Header Ads



அரசாங்கத்தின் முடிவினால் கல்வித்துறை ஆட்டம், நாட்டை விட்டு வெளியேறும் விரிவுரையாளர்கள்


பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் அவர்கள் வழமையை விட அதிகமாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னேஹக்க தெரிவித்துள்ளார்.


கடந்த 5 வருடங்களை விட கடந்த சில மாதங்களில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சடுதியாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வெளிப்படையாக கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.


பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதாலும், அரச சேவைக்கு புதிதாக ஆட்களை இணைத்துக் கொள்ளாத அரசாங்கத்தின் முடிவினாலும் பல்கலைக்கழக கல்வித்துறை பெரிதும் ஆட்டம் கண்டுள்ளது.


களனிப் பல்கலைக்கழகத்தில் சுமார் 150 வைத்தியர் வெற்றிடங்களும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 100 வைத்தியர் வெற்றிடங்களும் உள்ளதாகவும் சில பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை நடத்துவதற்கு போதிய விரிவுரையாளர்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிவிதிப்பு முறையினால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுமார் 36% வரிச்சுமைக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் அவர்கள் சம்பளத்திற்கு ஏற்றவாறு செலவுகளை நிர்வகித்தாலும், இந்த நியாயமற்ற வரிக் கொள்கையால், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முன்பு செலுத்திய வரித் தொகையைவிட மூன்று மடங்கு அதிகம் சுமையை எதிர்கொள்கின்றனர்.


இதன்படி, சில விரிவுரையாளர்களின் சம்பளம் மறை நிலைக்கு சென்றுள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கிறார்.

No comments

Powered by Blogger.