Header Ads



பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு


வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


தங்கநகை திருட்டுச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.


42 வயதான ஆர்.ராஜகுமாரி எனப்படும் குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தமது வீட்டில் பணிபுரிந்த போது தங்கநகையைத் திருடியதாக குறித்த பெண் மீது தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான சுதர்மா  ஜயவர்தன வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.


எனினும், அவர் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்ததாக அவரின் கணவர் செல்வதுறை யேசுராஜ் குறிப்பிட்டார். 


பொலிஸாரின் அறிக்கையின் பிரகாரம் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் குறித்து பகிரங்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


பெண்ணின்  சடலம் கடந்த 12ஆம் திகதி உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், 13ஆம் திகதி பதுளை தெமோதரையில் சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் சுதர்மா ஜயவர்தனவிடம் வினவியபோது, ஒரு மாத்திற்கு முன்னர் தாம் வௌிநாடு சென்றிருந்த போது வீட்டிலிருந்த தங்க மோதிரம் ஒன்று காணாமல் போயிருந்ததாக தெரிவித்தார்.


ஆனால் அப்போது அதனைத் தேட முடியாது போனதையடுத்து, ஒரு மாதம் 10 நாட்கள் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்னர் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த  இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகிய மூவரில் ஆண் மட்டுமே வீட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.


இரண்டு பெண்களில் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடிந்த போதிலும், ராஜகுமாரி தனது தொலைபேசி இலக்கத்தை மாற்றியிருந்ததாக சுதர்மா ஜயவர்தன தெரிவித்தார்.


இதன் காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்ததாக அவர் கூறினார்.


மோதிரத்தை திருடி ஹட்டனில் உள்ள அடகு நிலையம் ஒன்றில் அடகு வைத்ததாக பொலிஸ் விசாரணையின் போது ராஜகுமாரி ஒப்புக்கொண்டதாக சுதர்மா ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.


சம்பவத்தில் உயிரிழந்த, பதுளை தெமோதர பகுதியை சேர்ந்த 42 வயதான ராஜகுமாரி மூன்று பிள்ளைகளின் தாயாவார்.


இந்த மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமல்லவா?

No comments

Powered by Blogger.