கோடிக்கணக்கான இந்திய ரூபாய்களை, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்த தடை காரணமாக டாலரில் வர்த்தகம் மேற்கொள்வது பாதிக்கப்பட்டது. பொருளாதார தடையை அடுத்து குறைந்த விலையில் தனது கச்சா எண்ணெயை விற்க ரஷ்யா முன்வந்ததால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை அதிக அளவில் வாங்கத் தொடங்கின.
இந்தியாவிடம் இருந்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு கச்சா எண்ணையை ரஷ்யா ஏற்றமதி செய்து வந்தது. கடந்த 2022-23 நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2.8 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் ஏற்றுமதியில் இது 11.6 சதவீதமாக இருந்தது. அதேநேரத்தில், இதே காலகட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மேற்கொண்ட இறக்குமதி 41.56 பில்லியன் டாலராக உயர்ந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 16.80 லட்சம் பேரல் கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 6 மடங்கு அதிகம். தொடக்கத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் ரூபாய் - ரூபிளில் வர்த்தகம் மேற்கொள்ள முடிவு செய்தன. எனினும், போர் காரணமாக சந்தையில் ரூபிளுக்கு ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்து வந்தது.
இந்திய ரூபாய் மூலம் ரஷ்யா வர்த்தகத்தை தொடர்ந்த நிலையில், ரஷ்யாவுக்கு சொந்தமான பல நூறு கோடி ரூபாய்கள் தற்போது இந்திய வங்கிகளில் உள்ளன. ரஷ்யாவுக்கான இந்தியாவின் இறக்குமதி அதன் ஏற்றுமதியைவிட 5 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரூபாய்களை போதுமான அளவு பயன்படுத்த முடியாத நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ், "எங்களுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய்கள் இந்திய வங்கிகளில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வேண்டுமானால், அவற்றை வேறு நாணயத்துக்கு மாற்ற வேண்டிய தேவை உள்ளது. அதுதான் தற்போதைய பிரச்சினை. அதுகுறித்தே விவாதித்து வருகிறோம்" என தெரிவித்தார்.
அமெரிக்காவின் பொருளாதார தடை விலக்கப்பட்டால், ரூபாயை டாலரில் மாற்றிக்கொள்ளவும், அதன் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு அவற்றைப் பயன்படுத்தவும் முடியும். அதுவரை என்ன செய்வது என்பதே ரஷ்யாவின் முன் உள்ள மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
Post a Comment