Header Ads



குழந்தைகளை நாசமாக்கும் ஸ்மார்ட்போன் - புதிய ஆய்வில் வெளியான தகவல்கள்


- சுசீலா சிங் -


சிறுவயதிலேயே குழந்தையின் கையில் திறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்) அல்லது டேப்லெட் கொடுப்பது அதன் அறிவை மேம்படுத்தும் அல்லது டிஜிட்டல் உலகத்தைப் பற்றிய புரிதலை அதிகரிக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.


இதை 'Sapien Labs' என்ற அமெரிக்க அரசு சாரா நிறுவனம் தெரிவிக்கிறது.


இந்த அமைப்பு 2016 முதல் மக்களின் மனதைப் புரிந்துகொள்ளும் பணியில் செயல்பட்டு வருகிறது.


கொரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வி ஆன்லைனில் தொடங்கியபோது, ​​​​குழந்தைகள் மொபைலில் எவ்வளவு நேரம் ஸ்க்ரீன் டைம் இருக்க வேண்டும் என்ற பேச்சு தொடங்கியது.


அதன் நன்மைகள், தீமைகள் குறித்த விவாதம் தொடங்கியது.


குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திறன்பேசிகள் (ஸ்மார்ட்போன்) கொடுக்கப்படும்போது, ​​​​அவர்கள் பருவமடைவதற்குள் அவர்களின் மூளை எதிர்விளைவைக் காட்டத் தொடங்குகிறது என்று Sapien Labs இன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.


40 நாடுகளைச் சேர்ந்த 2,76,969 இளம் வயதினரிடம் பேசி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்த 40 நாடுகளில் இந்தியாவும் அடக்கம்.


ஆறு வயதில் திறன்பேசி வழங்கப்பட்ட 74 சதவிகித பெண்களுக்கு இளமைப்பருவத்தில் மனநல பிரச்னைகள் ஏற்பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்தப் பெண்களின் MCQ அளவு குறைவாக இருந்தது. (மன ஆரோக்கியம் தொடர்பான மதிப்பீடு).


10 வயதில் திறன்பேசிகள் வழங்கப்பட்ட பெண்களில், 61 சதவிகிதம் பேரின் MCQ, குறைவாக அல்லது மோசமாக இருந்தது.


15 வயதுடைய சிறுமிகளில் 61 சதவிகிதத்தினரின் நிலையும் இதேதான்.


மறுபுறம், 18 வயது பெண்களுக்கு திறன்பேசிகள் கிடைத்தபோது, ​​இந்த எண்ணிக்கை 48 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.


அதேநேரம் ஆறு வயது சிறுவர்களுக்கு திறன்பேசிகள் வழங்கப்பட்டபோது, ​​​​42 சதவிகிதம் பேருக்கு மட்டுமே MCQ அளவு குறைந்திருந்தது.


இதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்றும் இது இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் பணியாற்றிய முன்னாள் மனநல மருத்துவர் பங்கஜ் குமார் வர்மா கூறுகிறார்.


ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், சிறுமிகளுக்கு இளமைப் பருவம் முன்னதாகவே வருவதே இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதில் மன மற்றும் உடல் மாற்றங்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.


சிறுமிகளுக்கு இளம் வயதில் திறன்பேசிகள் கொடுக்கப்படும்போது ​​அவர்கள் இந்த நிலையை அடையும் நேரத்தில் ஆண்களைவிட அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.


சிறுவயதிலேயே திறன்பேசிகள் கொடுக்கப்பட்ட குழந்தைகளிடையே தற்கொலை எண்ணம், பிறர் மீது கோபம், எதார்த்தத்தை விட்டு விலகியிருப்பது, பிரமை போன்றவை இருப்பதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


18 முதல் 24 வயதினரிடையே எத்தனை காலம் கழித்து அவர்களுக்கு திறன்பேசி கொடுக்கப்பட்டதோ அத்தனை குறைவாக மனநலம் மீது விளைவு இருந்தது.


குழந்தைகள் மீது விளைவு

சவியின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதையும் ஏறக்குறைய இதுபோன்றதுதான். அவர் இரண்டு மகள்களின் தாய்.


அவர் வழக்கமாக வீட்டு வேலைகளில் பிசியாக இருப்பார். தன் மகள் அதிகம் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தன் 22 மாத மகளிடம் தனது திறன்பேசியைக் கொடுத்தார்.


யூடியூபில் கார்ட்டூனை போட்டு தன் மகளிடம் போனை கொடுத்துவிட்டு வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்குவார் சவி.


மூத்த மகள் பள்ளியிலிருந்து திரும்பும் வரை இது நடக்கும்.


தன் அறியாமையால் மகளின் கைகளில் கொடுத்த திறன்பேசி தனக்குப் பிரச்னையாகிவிடும் என்று சவி நினைக்கவே இல்லை.


குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்கும் நேரத்தை பெற்றோர்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்


”சவி தன் மகளை அழைத்து வந்தபோது, ​​அவளால் தன் வயதுக்கேற்ப பேச முடிந்தது. குழந்தையின் வளர்ச்சியும் சரியாக இருந்தது. ஆனால் அவளிடம் மிகுந்த பதட்டம் இருந்தது,” என்று மனோதத்துவ நிபுணர் டாக்டர் பூஜா சிவம் கூறினார்.


“ஏழு முதல் எட்டு மணிநேரம், அவள் திறன்பேசியுடன் மட்டுமே வாழ்ந்தாள். சவி யூடியூப்பில் கார்ட்டூன் போட்டிருப்பார். ஆனால் யூடியூப்பில் அவள் எதைப் பார்த்திருப்பாள் என்று கற்பனை செய்து பாருங்கள், நம்மால் யூகிக்க மட்டுமே முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.


''அவள் பயத்துடன் இருப்பாள். பதட்டம் இருந்தது. வீட்டுக்குப் புதிதாக யாராவது வந்தாலே கத்த ஆரம்பிப்பாள். பயந்து போய்விடுவாள். இதில் பேசாமல் இருப்பதும், பிடிவாதமாக இருப்பதும் அடங்கும். அதன் பிறகு அந்தப் பெண்ணை திறன்பேசியில் இருந்து அகற்றிவிட்டு கவுன்சிலிங் தொடங்கினோம்.”


இப்போதெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளின் கைகளில் சிறு வயதிலேயே பேசிஃபையர் (நிப்பிள், ஷெல்ஸ் மற்றும் கைப்பிடி கொண்ட சூதர்) ஃபோன்களை வழங்குகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


பல ஆயிரம் விஷயங்கள் சிக்னல்கள் மூலம் நம் மூளையை அடைகின்றன என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.


ஒருவர் திறன்பேசியைப் பயன்படுத்தும்போது, ​​அவருக்கு வீடியோ மற்றும் ஆடியோ கிடைக்கிறது. அதே நேரத்தில் அவருக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வேறு சில விஷயங்களும் மனதில் நுழைகிறது. மேலும் இது ஒரு காந்தம் போல வேலை செய்கிறது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைக்கு இப்படி நடக்கும்போது என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


டாக்டர் பங்கஜ் குமார் வர்மா, ரிஜுவனேட் மைண்ட் கிளினிக்கையும் நடத்தி வருகிறார்.


இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், ”கொரோனா காலத்தில் திரை நேரம் அதிகரித்ததால், வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டதால் குழந்தைகள் எரிச்சல், கவலை மற்றும் மனச்சோர்வுக்கு ஆளானதைப் பார்த்தோம்,” என்று குறிப்பிட்டார்.


“சிறு குழந்தைகளில் மூளை வளர்ந்து வருகிறது. தான் பார்ப்பது நல்லதா கெட்டதா என்றுகூட அதற்குத் தெரியாது. இரண்டாவதாக, ஒரு கார்ட்டூனை பார்க்கும்போது குழந்தை நன்றாக உணர்ந்தால், மூளை டோபோமைன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இது குழந்தையை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது,” என்று அவர் மேலும் விளக்குகிறார்.


டிஜிட்டல் எக்ஸ்போஷர் ஒரு வகையில் குழந்தைகளை அதற்கு அடிமையாக்கிவிட்டது. அதன் விளைவு என்னவென்றால், படிப்பு, ​​விளையாட்டு, நண்பர்களுடன் பழகுவது போன்ற அனைத்தையும் மறந்துவிட்டு, டோபமைனை தரும் திறன்பேசியிலேயே குழந்தை மூழ்கிவிடுகிறது. இந்த வழியில் ஒரு செயற்கை உலகில் அது வாழ்கிறது.


அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் பயம், குழப்பம், பதட்டம் போன்றவற்றுக்கு ஆளாவதால் வருங்காலத்தில் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. மறுபுறம், சமூக கட்டமைப்பில் இருப்பதால் ஏற்படும் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் அவர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.


என்ன செய்யவேண்டும்?

கடந்த ஆண்டு, சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.


”இந்தியாவில் 53 கோடி வாட்ஸ்அப் பயனாளர்களும், 44.8 கோடி யூடியூப் பயனாளர்களும், 41 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களும் உள்ளனர். 1.75 கோடி பேர் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர்,” என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.


அதேநேரத்தில், இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 90 கோடியாக அதிகரிக்கலாம்.


தொழில்நுட்பம் இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இது தகவல்களின் சிறந்த ஆதாரமாக இருக்கும் அதேவேளையில், அது பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் இதை , சீரான முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.


வல்லுநர்கள் பெற்றோருக்கு இந்த ஆலோசனைகளை வழங்குகிறார்கள்:


சிறு குழந்தைகளை திறன்பேசியில் இருந்து விலக்கி வையுங்கள்

குழந்தைக்கு எந்த வயதில் திறன்பேசி அல்லது டேப்லெட் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்

தன் நண்பர் திறன்பேசி வைத்திருப்பதாக குழந்தை வாதிட்டால், அதனுடன் பேசி விளக்குங்கள்

குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றால் வீட்டில் ஒரு தொலைபேசி இணைப்பை(லேண்ட்லைன்) வையுங்கள் அல்லது பேசவும் செய்தி அனுப்பவும் மட்டுமே முடியக்கூடிய கைபேசியைக் கொடுங்கள்

குழந்தையின் படிப்புக்கு மொபைல் அவசியம் என்றால், திரை நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்

பள்ளிகளில் வீட்டுப் பாடங்களை ஆன்லைனில் செய்யும்படி கொடுத்தால், ஒரு பிரிண்டரை வாங்குங்கள். ஏனெனில் இது குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கும்.

குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் கழித்து திறன்பேசிகள் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு குறைவாக அவர்களின் மனநல பாதிப்பு இருக்கும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. BBC

No comments

Powered by Blogger.