Header Ads



முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி அழைப்பு விடுக்கவுள்ளார்


வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இன்று முதல் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர் போன்று முஸ்லிம் கட்சிகளுக்கும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்கும், மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய மலையக மக்கள் பிரதிநிதிகளுக்கும்  ஜனாதிபதிக்குமான பேச்சுவார்த்தைக்கான சந்திப்பை ஏற்படுத்துவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (11) இடம்பெற்ற ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுடனான சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார். 


அந்த சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிங்களின் பிரச்சினைகள், முஸ்லிங்களின் வகிபாகங்கள் முஸ்லிங்கள் தொடர்ந்தும் எதிர்நோக்கும் முரண்பாடுகள் தொடர்பில் தீர்வை எட்டும் விதமாக ஜனாதிபதியுடன் முஸ்லிம் தரப்பு  பேச்சுவார்த்தை செய்யவேண்டிய அவசியத்தையும், மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு மலையக மக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை செய்யவேண்டிய அவசியத்தையும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெளிவுபடுத்தியிருந்தார். 


இந்த பேச்சுவார்த்தை தொடர்களை நீண்டகால தீர்வாக முன்வைக்கும் விதமாக இதய சுத்தியுடன் ஜனாதிபதி முன்னெடுத்து வருவதாகவும், தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களின் அடிப்படை பிரச்சினைகள், இனப்பிரச்சினைகளுக்கான தீர்வை அர்த்தபுஷ்டி மிக்கதாக தீர்வை காணவேண்டும் என்ற முனைப்பில் இந்த பேச்சுவார்த்தை தொடர்களை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளதாக இதன்போது தனக்கு பதிலளித்த ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 


தொடர்ந்தும், தமிழர்களின் பிரச்சினை தனித்துவமானது, முஸ்லிங்களின் பிரச்சினைகள் தனித்துவமானது, மலையக மக்களின் பிரச்சினைகள் தனித்துவமானது என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி ஆராய அவர்களை இன்று அழைத்துள்ளார். இதேபோன்று முஸ்லிங்களின் பிரச்சினைகளை ஆராய முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளையும், முஸ்லிம் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை செய்வது என்று ஜனாதிபதி தீர்மானித்துள்ளதுடன் மலையக மக்களின் பிரச்சினைகளை மலையக தலைவர்களுடன் பேச ஜனாதிபதி ஆயத்தமாக உள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் இறுதி வடிவமாக சகல தரப்பினரையும் ஒரே மேசைக்கு அழைத்து இறுதிப்பேச்சுவார்த்தை செய்வது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளில் காணி ஆணைக்குழு அமைத்தல், இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்டுதல் போன்ற முக்கிய விடயங்கள் ஆராயப்பட உள்ளதாகவும், கூடிய விரைவில் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் தரப்பு எம்.பிக்களுமிடையிலான பேச்சுவார்த்தை அழைப்பை ஜனாதிபதி செயலகம் விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தனக்கு உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.                                


(ஊடகப்பிரிவு)

No comments

Powered by Blogger.