Header Ads



கர்நாடக சட்டப்பேரவைக்கு சபாநாயகராகும் முதல் இஸ்லாமியர்


கர்நாடகா சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில், சபாநாயகராக யு.டி.காதரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனை தொடர்ந்து யு.டி.காதரை சபாநாயகராக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சட்டப்பேரவையில் நேற்று முன்மொழிந்தனர்.


இதற்கு உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், யு.டி.காதர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரை முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சேர்ந்து இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர். 54 வயதாகும் காதர், கர்நாடக சட்டப்பேரவைக்கு சபாநாயகராகும் முதல் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பாஜக ஆட்சியிலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக காதர் பதவி வகித்தது நினைவுக்கூரத்தக்கது.


இதனிடையே கர்நாடக எம்எல்ஏ-க்கள் இந்து கடவுள்கள் மற்றும் கோமாதாவின் பெயரில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 224 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் கடந்த 22 ஆம் தேதி 182 பேர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மறுநாள் 34 பேர் பதவியேற்றனர். எஞ்சிய எம்எல்ஏ-க்கள் சாபாநாயகர் தேர்தலில் வாக்களிக்கும் விதமாக, நேற்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.


அப்போது, பாஜக எம்எல்ஏ-க்கள் இந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர் பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்தனர். இதில், பசன கவுடா கோமாதாவை குறிப்பிட்டு பதவியேற்றார்.

No comments

Powered by Blogger.