Header Ads



கேரளாவில் நிகழந்துள்ள பயங்கரம்


கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப் (42). மது போதைக்கு அடிமையான சந்தீப், ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், ஓர் அடிதடி வழக்கில் சிக்கிய சந்தீப்பை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்தனர். 


அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அதிகாலை 4:30 மணியளவில் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்துவந்த வந்தனா தாஸ் (22) மருத்துவப் பரிசோதனை செய்திருக்கிறார்.


அப்போது, திடீரென வன்முறையில் இறங்கிய சந்தீப் மருத்துவமனையிலிருந்த கத்திரியை எடுத்து மருத்துவர் வந்தனா தாஸின் கழுத்து, முகம் ஆகிய இடங்களில் குத்தினார். மேலும், அங்கிருந்த மருத்துவமனை காவலாளி, பொலிஸ் உள்ளிட்டவர்களையும் குத்தியிருக்கிறார். இதற்கிடையே, அங்கிருந்தவர்கள் சந்தீப்பை மடக்கிப் பிடித்தனர். படுகாயமடைந்த மருத்துவர் வந்தனா தாஸை திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இதற்கிடையே, அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


கோட்டயம் பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸின் ஒரே மகளான மருத்துவர் வந்தனா தாஸ் கொலைசெய்யப்பட்ட சம்பவம் உறவினர்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


இதற்கிடையே, மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.