Header Ads



அரகலய காரர்கள் திடீரென உயிரிழப்பு, பாராளுமன்றத்தில் பட்டியப்படுத்தப்பட்ட மரணச் சம்பவங்கள்



களுத்துறையில் சில நாட்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்தவர் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, காலிமுகத்திடல் போராட்டத்துடன் தொடர்புபட்டிருந்தவர்களை கர்ம வினை துரத்திக்கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.

ஒருவருடத்துக்குள் போராட்டக்காரர்கள் பலர் இறந்துள்ளனர் என்பதையும் அவர்    சுட்டிக்காட்டினார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,


“காலிமுகத்திடல் போராட்டத்தில்  பந்தமேந்தி மந்திரம் ஓதி செயற்பட்ட பூசாரி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளார். அதேபோன்று அங்கிருந்த நூலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


வெசாக்கின் போது கறுப்பு நிறத்தில் வெசாக் கூடு செய்தவர் இப்போது மனநோய் வைத்தியசாலையில் உள்ளார். இந்த போராட்டத்தில் முக்கியமாக இருந்த ஒருவர் தெஹிவளை பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இன்னுமொருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். இதேவேளை மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மரண போஸ்டர் அச்சிட்டவர் லங்கா வைத்தியசாலையில் மரணித்துள்ளார். இதுதான் கர்ம வினையால் கிடைப்பவை.


இதேவேளை ஜனாதிபதியின் கொடியை திருடிச் சென்ற தொழிற்சங்க பிரதானி ஆட்டோ விபத்தில் காலொன்றை இழந்துள்ளார். அதுகோரல எம்.பியின் கொலையுடன் தொடர்புடைய ஒருவர் சிறையில் உயிரிழந்துள்ளார். இவை இந்த ஒரு வருடத்திற்குள் நடந்தவை. கர்ம வினையின் பலன்களை இப்போது காணக்கூடியதாக உள்ளது.


அண்மையில், களுத்துறை நகரில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் போராட்டத்தின் களுத்துறை மாவட்ட ஏற்பாட்டாளர் என்றும் இவர் இரண்டு திருமணங்களை முடித்தவர்  என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.