இப்படியும் நடக்கிறது
இது பற்றி தெரியவருவதாவது
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் சம்பவதினமான நேற்று பிற்பகல் 2 மணியளவில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் சரணடைந்து தான் காவத்தையைச் சேர்ந்தவர் எனவும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வங்கியில் ஏரிஎம் இயந்திரத்தில் தாயார் 3 ஆயிரம் ரூபா பணம் எடுத்துவருமாறு அனுப்பிய நிலையில் பணத்தை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்து சென்ற போது வான் ஒன்றில் வந்தவர்கள் தன்னை கடத்தி சென்று முகத்தை துணியால் மூடி கட்டியதுடன் கைகளையும் கட்டி வைத்திருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வானில் கடத்தி சென்று வீடு ஒன்றில் கட்டிவைத்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தபோது கடத்தல் காரர்கள் தன்மீது கடும் தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து இன்று கறுப்பு வானில் ஏற்றி வந்த நிலையில் இந்த பகுதி வீதியில் வானில் இருந்து தப்பி ஓடி வந்துள்ளதாகவும் வானில் கத்தி வாள் போன்ற ஆயுதங்கள் மற்றும் பெண்களின் ஆடைகள் இருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்தான்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட மட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி அவன் தொடர்பாக விசாரித்தபோது குறித்த சிறுவன் கடத்தப்பட்டதாக எந்தவித முறைப்பாடும் இல்லை எனவும் இவன் இவ்வாறு 3 தடவை வீட்டில் இருந்து பணத்தை எடுத்து தப்பி ஓடியவர் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சிறுவன் வங்கியில் இருந்து 3 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துச் சென்ற நிலையில் பணம் தொலைந்ததுடன் வீட்டில் தாயார் அடிப்பார் என்ற பயத்தின் காரணமாக வீட்டிற்கு போகாமல் அந்த பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றின் முன்னால் நின்றபோது அங்கு மட்டக்களப்பில் இருந்து வான் ஒன்றில் சுற்றுலா வந்தவர்களிடம் தான் அனாதை எனவும் சாப்பாடு இல்லை எனவும் தற்கொலை செய்ய போவதாக தெரிவித்த நிலையில், அவன் மீது இரங்கிய அவர்கள் தங்களுடன் வந்து இருக்குமாறு மட்டக்களப்பிற்கு அழைத்து வந்துள்ளனர்.
மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள பிள்ளையாரடி பகுதியிலுள்ள ஆஞ்சேநேயர் ஆலயத்தை கண்டு தன்னை இறக்கிவிடுமாறு கோரிய நிலையில் அவர்கள் சிறுவனைஅங்கு இறக்கிவிட்டு சென்றனர்.
அங்கு இறங்கிய நிலையில் உணவு எதுவும் இல்லாததையடுத்து பொலிஸ் நிலையம் எங்கு உள்ளது என வீதியால் சென்றவர்களிடம் விசாரித்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னை காவத்தையில் இருந்து கடத்திவரப்பட்ட நிலையில் வானில் இருந்து குதித்து தப்பி ஓடிவந்துள்ளதாக பொய் கூறியுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து சிறுவனை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவனின் உறவினர்களை தொடர்பு கொண்டு வரவழைக்கப்பட்டதையடுத்து இன்று வியாழக்கிழமை (18) பொலிஸ் நிலையத்துக்கு வந்த உறவினர்களிடம் சிறுவனை எச்சரித்து ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment