Header Ads



முனவ்வராவை கொன்ற குற்றவாளிக்கு எதிராக, மூவின மக்களும் ஒன்றிணைவு


கம்பளை - வெலிகல்ல, எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் 6 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட பாத்திமா முனவ்வராவை கொலை செய்த கொலையாளிக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு கோரி கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய சேர்ந்த பிரதேச மக்கள் மற்றும் கம்பளை மக்களும் ஒன்றினைந்து இன்று (25) கம்பளை நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் அஹமட் என்ற சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.


இந்த மௌனப் போராட்டத்திற்கு சிங்களவர்கள் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்று திரண்டு, நாட்டில் வேகமாகப் பரவிவரும் இவ்வாறான குற்றச்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என பதாதைகளை ஏந்தி போராட்டதில் ஈடுபட்டு இருந்தனர் .


சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதவான் உத்தரவிட்டார்.


கெலிஓயா பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 22 வயதான பாத்திமா, பேருந்திற்காக தாயாரிடம் நூறு ரூபா பணமும் பெற்று கொண்டு தனது பணியிடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​தனது வீட்டின் அருகே உள்ள வெறிச்சோடிய இடத்தில் படுகொலை செய்யப்பட்டார்.


வீட்டிலிருந்து 50 மீற்றர் தொலைவிலுள்ள எல்பிட்டிய பள்ளிவாசலின் சிசிடிவி கமெராவில் அவர் நடந்து செல்லும் காட்சி கடைசியாகப் பதிவாகியிருந்தது.


இதனையடுத்து 6 நாட்களுக்கு பின்னர் அவரது சடலம் அருகில் உள்ள வெறிச்சோடிய இடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.


-ராஜ்-

No comments

Powered by Blogger.