Header Ads



அரசியல் எதிரியிடமிருந்து "இம்ரானுக்கு"


- Naushad Mohideen -


பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள  கொந்தளிப்பான அரசியல் நிலைமை பற்றி அறிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். இம்ரான் கான் ஏன் எவ்வாறு பதவி விலக்கப்பட்டார். இப்போது ஏன் அவர் மீது இந்தளவு அரசியல் ரீதியான வஞ்சம் தீர்க்கப்படுகின்றது என்பதெல்லாம் விரிவாக பேசப்பட வேண்டியவை. அவை ஒரு புறம் இருக்க இன்று இம்ரான் கான் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு குறிப்பு சமூக ஊடகங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது.


நவாஸ் ஷரீபின் ஆட்சியில் சமஷ்டி அமைச்சராகப் பணியாற்றிய ஜெனரல் சலாஹுத்தீன் திர்மஸீ என்பவர் தான் இந்தக் குறிப்பை எழுதி உள்ளார். இம்ரானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடின்றி காணப்பட்ட ஒருவரின் கூற்று என்பதால் இது முக்கியத்துவம் பெறுகின்றது. என்னையும் இந்த வரிகள் பெரிதும் கவர்ந்தன. நண்பர்களின் நன்மை கருதி அதை தமிழில் தருகிறேன்.


இம்ரான் கான் பற்றி நாம் என்ன நினைக்கின்றோம் என்பது இனிமேலும் ஒரு விடயமே அல்ல.


அவரை நாம் ஒரு ஊழல்வாதியாக பார்க்கின்றோமா அல்லது குற்றம் இழைக்காத அப்பாவியாகப் பார்க்கின்றோமா என்பதும் இனிமேலும் ஒரு முக்கிய விடயமே அல்ல.


அவர் ஆற்றல்கள் மிக்கவரா அல்லது கையாலாகதவரா என்பதும் ஒரு பொருட்டே அல்ல.


ஆனால் அவரை ஒரு தார்மீக பீடத்தில் வைத்துப் பாருங்கள். அவருடைய அரசியல் எதிரிகளுக்கு சமமானதோர் இடத்தில் அவரை வைத்துப் பாருங்கள்.


அவருடைய வீழ்ச்சி நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை எம்மில் பலர் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றோம். ஆனால் அவருடைய எழுச்சி இறைவனின் நியதிப்படி நடந்த ஒன்று.


அவருடைய வெளியேற்றம் ஒரு சில நபர்களால் திட்டமிடப்பட்டது. ஆனால் அவரது மீள் வருகை பெரும்பாலானவர்களால் தீர்மானிக்கப்பட்டதாக அமையவுள்ளது.


அவர் தனது உயர்வான நிலையிலிருந்து வீழ்ந்தது வேண்டுமானால் சில மனிதர்களால் திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம். ஆனால் அவரது மகிமையான உயர்வு தெய்வீகத்தால் விதிக்கப்பட்டது. இப்போது முதல் எமது கருத்துக்கள் எந்தப் பெறுமானத்தையும் தாங்கி நிற்காத ஒரு இடத்தை அவர் ஏற்கனவே அடைந்து விட்டார். இனி இறைவனின் முடிவு மட்டுமே எஞ்சி நிற்கின்றது.


எமது கண்களுக்கு எதிரே ஒரு மிகப் பெரிய நாடகம் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது.


இது வரலாற்றுக்கு உரிய காலம்.


இந்த நாள் எமது வரலாற்றின் ஒரு பகுதியாக நிச்சயம் அமையும்.


அது நீண்ட நாட்களுக்கு மறக்க முடியாத ஒன்றாகவும் அமையும்.


220 மில்லியன் மக்களின் தலைவிதியை மாற்றுவதற்காக துணிச்சல் மிக்க ஒரு ஆண் மகன் எழுந்து நின்றார்.


அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களைக் கொண்ட எல்லோரும், அந்த ஒருவருக்கு எதிராக பேராசையால் ஒன்றிணைந்தனர். பேராசை மட்டுமே அங்கு நிலை கொண்டிருந்தது.


ஏற்கனவே வழங்கப்பட்ட மாற்ற முடியாத தமது நிலையை மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.


அவர்களது வருங்கால சந்ததியினர், தேசத்தின் உயிர்களைத் தின்றுவிட்ட மாபியா குழுக்களுக்கு எதிராக பூச்சிகள் போல் ஊர்ந்து செல்வதையும் கண்டித்தனர்.


ஆனால் இதுவல்ல உங்களின் விதி என்று ஒரு மனிதன் ஒரேயொரு மனிதன் உரத்துக் கூறினார்.


இதை விட சிறந்ததை அனுபவிக்க வேணடியவர்கள் நீங்கள் என்று அந்த ஒரேயொரு மனிதன் கூறினார்.


அது நடைமுறையில் எவ்வளவு சாத்தியமாகும் என்பதையும் அவர் கூறினார். அவர்களுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நின்ற அந்த வசீகரமான மனிதன் அதை துணிவாக எடுத்துக் கூறினார்.


அது உயிரை விட பெரிய உன்னதமான ஒரு உருவமாக தெரிந்தது.


அது மிகப்பெரிய உண்மையாகவும் தெரிந்தது.


இந்த மனிதர் மிகப் பெரிய ஆடம்பரமான ஒரு வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்.


அவருடைய அழகான குடும்பம், பேரழகியான மனைவி, அவரை தத்தெடுத்த நாடு என எல்லாவற்றையும் அவர் தியாகம் செய்தார்.


வீழ்ச்சியின் விளிம்பில் பரிதாபகரமாக நின்ற ஒரு நாட்டுக்காக அவர் எல்லாவற்றையும் இழந்தார்.


அந்த மக்களுக்கு ஒரு தூர நோக்கை, நம்பிக்கையை, கனவை அவர் வழங்கினார்.


அந்த மக்கள் தமது உண்மையான பெறுமதியை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.


உங்களுக்கு இறைவன் இறக்கைகளை வழங்கி உள்ளான், அதைக் கொண்டு உங்களால் பறக்க முடியும் அவ்வாறு இருக்க ஏன் தவழுகின்றீர்கள் என்று அந்த மக்களைப் பார்த்து அவர் கேட்டார்.


அதற்காக அவர் முன்னணியில் இருந்து தலைமை தாங்கினார்.


அதற்கான வாகனத் தொடரணியை அவர் தலைமை தாங்கி அச்சமின்றி ஓட்டிச் சென்றார்.


சாத்தியமான உடனடி மரண அச்சம் உட்பட சகல அச்சங்களையும் புறந்தள்ளிவிட்டு அவர் முன்னேறினார்.


இது இப்போது முழு உலகினதும் கண்ணெதிரே விரிந்து கிடக்கும் ஒரு புராணமாயிற்று. அறிவாற்றல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் இல்லா விட்டால் நடத்தை ரீதியாகவும் மற்றவர்களின் பார்வைக்காக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் எனது தலைவர் எனது துணிச்சல் மிக்க தலைவர் என நானும் அவரை பாராட்டிக் கொள்ள விரும்புகின்றேன். இம்ரான் துணிச்சல் மிக்கவர். எல்லா பாகிஸ்தானியர்களும் துணிச்சல் உள்ளவர்கள்.


வழமை போல் கருவில் இருந்து விளகாமல் மொழிபெயர்ப்பு சுவை சேர்க்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.