Header Ads



ஆளுநர்கள் பதவி விலக மாட்டார்களா..?

 
தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கவில்லை என ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறான நிலையில் தமது பதவிகளிலிருந்து விலகுவது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.


பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களின் வாயிலாக மாத்திரமே அறிந்துகொண்ட போதிலும் இதுவரை ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.


பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் இதுவரை தாம் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


இந்த விடயம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மிலிடம் வினவிய போது, தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாததால் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.


தாம் தற்போது வௌிநாட்டில் இருப்பதாகவும் மீண்டும் நாட்டிற்கு வந்ததன் பின்னர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதியால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டால் மாத்திரம் இராஜினாமா செய்ய தயாராகவுள்ளதாகவும் சபரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ கூறினார்.


இதனிடையே வட மேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொடவிடம் இது தொடர்பில் வினவிய போது, இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படாததால் ஆளுநர் பதவியில் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.


இந்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் வினவுவதற்கு முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.


இதனிடையே சபரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அண்மையில் அறிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


ஜனாதிபதியொருவர் பதவி விலகும் போது ஆளுநர்களும் பதவி விலக வேண்டியது வழமையான விடயம் என்ற நிலையில், கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ரணில் விக்ரமசிங்க  நியமிக்கப்பட்டு பல மாதங்களாகியுள்ள போதிலும் இவர்கள் இதுவரை பதவி விலகவில்லையென அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.