ஜனாஸா எரிப்புக்கு நீதி கிடைக்குமா..? அரசாங்கம் மன்னிப்பு கேட்குமா..??
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
ஓட்டமாவடி விஷேட மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களின் குடும்பங்களுக்கும் உரிய நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளார்கள்.
கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்த நிபுணர் குழுவின் ஒருசில பேராசிரியர்கள் தங்களின் அறிவைப் பயன்படுத்தி மக்களை பிழையாக வழி நடத்தியுள்ளனர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. நிபுணர் குழுவின் தவறான வழிநடத்தலை நானும் ஏற்றுக்கொள்கிறேன் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர், நிபுணர் குழுவின் பேராசிரியர்கள் சிலரது பிழையான வழி நடத்தலினாலே கொவிட் 19 வைரஸ் காரணமாக உயிரிழந்தோரை நீண்ட தூரத்திலுள்ள விஷேட மையவாடியில் அடக்கம் செய்ய வேண்டியேற்பட்டது. நிலத்தடி நீரில் கொவிட் 19 வைரஸ் பரவும் என அவர்கள் அறிக்கை விட்டதனாலே இந்நிலைமை ஏற்பட்டது. குறிப்பாக மெத்திகா விதானகே என்ற பேராசிரியரைக் குறிப்பிடலாம். இவர்களின் தீர்மானத்துடன் நான் இணங்கவில்லை எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ரவூப் ஹக்கீம் எம்.பி.
நிலத்தடி நீரில் கொவிட் 19 வைரஸ் பரவும் என்ற தீர்மானம் பிழையானது. நிபுணர் குழுவே இத்தீர்மானத்தை எடுத்திருந்தது. அதனடிப்படையிலே ஓட்டமாவடியில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது என்பது பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ‘கொவிட் 19 வைரஸ் நிலத்தடி நீரின் ஊடாக பரவும் என்ற கருத்தை ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரே கொண்டு வந்தார். அதனடிப்படையிலே கொவிட் 19 தொற்றினால் இறந்த முஸ்லிம்கள் மாத்திரமன்றி பெளத்தர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட ஏனையவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதற்காக தூரப் பிரதேசமான ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படாத தீர்மானமே இது. இனவாத அடிப்படையிலே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எந்தவொரு வைரஸும் நீர் ஊடாகப் பரவுவதில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இனவாத அதிகாரிகளை, நிபுணர்களை மாற்றுமாறு நாம் அப்போதே பல தடவைகள் கூறியிருந்தோம்.
ஒருவர் இறந்தால் அவருடன் இருக்கும் வைரஸ்களும் இறக்கும் என இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயத்தில் சில இனவாதிகளால் அரசு பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளது என்பதை இப்போதாவது அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசின் பிழையான தீர்மானம் காரணமாக, அக்காலகட்டத்தில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார்கள். தங்கள் உறவுகளை அடக்கம் செய்வதற்காக பல்வேறு துன்பங்கள், பொருளாதார கஷ்டத்துக்கு மத்தியில் தொலைதூரம் எடுத்துச்சென்றார்கள்.
நாம் இப் பிரச்சினைகளை அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குத் தெரிவித்தோம். அவர் எமது கோரிக்கைகளை கொவிட் 19 நிபுணர் குழுவிற்கு பாரப்படுத்தினார். நிபுணர் குழுவை அரசே தெரிவு செய்திருந்தது. அவர்கள் இனவாத அடிப்படையிலே செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். அதனால் இவர்களை மாற்றுமாறு நாம் அமைச்சரைக் கோரினோம். ஆனால் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனுடன் தொடர்புபட்ட நிபுணர்கள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
ரிசாத் பதியூதீன் எம்.பி.
‘கொவிட் 19 வைரஸ் தொற்றுநோய் தொடர்பான துறைசார் நிபுணர் குழுவில் இனவாதமே மேலோங்கியிருந்தது.முஸ்லிம் ஜனாஸாக்கள் மார்க்க விதிகளின் படி அடக்கம் செய்யப்படுவதேயன்றி தகனம் செய்யப்படுவதில்லை. ஆனால் முஸ்லிம்களைப் பழிவாங்குவதற்காகவே ஜனாஸாக்களை எரித்தார்கள். பின்பு முஸ்லிம் நாடுகளின் அழுத்தங்களையடுத்து ஓட்டமாவடியில் அடக்கம் செய்தார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியூதீன் எம்.பி. தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த பிழையான தீர்மானத்துக்கு துணைபோனவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். இது தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு அரசு குழுவொன்றினை நியமிக்க வேண்டும்.
அத்தோடு இனவாத பிழையான தீர்மானத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். இந்தத் தீர்மானத்தின் பின்னணியிலும் அரசியலும் செல்வாக்குச் செலுத்தியிருந்ததை நாம் கண்டோம். இவ்விடயத்தில் அரசு தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இராஜாங்க அமைச்சர்
காதர் மஸ்தான்
கொவிட் 19 நிபுணர்குழு பிழையான தீர்மானம் எடுத்திருந்ததை மன்னிக்கவே முடியாது. கொவிட் 19 வைரஸ் தொற்றுக்காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கே பாரிய அச்சுறுத்தல் இருந்தது. முஸ்லிம் சமூகமே பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயத்தில் ஒருமித்து நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். நிபுணத்துவ குழு பிழையான தீர்மானம் மேற்கொண்டுள்ளது என்பதை உரிய ஆவணங்கள் மூலம் நிரூபித்து அதிகபட்ச நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும் என கிராமிய பொருளாதார சிறுதானியங்கள் பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
ஜனாஸாக்கள் தூர இடத்தில் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டதால் ஜனாஸாக்களின் உறவினர்கள் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்கு அங்கு செல்வதற்கும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்கள் மன உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளதை எம்மால் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.
கொவிட் 19 நிபுணர் குழுவின் பிழையான தீர்மானத்தினால் முஸ்லிம் சமூகமே பெரிதும் பாதிக்கப்பட்டது. ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. பின்பு ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறான தவறான தீர்மானங்களை எடுத்த துறைசார் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களில் விரும்புபவர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நிபுணர்குழுவில் இரு முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களது எதிர்ப்புக்கு மத்தியிலேயே பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. இதில் ஜீ.எம்.ஓ.ஏ. உம் விடாப்பிடியாக இருந்தது. இவ்வாறான தீர்மானம் எந்தப் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டது என அறிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும்.
முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் சமூகத்தின் பாரிய எதிர்ப்புகளுககு மத்தியிலே தகனம் செய்யப்பட்டது. இதற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகள் விசாரணையின் பின்பு தண்டிக்கப்படவேண்டும் என்றார்.
முன்னாள் அமைச்சர்
பைஸர் முஸ்தபா
‘முஸ்லிம்களின் கண்ணீருக்கு மத்தியிலே கொவிட் 19 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன. இதற்குப் பொறுப்பானவர்கள் நிபுணர் குழுவின் துறைசார் உயரதிகாரிகளே. இத்தீர்மானம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதுன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தொரிவித்தார்.
‘முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பிழையான தீர்மானத்துக்காக பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திடம் அரசாங்கம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.- Vidivelli
பொதுவாக எல்லா பா.உ. களுக்கும் நன்றாகத் தெரிந்தவிடயம் தான் இதற்கு நியாயமான தீர்மானத்தை அரசாங்கம் ஒருபோதும் எடுக்காது. அதனால் பாதிக்கப்படப் போகும் இனவாதி துறைசார் நபர்களைக் காப்பாற்ற இப்போதிருந்தே நரித்தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த இந்த பா.நபர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு துறைசார் சட்ட நிபுணர்களை நியமித்து இந்த அநியாயத்துக்கு எதிராக இலங்கை அரசை சர்வதேசத்துக்கு கொண்டுபோய் நியாயத்தைப் பெற்றுக் கொள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்து போராட வேண்டும். அது தவிர இரவு நேரத்தில் பாதையில் கிடைக்கும் வீசிஎறியப்பட்ட உணவின் எச்ச சொச்சங்களுக்கு போட்டி போடும் நாய்க்கூட்டங்களைப் போன்று நடந்து கொள்ளும் அந்த தியவன்னாவையில் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே நியாயத்தைத் தேடி பாதிக்கப்பட்ட சமூகம் சர்வதேசம் சென்றாக வேண்டும் என்ற உண்மையைத் தயவு செய்து மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.
ReplyDelete