Header Ads



துருக்கித் தொப்பி அப்துல் காதர் கற்றுத் தந்த பாடங்கள்


- யாழ் அஸீம் -


கடந்த கால வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்கள்தான் எமது எதிர்கால வரலாற்றை உருவாக்குகிறது எனலாம். அந்த வகையில் சமூகத்துக்காக தம் சொந்த வாழ்க்கையைக் கூட பொருட்படுத்தாமல் சமூகத்துக்காக மட்டும் வாழந்து சென்ற பல மனிதர்களை... தலைவர்களை.. பெரியார்களை என்றும் மறந்துவிட முடியாது. தம் சமூகத்தின் மரபுரிமையைக் காப்பது தமது தொழிலை விட உயர்வானது என்பதை உலகுக்கு உணர்த்திய மாமனிதர் துருக்கித் தொப்பி அப்துல் காதர். அவர்களை எமது சமூகம் மறந்துவிட முடியாது. என்றும் மறக்க முடியாத பாடத்தை இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்துக்குக் கற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல. 


முதன்மையான பல கல்விமான்களைத் தந்த யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப் எம். சி. அப்துல் காதர் அவர்கள், மானிப்பாய் வீதியில், வளமாக வாழ்ந்த பிரபல்யமான குடும்பத்தில் 1875 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி முஹம்மது காஸிம் தம்பதியினருக்குப் பிறந்தார். யாழ்ப்பாணம் புதிய செட்டித் தெருவில் பிரபலமான உயர்தரமான பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியையும் பெற்றுக் கொண்ட இவர் உயர்கல்வி கற்பத்காக சென்னையிலுள்ள பிரெஸிடென்ஸி கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கலைமானிப் பட்டத்தைப் பெற்று நாடு திரும்பினார். ஆதன் பின்னர் சட்டத்துறையில் பயின்று அத்துறையில் தேர்ச்சி பெற்று, 1904 ஒக்டோபர் 7ம் திகதி இலங்கைத்தீவின் உயர்நீதிமன்ற அட்வக்கேட்டாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பட்டதாரியாகவும், அட்வகேட்டாகவும் விளங்கிய முதல் இலங்கை முஸ்லிம் என்ற பெருமை இவரைச் சேரும். 


கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொழில் செய்து வரக்கூடிய காலப்பகுதியில், 1905 ஆம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி, மேன்முiயீட்டு வழக்கொன்றில் நீதியரசர் சேர். சீ. பீ. லெயாட் முன்னிலையில் ஆஜராக வேண்டி தனது வழமையான உடையணிந்து, துருக்கித் தொப்பியுடன் உயர் நீதிமன்றத்தில் பிரசன்னமாயிருந்தார். அவ்வேளையில் ஓர் எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது நீதிமன்றத்துக்கு மரியாமை செலுத்தும் முகமாக அவர் அணிந்திருந்த தொப்பியை அல்லது சப்பாத்துக்களை கழற்ற வேண்டுமென நீதியரசர் சேர் சீ. பீ. லெயாட் பணித்தார். எனினும் உறுதிமிக்க உள்ளம் கொண்ட அப்துல் காதர் அவர்கள் இதுபற்றி அச்சம் கொள்ளாது, துருக்கித் தொப்பி அணிந்து வருவதென்பது நீதிமன்றத்துக்குச் செலுத்தும் இஸ்லாமிய மரியாதையாகும் என்றும் தன் காலணிகளைக் கழற்றுவது என்பது முடியாத காரியம் என்றும் கூறிய அவர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். ஆணையை ஏற்க மறுத்த போதும் பின்னர் நீதியரசரை அவரது பிரத்தியேக அறையில் சந்தித்து நிலைமையை விளக்கிய போதும் நீதியரசர் தமது பணிப்பில் உறுதியாகவே இருந்தார். 


தொப்பி மற்றும் காலணிகள் அணிவது இஸ்லாம் சமூகத்தின் மரபுரிமை என்பதால் அதனைக் காப்பது, தனது தொழிலை விட மேன்மையானது என்பதை உலகுக்கு உணர்த்தினார். அவரது துணிகரமான செயல், முஸ்லிம் சமூகத்தின் மெச்சுதலைப் பெற்றது மாத்திரமன்றி, ஒரு வெள்ளைக்கார நீதியரசரின் நடவடிக்கை சம்பந்தமாக பொதுமக்களின் எதிர்ப்பையும் தூண்டுவதாக அமைந்தது. எதற்கும் சளைக்காத அப்துல் காதர் அவர்கள் 30.06.1905, 29.07.1905 ஆகிய தினங்களில் இருவேறு மனுக்களைச் சம்ர்ப்பித்து நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வாதம் செய்தார். எனினும் 1905.09.19 அன்று உயர்நீதிமன்றம் துருக்கிப் தொப்பி அணிந்து நீதிமான்றம் வருவதை தடைசெய்து சட்டம் கொண்டு வந்தது. 


இத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்கள், யாவரும் ஒன்றினைந்து இத்தீர்ப்பை எதிர்த்து ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் உயர்மட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ள துருக்கித் தொப்பிக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. 


இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர், அப்போது சோனக சங்கத் தலைவராக இருந்த ஐ. எல். எம். அப்துல் அஸீஸ் அவர்களாவர். இவர்களது தலைமையில் இயங்கிய குழுவானது 1905 டிசம்பர் 31 ஆம் திகதியன்று மேற்படி பிரச்சினை தொடர்பில், மருதானை பள்ளிவாசல் முற்றவெளியில் மாபெரும் பொதுக் கண்டனக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டமானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அனைத்து முஸ்லிம் தலைவர்களும் ஒன்றுகூடிய மிகப்பெரிய கூட்டமாகக் கருதப்படுகிறது. கரீம் ஜீ ஜபர் ஜீ அவர்களின் ஆலோசனையின் பேரில், புகழ்பெற்ற இந்திய முஸ்லிம் பாரிஸ்டரான மௌலவி ரபீயுத்தீன் அகமது அவர்களை இக்கூட்டத்தில் பேசவரவழைக்கப்பட்டார். ஸேர் ராஸிக் பரீத் அவர்களின் தந்தையான கௌரவ டபிள்யூ. எம். அப்துர் ரஹ்மான அவர்கள் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். 


உணர்ச்சியூட்டும் தமது உரையில் பாரிஸ்டரான மௌலவி ரபீயுத்தீன் அஹ்மது அவர்கள் தாம் இந்திய உயர் நீதிமன்றத்தில் எப்பொழுதும் தலையணி அணிந்தே ஆஜரானதாகவும் அது பற்றி ஒரு போதும் கேட்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அவ்வாறிருக்க துருக்கித் தொப்பியணிந்து ஆஜராவது எப்படி நீதிமன்றத்தை அவமதிப்பதாக நீதியரசர் லயாட் கருத முடியும் என்பது தமக்கு விளங்கவில்லை எனவும் எடுத்துரைத்தார். பிரித்தானியரின் நீதிமுறைமையையும், நியாய தர்மத்தையும், மத உணர்ச்சியையும் பேணுவதில் அவர்களுக்கு உள்ள ஊக்கத்தையும் புகழ்ந்துரைத்த அவர் நீதியரசர் லயாடினது கட்டளையானது, பிரித்தானிய பரிபாலன முறைக்கு முற்றிலும் முரணானது எனக் கண்டித்தார். அத்துடன் இதுபற்றி பிரித்தானிய அரசுக்கு மேன்முறையீடு செய்ய வேண்டுமென அக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் முஸ்லிம் அல்லாதவர்களும் கூட முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். இப்பாரிய கூட்டமும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் அன்றைய பிரித்தானிய அரசையே யோசிக்க வைத்தது. 


முஸ்லிம்களின் மரபுரிமையை மறுக்கும் இத்தீர்ப்புக்கெதிராக முஸ்லிம் சமுதாயத்தின் இக்கூட்டு நடவடிக்கையும், போராட்டமும் வரலாற்றில், எதிர்கால சமுதாயத்துக்கான சிறந்த வழிகாட்டலும் பாடமுமாகும். மேற்கூறிய உரிமைப் போராட்டத்தை உயர்மட்ட நிலையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள 'துருக்கித் தொப்பிக்குழு' வொன்றும் நியமிக்கப்பட்டது. ஐ. எல். எம். அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இயங்கிய இக்குழுவில் அர்ப்பணிப்புடனும், தியாகத்துடன் செயற்பட்ட பிரமுகர்கள் பின்வருமாறு 


1. எம். எல். எம். ஸெய்னுதீன் ஹாஜியார் மாநகர சபை உறுப்பினர். 

2. முஹம்மது மாக்கான் மாக்கார் துருக்கிக் கொன்சல் 

3. எம். ஐ. முஹம்மது அலி, சமாதான நீதவான், துருக்கித் துணைக் கொன்சல். 

4. எம். எஸ். ஏம். மஹ்மூது ஹாஜியார். 

5. ஐ. எல். எம். நூர்தீன் ஹாஜியார் 

6. கரீம் ஜீ ஜபர் ஜீ 

7. அல்ஹாஜ் எஸ். எல். நெய்னா மரிக்கார் 

8. சீ. எம். மீராலெப்பை மரிக்கார் 

9. ஏ. எல். அப்துல் கரீம் 

10. ஓ. எம். எம். அஹ்மது லெப்பை மரிக்கார் 

11. அல்ஹாஜ் இப்ராஹிம் பின் அஹ்மது 

12. ஐ. எம். எம். அப்துல் அஸீஸ் செயலாளர், துருக்கித் தொப்பிக் குழு 

13. ஐ. எல். எம். முஹம்மது மீராலெப்பை மரிக்கார். 

14. என். டீ. எச். அப்துல் கபூர் 

15. பீ. ரீ. மீராலெப்பை மரிக்கார். 

16. என். ஈ. ஏம். பக்கீர் 

17. முஹம்மது அப்துல் காதர் ஆலிம் சாகிப் 

18. கே. இப்ராஹிம் சாஹிப் 

19. எம். கே. ஏம். முஹம்மது சாலி 

20. எம். ஏ. கச்சி முஹம்மது 

21. பீ. பி. உம்பிச்சி 


இவர்களது ஒன்றினைந்த போராட்டத்தின் காரணமாகவே, தொப்பியணிய முடியாது என்று எந்த நீதிமான்ற் உத்தரவிட்டதோ அதே நீதிமன்றம் தீர்ப்பையே திருத்தி எழுதி

தொப்பியணிந்து வர அனுமதி வழங்கியது. 


இலங்கையில் பிரித்தானிய பேரரசின் ஆட்சி நிலவிய ஒரு காலத்தில், பிரித்தானிய நீதியரசரொருவரின் ஆணையை ஏற்காமல் இலங்கை முஸ்லிம்களின் மரபுரிமையைக் காத்த பெருமை எம். சீ. அப்துல் காதர் அவர்களையே சாரும். கோண்ட கொள்கையில் தளராத உறுதி கொண்டு செயலாற்றிய எம். சீ அப்துல் காதர் அவர்களிடமிருந்தும், சகல விதமான பேதங்களையும் மறந்து உரிமைப் போராட்டத்தில் ஒன்றினைந்து போராடிய அந்த முஸ்லிம் தலைவர்களிடமிருந்தும், தற்போதைய முஸ்லிம் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். 


அப்துல் காதர் அவர்கள் ஓர் அட்வகேட் மாத்திரமன்றி, முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பல துறைகளிலும் ஈடுபட்ட ஒருவராவார். கொழும்பு அல் மத்ரஸதுல் ஸாஹிராவின் முகாமைத்துவப் பதவியையும் சிறிது காலம் வகித்தார். 


எம். சீ. அப்துல் காதர் அவர்கள் அரசியல் அறிவுத் திறன் மிக்கவராக இருந்தார். இலங்கை அரசியலமைப்பைத் திருத்துவதற்காக, லண்டனிலுள்ள குடியேற்ற நாட்டு அலுவலகத்துக்குச் சென்ற இஸ்லாம் தூதுகோஷ்டியில் அவரும் அங்கம் வகித்தார். திருவாளர்கள் ரீ. பீ. ஜாயா, எம். எம். மஹ்ரூபு. எம் குலாம் ஹூசைன் ஆகியோரும் அத்தூது கோஷ்டியில் சென்றவர்களாவார். தேர்தல் மூலம் அரசாங்க சபையில் குறைந்தது மூன்று இனவாரியான ஆசனங்களை முஸ்லிம்களுக்காக ஒதுக்க வேண்டுமெனக் கேட்பதே அத்தூது கோஷ்டியின் பயனாக இருந்தது. 


மேலும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது அப்துல் காதர் அங்கம் வகித்த ஒரு குழுவின் சிபாரிசின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டது. அத்துடன் மதல் காதிமார் சபையிலும் அவர் அங்கம் வகித்தார். அவர் எங்கு சேவை செய்தாலும் தியாக உணர்வுடனும், பொதுநலன் கருதியும் செயற்பட்டார். 


ஆ. ஊ. அப்துல் காதர் அவர்கள் கொழும்பில் தனது சட்டத்தொழிலை நடாத்தி வந்த காலத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த அவரது நண்பரான புரக்டர் ஏ. எம். சரீப் அவர்களது அறிவுரையின் பிரகாரம் தனது குடும்பத்துடன் காத்தான்குடியில் குடியேறி தனது தொழிலில் ஈடுபட்டார். நாற்பது ஆண்டுகள் சட்டத்துறைக்கும் தமது சமூகத்துக்கும் அர்ப்பணித்ததோடு மட்டுமல்லாது, அரசியல் துறையிலும் பெரும்பங்காற்றினார். யாழ்ப்பாணத்த பிறப்பிமாகக் கொண்ட அப்துல் காதர் அவர்கள் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர். ஏம். இமாம் அவர்களது தாயாரின் பாட்டனாராவார். மேலும் காத்தான்குடியைச் பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரனியும், பதில் நீதவானுமாக கடமையாற்றிய மர்ஹூம் நூர்தீன் அவர்கள் அப்துல் காதல் அவர்களுடைய பேரனாவார். 


ஆ. ஊ. அப்துல் காதர் அவர்கள் தமது 71 வது வயதில் 1946 ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி வபாத்தானார். அன்னார் வாழ்ந்த வீடு பெஸ்காப் (குநணஉயி) என அழைக்கப்படுகிறது. இவரது ஞாபகர்த்தமாக அவரது வீடு அமைந்துள்ள வீதியின் பெயர் அட்வகேட் அப்துர் காதர் வீதி என அழைக்கப்படுகிறது. வெள்ளைக்கார ஆட்சியில் அவர்களது துரைத்தனத்துக்கு எதிராகப் போராடிய ஒரு வீரராக அடையாளப்படுத்தப்படும் அப்துல் காதர் அவர்களின் உருவப்படம் இஸ்லாமிய கலாசார நிலையத்தில் (ஆஐஊர்) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது அதிதியாக கலந்து கொண்ட கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா அவர்களின் உரை புகழ்பெற்ற ஒன்றாகும். அன்னாருக்கு 1995 ம் ஆண்டு இலங்கை அரசாங்கம், தேசிய கௌரவம் வழங்கி நினைவு முத்திரை ஒன்றை வெளியிட்டு கௌரவித்தது. தமது சமூகத்துக்காக, சொந்த வாழ்க்கையை தொழிலைப் பொருட்படுத்தாமல் சமூகத்துக்காக மட்டும் வாழ்ந்து விட்டுச் சென்ற மாமனிதர் அப்துல் காதர் அவர்களுக்கும் அவரோடிணைந்து செயற்பட்ட அக்குழுவினருக்கும் அல்லாஹ் மேலான பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக. 



No comments

Powered by Blogger.