Header Ads



கூட்டாக வெளிநடப்புச் செய்து, விகாரை எதிர்ப்பு விவகாரத்தில் ஒன்றுபட்ட தமிழ் அரசியல்வாதிகள்


- நிதர்ஷன் வினோத் -


யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் கூட்டாக வெளிநடப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விஹாரை பகுதிக்கு கூட்டாக வருகை தந்தனர்.


பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு விஐயம் செய்து விஹாரையை பார்வையிட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடனும் கலந்துரையாடி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.


யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (05) யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது.


சமகாலத்தில், காங்கேசன்துறை தையிட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்ட விஹாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்களால் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 


அவர்களை பாதுகாப்பு தரப்பு முற்றுகையிட்டுள்ளமையை கண்டித்தும், மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெளிநடப்பு செய்வதாக சுமந்திரன் எம்.பி. கூட்டத்தில் அறிவித்தார்.


இதனையடுத்து சக பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.


இந்நிலையில் கூட்டாக வெளிநடப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை பகுதிக்கு கூட்டாக வருகை தந்தனர்.



No comments

Powered by Blogger.