Header Ads



'தி கேரளா ஸ்டோரி' படம் எப்படி உள்ளது...?


பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அடா சர்மா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இந்தியில் உருவாகி வெளியாகியிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியானபோதே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வகுப்புவாத திரைப்படம் போல் தெரிகிறது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதேபோல், இந்தப் படத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.


‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு, 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது, பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.


அதனால், கேரளாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருப்பதாக இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த வி.கே. சனோஜ் தெரிவித்திருந்தார். மேலும், கேரளாவின் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிடக் கூடாது என கோரிக்கை விடுத்தன.


இந்நிலையில், கேரளாவின் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் வகையிலான கருத்துகளை கேரளாவைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்தவகையில், மசூதி ஒன்றுக்குள் இந்து முறைப்படி நடந்த வீடியோ ஒன்று அதிகளவில் பகிரப்பட்டது. அந்த வீடியோவை, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் பகிர்ந்து, மனிதத்தின் மீதான அன்பு அளவிட முடியாதது எனவும் தெரிவித்திருந்தார்.


கடந்தாண்டு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் போன்றே சங்பரிவார் அமைப்புகளின் பரப்புரை திரைப்படமாக ‘தி கேரளா ஸ்டோரி’ உருவாக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து எதிர்மறை கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தமிழ்நாட்டிலும் இந்தப் படத்தை வெளியிடும் திரையரங்குகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வகையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.


இந்தியில் உருவான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தியில் மட்டுமே தமிழ்நாடு, கேரளாவில் வெளியாகியிருக்கிறது.


‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மோசமான நடிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள, மோசமான திரைப்படம் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.


பல்வேறு மத, இன அடையாளங்களுடன் பெருமைப்படும் கேரளாவில், அதன் சமூக சிக்கல்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டாமல், மோசமாக உருவாக்கப்பட்டு இருக்கும் வெற்று கூச்சலே ‘தி கேரளா ஸ்டோரி’ என சாடியுள்ளது. அப்பாவியான இந்து மற்றும் கிறித்துவ பெண்கள் தீய முஸ்லீம் ஆண்களால் அலைக்கழிக்கப்படுவதான காட்சியமைப்புகள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெற்று எழுத்துக்களால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும் அதன் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


"கேரளாவில் மிகவும் பரவலாக காணப்படும் இந்து, முஸ்லீம், கிறித்துவ நண்பர்களைப் போலவே, நர்சிங் கல்லூரியில் சேரும் 4 பெண்கள் ஒரு அறையில் தங்குகிறார்கள். அவர்களில் உள்ள ஆசிஃபா எனும் முஸ்லீம் பெண், மற்ற மூவரையும் மூளைச்சலவை செய்கிறாள். ஹிஜாப் அணியும் பெண்கள் மட்டுமே ஆண்களின் தவறான கண்களில் இருந்து தப்ப முடியும் எனவும், மற்ற தெய்வங்கள் எல்லாம் பலவீனமானவை எனவும் குறிப்பிடுகிறார். அதோடு, அல்லாவால் மட்டுமே நரக நெருப்பில் அழிந்தொழிவதை தடுக்க முடியும் எனவும் ஆசிஃபா கூற, அவளது பேச்சில் மற்ற மூவரும் எளிமையாக மயங்கி விடுகின்றனர். ஆனால், இந்திய அளவில் கல்வியறிவு பெற்ற பெண்கள் அதிகமிருக்கும் கேரளாவில் இது எப்படி சாத்தியம் என உறுதியான எந்த காட்சியமைப்புகளும் இன்றி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கேரளா அடுத்த 20 ஆண்டுகளில், முஸ்லீம் மாநிலமாக மாறும் என துணை முதலமைச்சர் தெரிவித்ததாகவும் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இதுமாதிரியாக நடந்ததா என்பது பற்றிய எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை. இதுமாதிரியான நிகழ்வுகள் படத்தின் நம்பகத்தன்மையை குலைக்கிறது" என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.


"படத்தில் வரும் எல்லா முஸ்லிம் கதாபாத்திரங்களும் மிரட்டலான தோரணையில் இருக்கிறார்கள். ‘லவ் ஜிஹாத்’ அவர்கள் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதா ஷர்மா திறமையான நடிகையாக இருந்தும், அவரது காட்சிகள் நகைப்பையே வரவைக்கின்றன. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர, இலங்கை வழியாக பயணம் செய்யும் காட்சிகள் மிகவும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டு உள்ளன. அங்கு 32000 கேரள பெண்கள் இருப்பதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது" என தங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


"ஒரு சிக்கலின் மீது வெளிச்சம் பாய்ச்சி தரமான விவாதத்தை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். ஆனால், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. அதனால், பார்வையாளரே அவர்கள் பார்க்கும் படத்தில் என்ன இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்" எனவும் ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


டைம்ஸ் ஆஃப் இந்தியா, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இளம் இந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, அவர்களை தீவிரவாதிகளாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.


"மூன்று பெண்களின் உண்மைக் கதை என குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப்படம், அதா ஷர்மாவின் விசாரணை அறை காட்சியுடன் தொடங்குகிறது. அங்கு அவர், கடந்த கால நெருக்கடிகள் குறித்து பகிர்ந்து கொள்கிறார். கல்லூரி காலத்தில் தங்கள் அறைத்தோழியான ஆசிஃபா தீவிரமான மூளைச்சலவையால் தான் உட்பட மூன்று பேரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியது குறித்து பதிவு செய்கிறார். அதற்காக போதை மருந்துகளை பயன்படுத்தியது குறித்தும், தனது ஆண் நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஆசிஃபா அதை நிகழ்த்தியதையும் தெரிவிக்கிறார். அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர நிர்பந்திக்கப்படுவது குறித்தும் அதா ஷர்மா குறிப்பிடுகிறார்." என இந்தப் படத்தின் கதையை விவரிக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.


"சிக்கலான ஒரு விசயத்தை கையிலெடுத்திருக்கும் இயக்குநர், பார்வையாளர்களிடையே பதட்டத்தை உருவாக்கும் தருணங்களை இயல்பாக திரையில் புகுத்தியிருக்கிறார். மேலும், சர்ச்சையான விசயங்களை கையாளும்போது, சமநிலை கடைபிடிப்பதில் இருக்கும் சவாலையும் திறம்பட கையாண்டிருக்கிறார். ஆனால், உரையாடல்கள், காட்சியமைப்புகளால் சிக்கலானதாகவே திரைப்படம் இருக்கிறது. "


"பல்வேறு சமூகங்களை சேர்ந்த பார்வையாளர்களின் அமைதியை நிச்சயம் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சீர்குலைக்கும் என விமர்சிக்கும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, படம் பார்த்தபிறகு தேசத்தின் தற்போதைய நிலைகுறித்த கேள்விகள் எழும்பும்" எனவும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.


"இஸ்லாமிய வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது"

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டிருப்பதாக scroll.in இணையதளம் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.


இந்தப் படம் பல்வேறு எதார்த்தங்களை கேள்விக்குள்ளாக்கி, இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் எப்படி ‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பைச் சேர்ந்தவர்களானார்கள் என்பதை விளக்கும் வகையிலான பல காட்சிகளை கொண்டிருக்கின்றன. மேலும், கேரளாவின் காசர்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளை ஆட்சேர்ப்பு முகாங்களாகவும் சித்தரிக்கிறது. ‘ஒட்டுமொத்த கேரளாவும் ஒரு வெடிகுண்டின் மீது அமர்ந்திருப்பதாக’ படத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் scroll.in தளம் தனது விமர்சனத்தில் பதிவிட்டு இருக்கிறது. BBC

No comments

Powered by Blogger.