Header Ads



அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தலைவணங்க மாட்டோம் - இம்ரான்கான்


அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். 


இந்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. வருகிற 17-ந்தேதி வரை வேறு எந்த வழக்கிலும் இம்ரான் கானை கைது செய்யக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது. 


முன்ஜாமீன் கிடைத்ததையொட்டி இம்ரான் கான் லாகூரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார். பின்னர் அவர் நேற்று இரவு தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அரசுக்கு எதிராக இம்ரான் கான் பரபரப்பான குற்றச்சாட்டினை தெரிவித்து உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- 


தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் என்னை சிறையில் அடைக்க பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த ராணுவம் திட்டமிட்டு உள்ளது. முதலில் வேண்டுமென்றே என் கட்சிக்காரர்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. 


சாதாண மக்கள் மற்றும் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. நாளை என்னை கைது செய்ய வரும் போது மக்கள் வெளியே வரமாட்டார்கள் என்ற பயத்தை உருவாக்குவதற்காக இது திட்டமிட்ட முயற்சி. நாளை மீண்டும் இணையதள சேவைகளை நிறுத்தி சமூக ஊடகங்களை தடை செய்வார்கள். பாகிஸ்தான் மக்களுக்காக நான் சொல்வது என்னவென்றால் எனது கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை நான் உண்மையான சுதந்திரத்துக்காக போராடுவேன். 


அல்லாவை தவிர வேறு யாருக்கும் தலைவணங்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொண்டோம் என்பதை நினைவில் கொள்ளுமாறு எனது மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


No comments

Powered by Blogger.