Header Ads



அக்குறணை குண்டுப் புரளி - மெள­ல­வி சாஜிதின் கைதின் பின்னால் இருந்த உண்மை என்ன..?


- எம்.எப்.அய்னா -


நோன்புப் பெரு­நாளை அண்­மித்து கண்டி அக்­கு­றணை பகு­தியும் அதனை தொடர்ந்து இலங்­கையின் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­தி­களும் ஒரு வகை அச்­சத்தில் மூழ்­கி­யி­ருந்­தது.


இதனால் ரமழான் இறுதிக் கட்ட வணக்க வழி­பா­டு­களும் சில இடங்­களில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. அக்­கு­றணை மற்றும் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­தியில் குண்டுத் தாக்­குதல் நடாத்­தப்­ப­டலாம் என்ற தகவல் ஒன்றே அதற்­கான கார­ண­மா­னது, பொது மக்கள் பாது­காப்பு அமைச்­சுக்கு கிடைத்த அந்த தகவல் தொடர்பில் பின்னர் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் இணைப்புப் பிரிவின் பணிப்­பா­ளரின் முறைப்­பாட்­டுக்கு அமைய விசா­ரணை ஒன்று சி.ஐ.டி.யினரால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.


விசா­ர­ணையில் நடந்­தது என்ன?

சி.ஐ.டி.யினர் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்ள தக­வல்­களின் படி, கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்­பகல் 12:29 மணிக்கு ‘Secret Information About Bombing Attacks Tomorrow Night at Akurana’ என தகவல் ஒன்று அனுப்பப்­பட்­டுள்­ளது.


பின்னர் ஏப்ரல் 19 ஆம் திகதி முற்­பகல் 11:21 மணிக்கு அந்த தகவல் மேல­தி­க­மாக ‘ Dear 118 agents, I sent you a massage that Akurana’ town is being bombed before Muslim Avurudu. those who were to do that bomb attacked knew this matter. So they are changing their plan secretly. They are trying to do this in response to the Easter attack four years ago. They first choose Akurana’ to attack but now they are targeting a villages where majority of Muslims live. You can stop it if you try best, HAIL LUCIFER HAIL THE LIGHT ‘ எனத் தெரி­வித்து அனுப்பப்­பட்­டுள்­ளது.


இந்தத் தக­வல்கள் அனைத்தும் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் கீழ் செயற்­படும் 118 எனும் அவ­சர அழைப்பு இலக்­கத்தின் இணைய வழி இணைப்­பான https://118.pubsec.gov.lk எனும் முக­வ­ரிக்கே அனுப்­பப்பட்­டுள்­ளன.


முதலில், அக்­கு­ற­ணைக்கும் பின்னர் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் நாட்டின் ஏனைய பகு­தி­க­ளுக்கும் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ரவில் பாது­காப்பை பலப்­ப­டுத்­திய பொலி­சாரும் அதி­ரடிப் படை­யி­னரும் தகவல் தொடர்பில் அனைத்து உளவுப் பிரி­வு­களைக் கொண்டும் மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். இதன்­போது குறித்த தக­வலில் கூறப்­பட்­டதைப் போன்று தாக்­கு­த­லொன்­றுக்கு வாய்ப்­புக்கள் இல்லை என தெரிய வந்­ததும், பொலிஸ் மா அதிபர் குறித்த விசா­ர­ணை­களை சி.ஐ.டி.யிடம் கைய­ளித்­த­துடன், தகவல் வழங்­கி­யவர் தொடர்பில் பொலிசார் கவனம் செலுத்­த­லா­யினர்.


அதன்­படி இவ்­வி­சா­ர­ணைகள் சி.ஐ.டி.யின் கனிணி குற்ற விசா­ரணைப் பிரிவின் சமூக வலைத்­தள பிரிவின் பொறுப்­ப­தி­காரி உப­பொலிஸ் பரி­சோ­தகர் ஆர்.ஏ.எம். ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. https://118.pubsec.gov.lk எனும் இணைய வழி தகவல் வழங்க முடி­யு­மான முக­வ­ரிக்கு தகவல் வழங்­கி­ய­வரை கண்­டு­பி­டிக்க சி.ஐ.டி. சிறப்புக் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் முதலில் அந்த முக­வ­ரியின் நிலை ஆரா­யப்­பட்­டது. அதன்­படி https://118.pubsec.gov.lk எனும் தகவல் கட்­ட­மைப்பு ICTA எனும் நிறு­வ­னத்தின் சேர்­வரில் Host செய்­யப்­பட்­டுள்­ள­மையை சி.ஐ.டி.யினர் கண்­ட­றிந்­தனர். அதன்­படி அந்த கட்­ட­மைப்பின் உள் நுழைதல் முக­வரி 43.224.126.135 எனவும் அக்­கட்­ட­மைப்­புக்குள் குறித்த தக­வலை வழங்க நுழைந்த தொலை­பே­சியின் இணைய நுழைவு முக­வரி 10.250.4.251 எனவும் சி.ஐ.டி.யினர் கண்­ட­றிந்­தனர்.


அதன்­படி தொலை­பேசி சேவை வழங்கும் நிறு­வனம் ஒன்­றிடம் இருந்து பய­னரின் தர­வு­களை சி.ஐ.டி. அதி­கா­ரிகள் சேக­ரித்­தனர். அப்­போது குறித்த தக­வலை பொது மக்கள் பாது­காப்பு அமைச்­சுக்கு அனுப்­பி­யவர் 076 09XXXXX எனும் தொலை­பேசி இலக்­கத்­தையே அதற்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ள­மையும், அது 2001XXXXXXXX எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய கசா­வத்த, பட்­டு­கொ­டவை சேர்ந்த மொஹம்மட் இஸ்­ஸதீன் மொஹம்மட் சாஜித் எனவும் தெரி­ய­வந்­துள்­ளது.


இளம் மெள­ல­வி­யான சாஜித்தை அதன்­ப­டியே சி.ஐ.டி. குழு­வினர் அவ­ரது வீட்டில் வைத்து, நோன்புப் பெருநாள் தினத்தின் அதி­காலை வேளையில் கைது செய்­தனர்.

அதன்­படி சாஜித்தின் ஐ போன் 8+ ரெட் ரக கைய­டக்கத் தொலை­பே­சி­யையும் கைப்­பற்றி பரி­சீ­லனை செய்­தனர். அதன்­போது அந்த தொலை­பே­சி­யி­லி­ருந்தே தகவல் அனுப்பப்­பட்­டுள்­ளதை விசா­ர­ணை­யா­ளர்கள் உறுதி செய்­துள்­ளனர்.


குறிப்­பாக பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் 118 என ஆரம்­பிக்கும் அந்த இணைய தகவல் தளத்­துக்கு பொலிஸ் இணை­யத்­தளம் ஊடாக சென்றே நுழைந்­துள்­ள­மையும் தொலை­பே­சியின் ஹிஸ்ட்­ரியை பரி­சீ­லித்­த­போது பொலிசார் கண்­ட­றிந்­துள்­ளனர். இது ஏப்ரல் 18 ஆம் திகதி நடந்­துள்­ள­துடன், ஏப்ரல் 20 ஆம் திகதி முகப்­புத்­தக கணக்­கூ­டாக ‘ Akurana bombing’, ‘ Akurana’, ‘Akurana’ Alert’ என சாஜித் தக­வல்­களை அடிக்­கடி தேடி­யுள்­ள­மை­யையும் சி.ஐ.டியினர் அவ­தா­னித்­துள்­ளனர்.


இதுதான் சாஜித்தின் கைதின் பின்னால் சி.ஐ.டி. செய்த விசா­ரணை நட­வ­டிக்­கை­யாகும்.


குற்­றச்­சாட்டு :

சாஜித்தை கைது செய்த பின்னர் சி.ஐ.டி.யினர் அவர் மீது தண்­டனை சட்டக் கோவையின் 120,175 மற்றும் 485 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினிக் குற்­றங்கள் தொடர்­பி­லான சட்­டத்தின் 6 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழும், பொலிஸ் கட்­டளைச் சட்­டத்தின் 98 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக சி.ஐ.டி.யினர் குற்றம் சாட்­டி­யி­ருந்­தனர்.


இதன்­போது சாஜித்­திடம் வாக்கு மூலம் ஒன்­றினை பதிவு செய்­தி­ருந்த சி.ஐ.டி.யினர் அதில் கூறப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் பெரி­தாக அலட்­டிக்­கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை.


அதா­வது சாஜித்தின் வாக்கு மூலத்தில், தனக்கு மூன்றாம் தரப்­பொன்று வழங்­கிய தக­வ­லையே இவ்­வாறு பொது மக்கள் பாது­காப்பு அமைச்­சுக்கு அனுப்­பி­ய­தாக சாஜித் தமது விசா­ர­ணையில் குறிப்­பிட்­ட­தாக சி.ஐ.டி.யினரின் முதல் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யி­லேயே கூறப்­பட்­டுள்­ளது.


ஆம் அதன் பின்னால் ஒரு பெரிய கதை இருக்­கின்­றது. சாஜித்­துக்கு குறித்த தக­வலை பொது மக்கள் பாது­காப்பு அமைச்­சுக்கு வழங்க மூன்றாம் தரப்­பொன்று அல்­லது நபர் ஒருவர் அல்­லது வலை­ய­மைப்­பொன்று பாரிய அழுத்தம் பிர­யோ­கித்­துள்­ளது என்­ப­தற்­கான சான்­றுகள் தற்­போது வெளிப்­பட ஆரம்­பித்­துள்­ளன.


உண்­மையில் இந்த ‘குண்டு வெடிப்பு புரளி’ தொடர்­பி­லான தகவல் அளிப்பு, ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நடந்­தி­ருந்­தாலும், அதன் வர­லாறு ஏப்ரல் முதல் வாரத்­தி­லேயே ஆரம்­பிக்­கின்­றது.


வீட்­டி­லி­ருந்தே சம்­பா­திக்­கலாம் :

அதா­வது முகப்­புத்­த­கத்தின் ஊடாக ‘வீட்­டி­லி­ருந்தே சம்­பா­திக்­கலாம்’ எனும் தலைப்பில் வந்த ஒரு விளம்­ப­ரத்­தி­லி­ருந்து இந்த கதை ஆரம்­பிக்­கின்­றது.


அதா­வது எம்.ஜி.பி.பி. எனும் பெய­ரி­லான அந்த முக­வ­ரியில் கூறப்­பட்ட விட­யங்­க­ளுக்கு அமைய, சாஜித்தும் அந்த இணைய கட்­ட­மைப்பில் இணைந்­துள்ளார். ஆரம்­பத்தில் 1000 , 2000 என சிறிய தொகையை இட்டு, வீட்­டி­லி­ருந்தே இலாபம் ஈட்­டலாம் எனும் எண்­ணக்­க­ருவுக்கு அமைய இலா­பத்தை அடைய சாஜித் முயன்­றுள்ளார்.


இவ்­வாறு முகப்­புத்­தக விளம்­பரம் ஊடாக இணைந்த சாஜித்­துக்கு இணைய பக்­கத்தில் பிரத்­தி­யேக கணக்­கொன்று ஆரம்­பிக்­கப்­பட்டு, அதில் சாஜித்­துக்­கான இலாபம், வரவு வைக்­கப்­ப­டு­வ­தைப்­போன்று காட்­டப்­பட்­டுள்­ளது.


இது ஒரு மோச­டி­யான நட­வ­டிக்கை என்­பதை அறி­யாத சாஜித், தனது வட்ஸ் அப் இலக்­கத்­துடன் அவ்­வ­லை­ய­மைப்­பி­லி­ருந்து பேசிய ஒரு­வ­ரிடம் வைப்­புக்கள் தொடர்பில் விசா­ரித்த பின்­ன­ரேயே சிறிது சிறி­தாக வைப்­புக்­களை செய்­துள்ளார்.


தனது வைப்­புக்­க­ளுக்கு இலாபம் இணைய வங்கிக் கணக்­கி­லேயே வரவு வைக்­கப்­பட்­டுள்­ள­தாக காட்­டப்­பட்டு வந்­துள்ள நிலையில், சாஜித் அதனை உண்மை என நம்­பி­யுள்ளார்.


5 வங்கிக் கணக்­குகள் :

அதன் பிர­தி­பலன் தனது தந்­தை­யாரின் வங்கிக் கணக்கில் இருந்த ஒரு தொகை பணத்­தையும் கட்டம் கட்­ட­மாக சாஜித் அந்த இணைய நட­வ­டிக்­கையில் முத­லீடு செய்­துள்ளார்.

இதற்­காக சாஜித்­துக்கு 5 பேரின் பெயரில் அடங்­கிய வங்கிக் கணக்­கி­லக்­கங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.


தனியார் வங்­கி­யொன்றின் பூகொடை கிளையில் எஸ்.எம்.டி. பியூமி எனும் பெயரில் உள்ள 166020085288 எனும் இலக்கம், அதே வங்­கியின் தண்­டா­வெளி கிளையில் உள்ள 164020042560 எனும் இலக்கம் கொண்ட கே.சோபிகா எனும் பெயரில் உள்ள வங்கிக் கணக்­குக்கும், அதே வங்­கியின் புறக்­கோட்டை கிளையில் உள்ள 250020129496 எனும் எப்.ஏ.எப். அஸ்ரா எனும் பெயரில் உள்ள வங்கிக் கணக்­கி­லக்­கத்­துக்கும், அதே வங்­கியின் கொட்­டாவ கிளையில் மனீஷா வெத­சிங்க எனும் பெயரில் உள்ள 098020328387 எனும் வங்கிக் கணக்­குக்கும், மக்கள் வங்­கியின் அளுத்­கம கிளையில் உள்ள 084200100044497 யூ.கே. தருஷி நிசன்­சலா எனும் வங்கிக் கணக்­குக்கும் இந்த பணத் தொகை, வழங்­கப்­பட்ட அறி­வு­றுத்தல் பிர­காரம் சாஜித்தால் வைப்புச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.


பணத்தை திருப்பி கேட்­டதால் வந்த வினை :

இந்­நி­லை­யி­லேயே, சாஜித்தின் தந்தை தனது வங்கிக் கணக்கில் பணம் குறை­வ­டை­வதை கண்டு, அது தொடர்பில் வங்கிக் கணக்கை கையாளும் மக­னிடம் வின­வி­யுள்ளார்.


இதனால் கல­வ­ர­ம­டைந்த சாஜித், இணையம் ஊடா­கவும், வட்ஸ் அப் ஊடா­கவும் குறித்த வைப்­பு­க­ளுக்­காக தொடர்­பு­கொண்ட இலக்­கத்­துக்கு அழைத்து, தனக்கு இலாபம் வேண்டாம் எனவும் தனது முத­லீட்டை மட்டும் மீளத் தரு­மாறு கேட்­டுள்ளார்.


எனினும் அதற்கு மறு புறத்தே உட­ன­டி­யாக தர முடி­யாது என பதில் கிடைத்­துள்­ள­துடன், முத­லீடு செய்த இலட்­சக்­க­ணக்­கான ரூபாவை மீளப் பெற வேண்­டு­மாயின் தாம் சொல்­வதைச் செய்­யு­மாறு சாஜித் வற்­பு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.


அதன் பிர­கா­ரமே, பொது மக்கள் பாது­காப்பு அமைச்­சுக்கு அனுப்பப்­பட்ட தகவல், அந்த இணைய முத­லீட்டு மோசடிக் கும்­பலால் தயா­ரிக்­கப்­பட்டு சாஜித்­துக்கு அனுப்­பப்­பட்டு, 118 என ஆரம்­பிக்கும் இணைய முக­வ­ரியும் வழங்­கப்­பட்டு அதற்கு அனுப்­பு­மாறு பணிக்­கப்­பட்­டுள்­ளது.


அதன்­படி சாஜித் அதனை செய்­த­மையே அவரை கைது செய்யும் அள­வுக்கு விட­யத்தை பார­தூ­ர­மாக்­கி­யது.


எனினும் சாஜித், குறித்த வங்கிக் கணக்­கி­லக்கம், தொலை­பேசி இலக்கம் உள்­ளிட்­ட­வற்றை சி.ஐ.டி.யின­ருக்கு வழங்­கி­யுள்­ள­போதும் இது­வரை, அந்த குண்டுப் புரளி தக­வலை தயா­ரித்­த­வர்­களை சி.ஐ.டி. நெருங்­கக்­கூட இல்லை என்­பது கவ­லை­யான உண்­மை­யாகும்.


இந்­நி­லையில், சுமார் 16 நாட்கள் வரை விளக்­க­ம­றி­யலில் இருந்த சாஜித் தற்­போது பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், இந்த இணைய வழி மோசடி தொடர்பில் பொலி­சுக்கு பிரத்­தி­யேக முறைப்­பாட்­டினை செய்ய தயா­ராகி வரு­வ­தா­கவும் அறிய முடி­கின்­றது.


நீதி­மன்ற நட­வ­டிக்கை :

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே கண்டி -அக்­கு­றணை, 6 ஆம் கட்டை பகு­தியில் பள்­ளி­வாசல் ஒன்றை இலக்கு வைத்து குண்டுத் தாக்­குதல் நடாத்­தப்­ப­டலாம் என்றும் முஸ்லிம் கிரா­மங்­களை இலக்கு வைத்து தாக்­குதல் நடக்­கலாம் என்றும் தகவல் வழங்­கி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்ட மொஹம்மட் இஸ்­ஸதீன் மொஹம்மட் சாஜித் எனும் சந்­தேக நப­ருக்கு எதி­ரான பீ 90351/01/2023 எனும் இலக்­கத்தின் கீழான வழக்கு கடந்த 2 ஆம் திகதி விசா­ர­ணைக்கு வந்­தி­ருந்­தது. இதன்­போதே சாஜித்தை பிணையில் விடு­வித்து கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.


“சந்­தேக நபர் தனக்கு கிடைக்கப் பெற்ற தக­வலை பொது வெளியில் எங்கும் பகிர்ந்து கொள்­ள­வில்லை. அவர் அதனை உரிய அதி­கா­ரி­யான பொது மக்கள் பாது­காப்பு அமைச்­சு­ட­னேயே பகிர்ந்து கொண்­டுள்ளார்.


பொறுப்­புள்ள ஒரு குடி­மகன் செய்ய வேண்­டிய வேலை­யையே அவர் செய்­துள்ளார். அவ்­வா­றான நிலையில், அவ­ருக்கு எதி­ராக ஐ.சி.சி. பி.ஆர். எனும் சிவில், அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்டு முன் வைக்க முடி­யாது.


எனவே அந்த குற்­றச்­சாட்டை நீதி­மன்றம் நிரா­க­ரிக்­கின்­றது” என அறி­வித்தே கொழும்பு பிர­தான நீதிவான் பிர­சன்ன அல்விஸ், சி.ஐ.டி.யின் ஆட்­சே­ப­னத்தை நிரா­க­ரித்து மொஹம்மட் இஸ்­ஸதீன் மொஹம்மட் சாஜித்தை பிணையில் விடு­வித்தார்.

பொய்­யான தக­வலை வழங்­கி­யதன் ஊடாக, இனங்­க­ளுக்­கி­டையே முரண்­பாட்டு நிலையை ஏற்­ப­டுத்த முயன்­றமை தொடர்பில் குற்றம் சாட்டி, சி.ஐ.டி.யின் கணினிக் குற்ற விசா­ரணைப் பிரிவின் சமூக ஊட­கங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­யா­ளர்கள் சாஜித்தை கைது செய்­தி­ருந்த நிலையில் அவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில், இந்த வழக்கு கொழும்பு பிர­தான நீதிவான் பிர­சன்ன அல்விஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.


இதன்­போது சி.ஐ.டி.யின் சமூக வலைத்­தள விவ­கார விசா­ரணைப் பிரி­வினர் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யினை மன்றில் சமர்ப்­பித்­தனர்.


சட்­டத்­த­ரணி ருஷ்­தியின் வாதம் :

இந்­நி­லையில் விளக்­க­ம­றி­யலில் இருந்து சாஜித் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்டு ஆஜர் செய்­யப்­பட்ட நிலையில், அவ­ருக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான ரிஸ்வான் உவைஸ், வஸீமுல் அக்ரம் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.


இதன் போது, சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் முன் வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு தவ­றா­னது எனவும் அது அடிப்­படை அற்­றது எனவும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் வாதிட்டார்.

குறித்த சட்­டத்தின் 3 ஆம் அத்­தி­யா­யத்தை விளக்­கிய சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், அதன் கீழ் சாஜித் மீது குற்றம் சுமத்த முடி­யாது என குறிப்­பிட்டார்.


டெனி எதிர் சிறிமல் வழக்கின் தீர்ப்­பினை முன்­னி­றுத்தி வாதங்­களை முன் வைத்த சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் உள்ள குற்­றச்­சாட்­டி­லி­ருந்து சந்­தேக நபரை விடு­விக்க வேண்டும் எனவும் கோரினார்.


அத்­துடன் சந்­தேக நப­ருக்கு, இணையம் ஊடாக கிடைக்கப் பெற்ற தக­வலை அவர் எந்த பொது வெளி­யிலும் பகி­ர­வில்லை என்­பதை சுட்­டிக்­காட்­டிய சட்­டத்­த­ரணி அதனை அவர் பாது­காப்பு அமைச்­சுக்கே அறி­வித்­த­தா­கவும், அவ்­வாறு அறி­விக்­காமல் இருந்து ஏதேனும் அசம்­பா­விதம் இடம் பெற்­றி­ருந்தால் தனது சேவை பெறு­நரை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தகவல் வழங்க தவ­றி­ய­மைக்­காக கைது செய்­தி­ருப்­பார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார்.


அத்­துடன் தனக்கு கிடைத்த தகவல் உண்­மையா? பொய்யா? என விசா­ரித்து தக­வலை பாது­காப்பு அமைச்­சிடம் கூறும் அள­வுக்கு உளவுத் துறையோ வேறு பாது­காப்பு தரப்போ தனது சேவை பெறு­நரின் கட்­டுப்­பாட்டில் இல்லை என சுட்­டிக்­காட்­டிய அவர், பொது மக்கள் குழப்பம் அடையும் வகையில் அத்­த­கவல் பரவ பொலி­ஸாரின் நட­வ­டிக்­கையே கார­ண­மா­னது என சுட்­டிக்­காட்­டினார்.


அத்­துடன் தனக்கு அந்த தக­வலை அளித்­த­வரின் தொலை­பேசி இலக்கம், வங்கிக் கணக்­கி­லக்கம் உள்­ளிட்­ட­வற்றை இணைத்தே தனது சேவை பெறுநர் தகவல் அளித்­தி­ருந்த நிலையில், அத்­த­க­வலை மையப்­ப­டுத்தி ஏன் இது­வரை அந்த நபர் அல்­லது நபர்­களை அடை­யாளம் காண சி.ஐ.டி.யினர் தவ­றி­யுள்­ளனர் என சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் கேள்வி எழுப்­பினார்.


இந்த விசா­ர­ணைகள் ஒரு கட்­டத்­துக்கு அப்பால் நக­ராமல் இருப்­பது சந்­தே­கங்­களை தோற்­று­விப்­ப­தா­கவும், இந்த தக­வலின் பின்னால் உள்­ள­வர்கள் யார், அவர்­களின் நோக்கம் என்ன என்­பது குறித்து கண்­டிப்­பாக விசா­ரணை அவ­சியம் எனவும் அது குறித்த விசா­ரணை தீவி­ரப்­ப­டுத்த வேண்டும் எனவும் வாதிட்டார்.


எனவே சாட்­சி­யா­ள­ராக இருக்க வேண்­டிய தனது சேவை பெறு­நரை சிறை வைப்­பது அபத்­த­மா­னது என அவர் சுட்­டிக்­காட்­டினார்.


எனினும் இதற்கு பதி­ல­ளித்த சி.ஐ.டி. அதி­கா­ரிகள் பிணை­ய­ளிக்க கடும் ஆட்­சே­பனை வெளி­யிட்­டனர். விசா­ரணை நிறைவு பெற­வில்லை எனக் கூறி அவர்கள் சந்­தேக நபரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கோரினர்.


குறித்த தக­வலால் ஏற்­பட்ட நிலை­மைகள் பார­தூ­ர­மா­னது என அவர்கள் குறிப்­பிட்­டனர்.

எனினும் இரு தரப்பு வாதங்கள், சம்­பவம் தொடர்­பி­லான சந்­தர்ப்ப விட­யங்­களை ஆராய்ந்த நீதிவான் பிர­சன்ன அல்விஸ், டெனீ எதிர் சிறிமல், தயா­நந்த எதிர் வீர­சிங்க, உதய பிரபாத் கம்­மன்­பில எதிர் எம்.டி.சி.பி. குன­தி­லக உள்­ளிட்ட 5 உயர் நீதி­மன்ற தீர்க்­கப்­பட்ட வழக்குத் தீர்ப்­புக்­களை ஆதா­ர­மாக எடுத்த நீதிவான், பொலிசார் கூறு­வதை மட்டும் வைத்­துக்­கொண்டு ஒரு­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்கக் கூடாது என திறந்த மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.


இந்த வழக்கை பொறுத்­த­வரை பிணை வழங்க நீதி­வா­னுக்கு தடை­யாக இருப்­பது சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்டே என சுட்­டிக்­காட்­டிய நீதிவான், அக்­குற்­றச்­சாட்டு எந்­த­ளவு நியா­ய­மற்­றது என்­பதை மேற் குறித்த வழக்குத் தீர்ப்­புக்­க­ளுடன் ஒப்­பீடு செய்து விளக்­கினார்.

அதன்­படி, பொறுப்­புள்ள குடி மக­னாக தனக்கு கிடைத்த தக­வலை சந்­தேக நபர் உரிய அதி­கா­ரிக்கே அனுப்­பி­யுள்­ளமை தெளி­வா­வ­தாக நீதிவான் திறந்த மன்றில் கூறினார்.

அவ்­வாறு பொறுப்­புடன் செயற்­பட்ட ஒரு­வரை ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் கைது செய்­வது, பொது மக்கள் பொலி­ஸா­ருக்கு தகவல் அளிக்க அச்­சப்­படும் சூழலை உரு­வாக்கும் எனவும், அதனால் பொது மக்கள் குற்றம் ஒன்று நடப்­பதை பார்த்துக் கொண்டு இருப்­பார்­களே தவிர தகவல் வழங்க முன் வர மாட்­டார்கள் என சுட்­டிக்­காட்­டினார்.


இங்கு சந்­தேக நபர் மீது ஐ.சி.சி.பி.ஆர். பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை அவரை விளக்­க­ம­றி­யலில் வைப்­ப­தற்­கான நோக்­கத்­துக்­காக என்­பது தெளி­வா­வ­தாக குறிப்­பிட்ட நீதிவான் அக்­குற்­றச்­சாட்டை நிராகரித்தார்.


அதன்படியே ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை முடியவில்லை என பொலிஸார் அறிவித்ததால், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க தீர்மானிப்பதாக அறிவித்த நீதிவான், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணை ஒன்றில் விடுவித்து வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


இது ஒரு பாடம் :

உண்மையில் இன்று பரவலாக அனைவரும் இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நிலையில், வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம், முதலீட்டுக்கு அதிக இலாபம் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சி வசனங்கள் ஊடாக இணையம் ஊடான கொடுக்கல், வாங்கல், வர்த்தக நடவடிக்கைகள் வலையமைப்பு ரீதியாக இடம் பெறுகின்றன. இவற்றில் எத்தனை நடவடிக்கைகள் சட்ட ரீதியானவை, உண்மையானவை என்பதை ஆராயாமலேயே பலரும் அவற்றுடன் தொடர்புபடுகின்றனர். அதன் விளைவு பலர் பல இலட்சங்கள் வரை இழக்கின்றனர்.


இவ்வாறான முறைப்பாடுகள் ஏராளம் சி.ஐ.டி.யில் பதிவாகியுள்ளன. பலர் இழந்த தொகையை வெளியே சொல்லாமல் விதியை நொந்து கொண்டு இருக்கின்றனர்.

சாஜித்தின் விவகாரத்திலும், நடந்தது அதுதான். குறித்த வலையமைப்பினர் பகிர்ந்த தகவல் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டதாக இருந்தமையால், அதில் சாஜித் கைதாகவேண்டி இருந்ததாகவே தெரிகின்றது..


எனவே இணைய வழி கொடுக்கல், வாங்கல்கள், முதலீடுகள் தொடர்பில் வெறுமனே இலாபத்தை மட்டும் பார்த்து செயற்படாமல் அதன் உண்மைத் தன்மை, சட்டத் தன்மைகளையும் ஆராய்ந்து செயற்படுவது நன்மை பயக்கும்.- Vidivelli

1 comment:

Powered by Blogger.