“என் மீது அன்பு வைத்த ரசிகர்களுக்கு, நான் திருப்பி அளிக்கும் பரிசு" - தோனி உருக்கம்
சென்னை அணியின் கேப்டன் ‘கூல்’ தோனி பேச வந்த தருணம். ஆமதாபாத் மைதானத்திலிருந்த ஒரு லட்சம் இதயங்களில் இருந்த அந்த ஒரு கேள்வியை ரசிகர்களின் சார்பாக தோனியிடம் முன்வைத்தார் தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே.
“கடந்தமுறை நீங்கள் தோற்றபோது நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். சிஎஸ்கே என்ற பெரிய பாரம்பரிய அடையாளத்தை உருவாக்கி விட்டு செல்கிறீர்களா என்று நான் கேட்ட போது, நான் இன்னும் செல்லவில்லை, இங்குதான் இருக்கிறேன் என்று சொன்னீர்கள்,” என்று ஹர்ஷா போக்லே தோனியிடம் சொன்னார்.
அதற்கு தோனி பதிலளித்தபோது மைதானமே ‘தோனி, தோனி’ என்ற முழக்கத்தில் மூழ்கியது.
“என் மீது அன்பு வைத்த ரசிகர்களுக்கு நான் திருப்பி அளிக்கும் பரிசு, அவர்களுக்காக இன்னும் ஒரு சீசஸ் விளையாடுவதுதான்,“ என்று தனது ஓய்வு குறித்த முடிவை மகேந்திர சிங் தோனி அறிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 16 சீசன்களில் இதுவரை 250 போட்டிகளில் ஆடியுள்ள தோனி 5 ஆயிரத்து 82 ரன்களை சிஎஸ்கேவுக்காக குவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி அந்த அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த உதவியாக இருந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி கருதப்படுகிறார்.
14 சீசன்களின் சென்னை அணியை 10 முறை இறுதிபோட்டிக்கு வழிநடத்தியுள்ளார் தோனி.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் சிக்கி தடை செய்யப்பட்டிருந்த போது புனே அணியை ஒரு முறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு அழைத்து சென்று இருக்கிறார் தோனி.
சென்னை அணிக்கு ஐபிஎல் போட்டிகளில் 5 முறை வெற்றிக் கோப்பை பெற்று கொடுத்த தோனி, இந்த காரணங்களினால் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போதே தோனியின் ஓய்வு குறித்த சலசலப்பும் எழுந்தது.
42 வயதான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்த சீசனுடன் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் ஊகித்தனர்.
ஆனால் தனது ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு தனது ரசிகர்களுக்கு மற்றொரு சீசனில் விளையாடி "பரிசு" கொடுக்க விரும்புவதாக சிஎஸ்கே கேப்டன் நேற்றைய போட்டிக்கு பிறகு தெரிவித்துள்ளார்.
கோப்பையை வென்ற பிறகு பேசிய தோனி, “இப்போதுள்ள சூழலில் என் ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த நேரமாக இருக்கும். ஆனால் என் மீது ரசிகர்கள் காட்டிய அன்புக்காக நான் ஏதாவது ஒன்றை திருப்பித் தரவேண்டும். இந்த தருணத்தில் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லி விடைபெறுவது எனக்கு மிக எளிமையானது. ஆனால் இன்னும் 9 மாதங்கள் கடினமாக உழைத்து ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் விளையாட நினைக்கிறேன்.“
“அடுத்த ஆறேழு மாதங்கள் என் உடல் ஒத்துழைப்பதை பொறுத்து நான் அடுத்த சீசனிலும் ஆட விரும்புகிறேன். அதற்காக நான் தயாராக வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் நான் எங்கு சென்றாலும் சிஎஸ்கே ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய அன்பு எனக்கு கிடைத்துள்ளது. அவர்களுக்காக நான் திருப்பி அளிக்கும் பரிசு, இன்னும் ஒரு சீசன் விளையாடுவதாகதான் இருக்கமுடியும்,“ என்று தோனி கூறினார்.
கேப்டன் கூல் தோனி, கடைசியாக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியின் போது ஏன் உணர்ச்சிவசப்பட்டார் என்று ஹர்ஷா போக்லே தோனியிடம் கேள்வி எழுப்பினார்.
“சில நேரங்களில் அனைவருக்கும் உணர்ச்சிகள் வெளிப்படும். நான் என்னுடைய கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். கடந்த போட்டியின்போது நான் விளையாட மைதானத்திற்குள் நுழைந்த போது மொத்த மைதானமும் என்னுடைய பெயரை உச்சரித்தது. அப்போது என்னுடைய கண்கள் கண்ணீரில் நிரம்பின. கொஞ்ச நேரம் டக்அவுட்டில் (Dug Out) நின்று அதை அனுபவித்த பிறகு நான் விளையாட வந்தேன். அந்த வகையில் சென்னை மைதானம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது,“ என்று எம்.எஸ். தோனி பதிலளித்தார்.
எப்போது எப்படி அமைதியாக இருக்கிறீர்கள் என தோனியிடம் கேட்ட போது, “என்னை விரும்பும் ரசிகர்கள் நான் இப்படி இருப்பதை தான் விரும்புகிறார்கள். இங்கு கிரிக்கெட் விளையாடும் பலரும் இப்படிதான் விளையாடுகின்றனர். அதனால் ரசிகர்கள் என்னை மிக எளிதாக அவர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். இது இப்படியே நீடிக்க நான் விரும்புகிறேன்,“ என்றார்.
நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்த இளைஞர்களையும், அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களை சிறப்பாக வழிநடத்தியதற்காக தோனி புகழப்பட்டார்.
சென்னை அணியின் இளம் வீரர்களான ஷிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே, பதிரண போன்ற வீரர்கள் அணிக்காக விளையாடிய விதம் குறித்து பல தருணங்களில் தோனி பாராட்டினார்.
“வெற்றியை தீர்மானிக்க இறுதி கட்டம் வரை செல்லும் போட்டிகளுக்காக வீரர்களை தயார் செய்வது ஐபிஎல் போட்டிகளில் மிக முக்கியமான ஒன்று. இதையே நாங்கள் எப்போது செய்வதாக நினைக்கிறேன். மற்றவர்களை போலவே எனக்கும் விருப்பு, வெறுப்புகள் உள்ளன. ஆனால் பிரச்னை என்ன என்பதை அறிய நான் முயற்சிகிறேன். யாராவது தவறு செய்யும் அவர்களின் நிலையிலிருந்து யோசித்து செயல்படுகிறேன். அவர்கள் எப்படி தங்களின் அழுத்தங்களை கையாள்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு நபரையும் தனித்தனியாக தட்டிக் கொடுக்கிறேன்.“
அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு போன்ற சீனியர் வீரர்களுக்கு கம்பேக் சீசனாகவும் நடப்பு ஐபிஎல் தொடர் அமைந்தது.
“ரஹானே அனுபவம் வாய்ந்தவர். அவர்கள் பற்றி நான் அதிகம் கவலை கொள்வதில்லை. சீனியர் வீரர்கள் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களுக்கு குழப்பம் இருந்தால் என்னிடம் வந்து பேசலாம்,“ என தோனி சீனியர் வீரர்கள் குறித்து பேசினார்.
இறுதிப்போட்டிக்கு முன்பே ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு அறிவித்திருந்தார்.
"ராயுடுவின் சிறப்பு என்னவென்றால், அவர் களத்தில் இருந்தால் அவரின் 100% அளிப்பார். ஆனால் அவரை அணியில் வைத்திருந்தால் ஃபேர்பிளே விருது கிடைக்காது. இந்தியா ஏ அணிக்காக நாங்கள் ஒன்றாக விளையாடிய நாள் முதல் ராயுடு ஒரு அற்புதமான வீரர். சுழற்பந்தையும், வேகப்பந்தையும் எதிர்த்து ஒரே மாதிரியாக சிறப்பாக விளையாடக்கூடியவர் ராயுடு. என்னைப் போலவே அவரும் அதிகம் செல்போனை பயன்படுத்தமாட்டார். இன்றைய போட்டி அவர் நிச்சயம் மறக்கமாட்டார்," என்று ராயுடு குறித்து போட்டிக்கு பிறகு தோனி தெரிவித்தார். BBC
Post a Comment