Header Ads



வெலிகம பொலிஸாரின் மனிதாபிமானச் செயற்பாடு


மாத்தறை, வெலிகம நகரில் உயிரை மாய்க்க தயாரான பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகளின் நெகிழ்ச்சி செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.


தனது கணவரால் சரியான முறையில் பார்த்துக் கொள்ளாதமையால் கடும் நெருக்கடியுடன் போராடிய இந்த பெண் நேற்று முன்தினம் காலை வெலிகம நகரில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக சுற்றித் திரிந்துள்ளார்.


இது தொடர்பில் வெலிகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதற்கமைய, வெலிகம பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவின் சாந்த மற்றும் விக்கிரமாராச்சி ஆகிய இரு உத்தியோகத்தர்களினால் குறித்த பெண் வெலிகம பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, ​​கணவன் இவரைக் கவனிப்பதில்லை என்பதும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரப் பின்னணியும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.


இதனால் தனது உயிருக்கு மாய்த்துக் கொள்ளும் நோக்கில் அஹங்கம பிரதேசத்தில் இருந்து வெலிகம நகருக்கு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தனது குழந்தையை வீட்டில் விட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


விசாரணையின் பின்னர் வெலிகம தலைமையக பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி டி. எம்.அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் குழு, குறித்த பெண்ணின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளில் மேற்கொள்வதற்கு தீர்மானித்தனர்.


அதற்கமைய, வெலிகம பொலிஸார் அவருக்கு தொழில் ஒன்று பெற்றுக் கொடுப்பதற்கும் தங்குமிடத்திற்கு தேவையான பணத்தை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.


பின்னர் அந்த பெண் வெலிகம பொலிஸ் நிலையத்தின் நிலையத் தளபதி உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.


எப்படியிருப்பினும் அதன் பின்னரும் அவரை கண்காணிக்கவும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.