ்லாமோபோபியா என்ற மாயையை உருவாக்கி முஸ்லிம்களின் கோடிக்கணக்கான உடமைகளும், பொருளாதாரமும் அழிக்கப்படுவதற்கும், ஆயிரம் வருடங்களைக் கொண்ட இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை சமூகத்துடனான உறவை சீரழித்து, சின்னாபின்னமாக்கி, ஒருவரை ஒருவர் கோபத்தோடும், குரோதத்தோடும் பார்க்கின்ற சூழ்நிலையை உறுவாக்குவதில் பிரதான பங்கை வகித்தவர் தான் இந்த ஞானசார தேரர்.
இவருக்கும் உங்களுக்குமிடையில் இருந்தது நகமும் சதையும் போன்ற உறவே என்பது யாவரும் அறிந்ததே. இலங்கையில் இருக்கின்ற இஸ்லாமி இயக்கங்களையும், அமைப்புக்களையும் காட்டிக் கொடுத்து இல்லாத பொல்லாத வம்புகளை இலங்கை முஸ்லிம்களுக்கு வாங்கிக் கொடுப்பதில் பிரதான பங்கு உங்களுக்கிருந்ததாக பேசப்பட்டது.
ஏம்மொவ்வொருவருக்கும் ஒர் அமைப்போடு, ஒரு சிந்தனையோடு, ஒரு கொள்கையோடு உடண்பாடு இருப்பதற்காக ஏனைய அமைப்புக்களை, சிந்தனைகளை காட்டிக் கொடுப்பது வடிகட்டிய முட்டாள் தனம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு முன்னரான உங்களது ஒரு பதிவில் கபூரிய்யாவில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் கற்பிக்கப்படுவதாகவும், தீவிரவாதம், அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாகவும் ஒரு விடயத்தை கூறியிருந்ததை பார்த்திருக்கிறோம். அதற்கான சான்றுகள் உங்களிடம் இருக்கின்றனவா?
சரி நீங்கள் கூறுவது உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் இவ்வளவு காலமும் நீங்கள் எங்கிருந்தீர்கள்? அஸ்மத் பொது உடமையொன்றை தனியார் உடமையாக்க எடுத்த முயற்சிகளை கல்லூரி நிருவாகமும், பழைய மாணவர்களும் எதிர்த்தபோது முன்வைக்கப்பட்ட அப்பட்டமான அவதூரு தானே இவை!
கொஞ்சம்கூட மனச்சாட்சி இல்லாமல் இவற்றை கூறும் நீங்கள் அல்லாஹ்வை பயப்பட மாட்டீர்களா? அல்லது அஸ்மத் கபூர் முறைகேடாக பெற்ற பல கோடிகளின் பங்குகள் உங்களுக்கும் கிடைத்தனவா? ஏப்ரல் தாக்குதல்களோடோ அல்லது நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களோடோ கபூரிய்யா கல்லூரியின் எந்தவொரு மாணவனும் இதுவரை சம்பந்தப்பட்டதற்கான எந்த சாட்சியும் இல்லை என்று மார்தட்டி சொல்லும் அளவிற்கு அக்கல்லூரியில் கல்வியியல் நடவடிக்கைகள் இருந்துள்ளது என்பதை பழைய மாணவர்கள் அடிக்கடி கூறிக்கொண்டிருக்கின்றனரே, அது பொய்யா?
கல்லூரியில் காணப்பட்ட அற்ப செற்ப விடயங்களை எல்லாம் போட்டோ போட்டு சீரழிக்கும் நீங்களும் உங்களது அஸ்மத்தும் ஏன் இதுவரை எந்த சிறு தடயங்களையாவது காட்ட முடியாமல் போனது? அவதூருகளையும், பொய்களையும் சொல்லி எப்போதும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது.
ஏப்ரல் உயிர்த்த ஞாயிரு தாக்குதலைத் தொடர்ந்து, உங்களது நெருங்கிய சகாக்கல் முஸ்லிம் சமூகத்தின் பல விடயங்களை தடைசெய்ய வேண்டும் என கோஷமிட்டனர். முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, புனித அல்குர்ஆன், நபிகளாரின் போதனைகள், குர்ஆன் மத்ரஸாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள் என பட்டியல் நீண்டு கொண்டே சென்றன. எனினும் அல்லாஹ்வின் உதவியால் அவற்றுக்கான எந்த தடையும் கொண்டுவரப்படவில்லை. தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட ஒருசில தடைகளும் தற்போது தளரத்தப்பட்டுள்ளன.
உங்களைப் போன்றவர்கள் வக்பு சபைக்கு உள்வாங்கப்பட்டிருப்பதன் மர்மம் என்ன என்பது தெரியாமல் இருக்கின்றோம். சமூக பிரச்சினைகளையும், சமய பிரச்சினைகளையும் சரியாக விளங்காத நீங்கள் அல்லாஹ்வின் உடமைகளை எவ்வாறு இதய சுத்தியுடன் நிறைவேற்றப் போகிறீர்கள்?
புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான கௌரவ அமைச்சர விதுர விக்ரமநாயக்க அவர்களே! மதங்களையும், சிந்தனைகளையும், சமயங்களின் பாரம்பரியங்களையும் மதிக்கும் உங்களின் அமைச்சின் கண்கானிப்பில் இயங்கும் இலங்கை வக்பு சபையின் உறுப்பினரது இவ்வாரானவர்களது செயல்பாட்டினை நிச்சியம் நீங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டீர்கள் என்பது உறுதி.
இத்தகையவர்களது முதிர்ச்சியற்ற செயல்பாடும், நடவடிக்கைகளும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் உகந்ததல்ல. ரியாஸ் ஸாலியின் வக்பு சபையின் உறுப்புரிமை விடயத்தில் முஸ்லிம் சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதே, எஞ்சியிருக்கும் வக்பு சொத்துக்களையாவது பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக அமையும்.
கபூரிய்யாவை பாதுகாக்கும் அமைப்பு.
Post a Comment