அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சேவைகளை வழங்க காத்திருக்கும் ஆர்.எஸ்.சி பணியாளர்கள்
- சிராஜுத்தீன் அஹ்ஸனி -
இந்த ஆண்டும், அல்லாஹ்வின் விருந்தினராக புனித ஹரம்களுக்கு வரும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க ஆர்.எஸ்.சி பணியாளர்கள் கடமையாற்ற தயாராக இருக்கின்றனர்.
இறைவனிடம் இருந்து கிடைக்கும் வெகுமதியை மட்டுமே எதிர்பார்த்து மற்றவர்களுக்கு செய்யும் சேவைகளுக்கு இஸ்லாம் மிகப்பெரிய முக்கியத்துவம் அளிக்கிறது.
அதுவும் மக்கா,மதீனா மற்றும் பிற வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு வரும் யாத்ரீகர்களுக்கு செய்யும் சேவைகள் நன்மை அளப்பரியது.
ஹஜ்ஜின் போது உலகம் முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்களுக்கு அவர்களின் நாடு, மொழி, உடை மற்றும் நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு ஆதரவளிக்கவும், பாதுகாப்பு வழங்கவும், உதவவும், ஹஜ் தன்னார்வலர்கள் முடியும்.
கேரள தன்னார்வலர்கள் இந்தத் துறையில் போட்டி போட்டு பணியாற்றுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
காணாமல் போன யாத்ரீகர்களை அவர்கள் தங்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது, நடக்க முடியாதவர்களுக்கு சக்கர நாற்காலி வசதிகள் செய்து கொடுப்பது, உடல்நலம் குன்றிய வர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்வது, மார்க்க விஷயங்களில் சந்தேகம் இருப்பவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பது என ரிசாலா ஸ்டடி சர்க்கிள் பணியாளர்கள் எப்போதும் புனித பூமியில் படுபிசியாக இருப்பார்கள்.
அரஃபா முடிந்து மினாவுக்கு கூட்டம் கூட்டமாக வரும் யாத்ரீகர்கள் கூட்ட நெரிசல் காரணமாக திசைதிருப்பப்பட்டு, அலைக்கழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த நேரத்தில் ஹஜ் தொண்டர்கள் ஆற்றும் தன்னலமற்ற சேவைகளை போற்றி புகழாரம் செய்யாமல் இருக்க முடியாது.
ஹஜ்ஜின் போது அவர்களின் பல செயற்பாடுகளை என்னால் நேரடியாக அனுபவிக்க முடிந்தது. ஹஜ் தன்னார்வலர்களின் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதுடன் அவர்களின் முகாம்களுக்குச் சென்று தேவையான ஆலோசனைகளையும் பிரார்த்தனைகளையும் வழங்குவது உண்டு.
இந்த ஆண்டுக்கான சேவை நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. கடைசி ஹாஜி புனித பூமியை விட்டு வெளியேறும் வரை RSC தொண்டர்கள் பணியில் இருப்பார்கள்.
ஹஜ் சேவை நடவடிக்கைகளில் முன்னணி வகிக்கிறவர்களுக்கும் அதற்கு உதவி செய்பவர்களுக்கும், சேவையில் ஈடுபடுபவர்களுக்கும் அல்லாஹ் மகத்தான நற்கூலியை வழங்குவானாக - ஆமீன்..
Post a Comment