Header Ads



சிறு வயதில் ரொட்டி விற்றவர், இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர் - BBC


துருக்கியில் எளிய பின்னணியில் இருந்து வந்த ரசீப் தய்யீப் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளில் அந்நாட்டின் அசைக்க முடியாத அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். நவீன துருக்கியின் தந்தையாக கருதப்படும் முஸ்தஃபா கெமல் அடாதுர்க்கிற்குப் பிறகு அந்நாட்டை மாற்றியமைத்த பெரும் தலைவராக அவர் திகழ்கிறார்.


சமீபத்திய ஆண்டுகளில் அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்தாலும், அதையெல்லாம் மீறி தற்போது நடந்துள்ள அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவை நெருங்கிய தருவாயில் அவர் வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகளை கடந்துவிட்டார். இதன் மூலம் துருக்கியில் அவரது ஆட்சி மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பது உறுதியாகிவிட்டது.


கடந்த சில ஆண்டுகளாக அவர் பலவீனமான நிலையில் இருந்தார். அவரைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு வந்திருந்தது.


துருக்கியில் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினம் அதிகரிக்க வழக்கத்திற்கு மாறான அவரது பொருளாதார கொள்கைகளும் ஒரு காரணம் என்று விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


துருக்கியை நவீனப்படுத்தி, வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றவர் என்ற பெருமையைப் பெற்ற எர்துவான், கடந்த பிப்ரவரியில் துருக்கியைத் தாக்கிய இரட்டை நிலநடுக்கத்திற்குப் பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் காட்டியதாகத் தோன்றியது.


2016-ம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் இருந்து தப்பிய பிறகு அவர் அதிபர் பதவியை கூடுதல் அதிகாரம் கொண்டதாக மாற்றிக் கொண்டார். எதிர்ப்பாளர்கள், தன்னுடன் முரண்படுபவர்கள் மீது கடுமையாக ஒடுக்கினார்.


2003-ம் ஆண்டு முதல் பிரதமர், 2014-ம் ஆண்டு முதல் அதிபர் என துருக்கியை தலைமை வகித்த 20 ஆண்டுகளில் அதனை பிராந்திய வல்லரசாக மாற்றியுள்ளார். இஸ்லாமிய கொள்கைகளை நிறுவுவதிலும் அரசியல் எதிர்ப்புகளை முறியடிப்பதிலும் வெற்றி கண்டார்.


நேட்டோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாட்டின் தலைவராக இருந்தாலும், யுக்ரேன் - ரஷ்யா போரில் தன்னை மத்தியஸ்தராக காட்டிக் கொண்டார். நேட்டோவில் சேர முயன்ற ஸ்வீடனை காத்திருக்கச் செய்தார். அவரது ராஜதந்திர நடவடிக்கைகள் ஐரோப்பாவிலும் அதற்கு வெளியேயும் உள்ள கூட்டாளிகளை ஆத்திரமடையச் செய்துள்ளன.


1954-ம் ஆண்டு பிப்ரவரியில் துருக்கியின் கருங்கடல் பிரதேசத்தில் கடலோர காவல்படை அதிகாரியின் மகனாக பிறந்த தய்யீப் எர்துவான் பிறந்தார். அவருக்கு 13 வயதாக இருந்த போது, அவரது தந்தை இஸ்தான்புல்லுக்கு இடம் பெயர முடிவு செய்தார். அதன் மூலம் தனது 5 குழந்தைகளின் எதிர்காலத்தையும் சிறப்பானதாக்க முடியும் என்று அவர் நம்பினார்.


இளம் வயதில் எர்துவான் தனது செலவுக்கான பணம் ஈட்டுவதற்காக எலுமிச்சை ஜூஸ், ரொட்டி போன்றவற்றை விற்றுள்ளார். இஸ்தான்புல்லின் மர்மரா பல்கலைக் கழகத்தில் மேலாண்மையில் பட்டம் பெறுவதற்கு முன்பாக இஸ்லாமியப் பள்ளியில் அவர் பயின்றுள்ளார். கால்பந்து விளையாட்டிலும் அவர் சிறந்து விளங்கியுள்ளார்.


1970 மற்றும் 80 களில் இஸ்லாமியை வட்டத்தில் சுறுசுறுப்புடன் இயங்கிய அவர், இஸ்லாமிக் வெல்ஃபேர் கட்சியில் சேர்ந்தார். 1990-களில் அந்தக் கட்சி வேகமாக வளர்ந்ததன் பலனாக, 1994-ம் ஆண்டு இஸ்தான்புல் மேயராக எர்துவான் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த 4 ஆண்டுகள் இஸ்தான்புல் மேயராக அவர் பணியாற்றினார்.


இனரீதியாக வெறுப்பைத் தூண்டும் தேசியவாத கவிதையை பொதுவெளியில் வாசித்ததாக எழுந்த புகாரில் சிக்கியதால் அவரது மேயர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.


4 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவர் வெளியே வந்த போது, நவீன துருக்கியின் மத சார்பற்ற கொள்கைகளை மீறியதாகக் கூறி அவரது கட்சி தடை செய்யப்பட்டிருந்தது.


2001-ம் ஆண்டு ஆகஸ்டில் அப்துல்லா குல்லுடன் இணைந்து இஸ்லாமியக் கட்சி ஒன்றை அவர் தொடங்கினார். அடுத்த ஆண்டிலேயே அவரது ஏ.கே.பி. (நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி) கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடத்தைப் பிடித்தது. 2003-ம் ஆண்டில் எர்துவான் பிரதமரானார். இன்று வரை அந்தக் கட்சியின் தலைவராக அவரே நீடிக்கிறார்.


2003-ம் ஆண்டு முதல் 3 முறை அவர் பிரதமராக பதவி வகித்துள்ளார். இந்த ஆண்டுகளில் துருக்கியின் பொருளாதார வளர்ச்சி நிலையாக சிறப்பானதாக இருந்தது. சீர்திருத்தவாதி என்று உலக அளவில் பெயரெடுத்தார். துருக்கியில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்தது. லட்சக்கணக்கானோர் வறுமையின் பிடியில் இருந்து வெளியே வந்தனர். துருக்கியை நவீனப்படுத்த மிகப்பெரிய அளவிலான உள் கட்டமைப்புத் திட்டங்களுக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார்.


ஆனால், நாட்கள் நகரநகர எர்துவான் சர்வாதிகாரியாக மாறி வருவதாக விமர்சகர்கள் எச்சரித்தனர்.


2013-ம் ஆண்டு எர்துவானுக்கு எதிரான போராட்டக்காரர்கள் வீதியில் திரண்டனர். இஸ்தான்புல் நகரின் மையத்தில் உள்ள பூங்காவை மாற்றியமைக்கும் அரசின் திட்டம் இதற்கு காரணமாக அமைந்தாலும், அவரது சர்வாதிகாரத்தனமான ஆட்சி மீதான அதிருப்தியும் முக்கிய காரணமாக அமைந்தது. அப்போது பிரதமராக இருந்த எர்துவான், போராட்டக்காரர்களை கீழ் மக்கள் என்று விமர்சித்தார். அவரது அமைச்சரவை சகாக்கள் 3 பேரின் மகன்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினர்.


இந்தப் போராட்டம் எர்துவான் ஆட்சியின் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு மக்களாட்சிக் குடியரசாக அல்லாமல் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் போன்று அவர் செயல்படுவதாக எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.


எர்டோகன் தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் வெற்றிபெற உதவிய சமூக, கலாசார இயக்கத்தை நடத்தி வந்த ஃபெத்துல்லா குலென் என்ற அமெரிக்க இஸ்லாமிய அறிஞருடனும் முட்டிக் கொண்டார். அந்த இயக்கம் ராணுவத்தை அரசியலில் இருந்து முற்றிலுமாக அகற்றுவதிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தது. இது ஒட்டுமொத்த துருக்கி சமூகத்திற்கும் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பகையாகும்.


இஸ்லாமிய கொள்கைகள் மீண்டும் அமல்


துருக்கியில் 1980-ம் ஆண்டு ராணுவப் புரட்சிக்குப் பிறகு அமலில் இருந்த, பொது இடங்களில் பெண்கள் தலையில் முக்காடிடுவதற்கான தடையை எர்டோகனின் கட்சி விலக்க முற்பட்டது. காவல்துறை, ராணுவம், நீதித்துறை ஆகியவற்றில் பணியாற்றிய பெண்களுக்கும் இந்த தடை நீக்கப்பட்டது.


முஸ்தபா கெமல் அடாதுர்க்கின் மதசார்பற்ற குடியரசு என்ற கொள்கைகளில் இருந்து எர்டோகன் விலகிச் செல்வதாக எதிர்ப்பாளர்கள் சாடினர். மத சார்பானவராக அறியப்பட்டாலும், இஸ்லாமிய விழுமியங்களை கட்டாயப்படுத்த விரும்பவில்லை என்பதை எர்டோகன் தெளிவுபடுத்தினார். அதேநேரத்தில், துருக்கியர்கள் தங்களது மத அடையாளங்களை வெளிப்படுத்துவதை ஆதரிப்பதாக அவர் கூறினார்.


விபசாரத்தை குற்றமாக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து ஆதரித்தார். 4 குழந்தைகளின் தந்தையான அவர், எந்தவொரு முஸ்லிம் குடும்பமும் குடும்பக் கட்டுப்பாடு குறித்து பரிசீலிக்கவே கூடாது என்று வலியுறுத்தினார். 2016-ம் ஆண்டு தனது உரையில், நமது வம்சாவளியை பன்மடங்காக்குவோம் என்று அவர் குறிப்பிட்டார்.


தாய்மையைப் போற்றிய எர்டோகன், பெண்ணுரிமை ஆர்வலர்களை சாடினார். ஆணும், பெண்ணும் சமமாக நடத்தப்பட முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.


இஸ்லாமிய கொள்கைகளை செயல்படுத்துவதில் வெற்றியாளராக பார்க்கப்பட்ட எர்டோகன், எகிப்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவத்தின் 4 விரல் வணக்கம் செய்ததற்காகவும் அறியப்பட்டார்.


2000-வது ஆண்டு ஜூலையில் இஸ்தான்புல்லில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹாஜியா சோஃபியாவை மசூதியாக மாற்றும் நடவடிக்கைகளை நேரடியாக மேற்பார்வையிட்ட எர்டோகன் கிறிஸ்தவர்களின் கோபத்திற்கும் ஆளானார். 1,500 ஆண்டுகளுக்கு முன்பாக கத்தீட்ரலாக கட்டப்பட்ட ஹாஜியா சோபியா, ஓட்டோமான் பேரரசு காலத்தில் மசூதியாக மாற்றப்பட்டது. ஆனால், அதனை அருங்காட்சியகமாக முன்னிறுத்தி, மத சார்பற்ற துருக்கி குடியரசின் அடையாளமாக அடாதுர்க் மாற்றினார்.


3 முறை பிரதமர் பதவியை வகித்த எர்டோகன் மீண்டும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதால் 2014-ம் ஆண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிட்டார். அதிகாரமில்லாத அலங்காரப் பதவியாக கருதப்பட்ட அதிபர் பதவிக்கு முதன் முறையாக நேரடி தேர்தல் நடைபெற்றது. ஆனால், அவரிடம் மிகப்பெரிய திட்டம் இருந்தது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒவ்வொரு துருக்கியரும் பயன்பெறச் செய்வதுடன், உலகின் முதல் 10 பொருளாதார நாடுகளில் ஒன்றாக துருக்கியை மாற்றுவேன் என்று அவர் உறுதியளித்தார்.


ஆனால், அதிபர் பதவியின் தொடக்கத்தில் 2 பெரிய நெருக்கடியை அவர் சந்தித்தார். 2015-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மையை இழந்தது. 2016-ம் ஆண்டில் துருக்கி சில தசாப்தங்களுக்குப் பிறகு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை சந்தித்தது.


கடற்கரையோர ரிசார்ட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அதிபர் எர்டோகனை பிடிக்கும் அளவுக்கு ராணுவத்தில் கிளர்ச்சி செய்த வீரர்கள் நெருங்கிவிட்டனர். ஆனால், விமானம் மூலம் அவர் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். ஜூலை 16-ம் தேதி அதிகாலையில் வெற்றியாளராக இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் முன் அவர் தோன்றினார். கிளர்ச்சி செய்த ராணுவ வீரர்களுடனான சண்டையில் அப்பாவி மக்கள் 300 பேர் கொல்லப்பட்டனர்.


இஸ்தான்புல்லில் ஆதரவாளர்கள் பேரணி நடத்த, அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் எர்டோகன் தன்னையே முதன்மைத் தளபதியாக அறிவித்துக் கொண்டார்.


குலென் இயக்கத்தினரே இந்த சதிச் செயலுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 1.5 லட்சம் அரசு ஊழியர்கள் இதனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், குர்திஷ் அரசியல்வாதிகள் என சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.


எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் எர்டோகனின் நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவில் எதிரொலித்தது. அந்த ஒன்றியத்தில் சேரும் துருக்கியின் விண்ணப்பம் பல ஆண்டுகளாக முன்னேற்றம் காணாமல் அப்படியே இருக்கிறது.


ஆனால், துருக்கி அதிபர் பதவியில் எர்டோகன் முன்னெப்போதையும் விட வலுவாக, பாதுகாப்பாக வீற்றிருக்கிறார்.


2017-ம் ஆண்டு அதிபருக்கே ஒட்டுமொத்த அதிகாரங்களையும் வழங்கிட வகை செய்யும் பொது வாக்கெடுப்பில் நூலிழையில்தான் அவர் வென்றார். அதன்படி, நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வது, அரசு நிர்வாகத்தில் உயர் பதவிக்கு அதிகாரிகளை நியமிப்பது, நீதித்துறையில் தலையிடுவது போன்ற உச்சபட்ச அதிகாரங்கள் அதிபருக்கு கிடைத்தன.


ஓராண்டுக்குப் பிறகு நடைபெற்ற அதிபர் தேர்தலில் எளிதில் அவர் வெற்றி பெற்றார்.


துருக்கியின் சிறு நகரங்கள், கிராமங்கள் மற்றும் பழமைவாதிகளிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றவராக எர்துவான் திகழ்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் துருக்கியின் மிகப்பெரிய நகரங்களான இஸ்தான்புல், தலைநகர் அங்காரா மற்றும் இஸ்மிர் ஆகிய மூன்றிலும் அவரது கட்சி தோற்றுப் போனது.


1990களில் எர்துவான் அலங்கரித்த இஸ்தான்புல் நகர மேயர் பதவியை பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த ஏக்ரெம் இமாமோக்லுவிடம் இழந்ததை அவரால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


ஏக்ரெம் இமாமோக்லுவுக்கே அதிபர் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றங்களைப் பயன்படுத்தி ஏக்ரெமை தேர்தலில் போட்டியிட விடாமல் செய்துவிட்டதாக எர்துவான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.


துருக்கியின் மூன்றாவது பெரிய கட்சியான, குர்திஷ் ஆதரவு எச்.டி.பி. (HDP) கட்சியும் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்படலாம் என்று அஞ்சியது. ஆகவே, வேறொரு பெயரில் தேர்தல் களம் காண அக்கட்சி முடிவு செய்தது.


சிரிய உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட 35 லட்சம் பேரை அகதிகளாக துருக்கி ஏற்றுக் கொண்ட போதிலும், எல்லை நெடுகிலும் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நட்புறவைப் பேணும் எர்துவான், யுக்ரேன் - ரஷ்யா போரில் மத்தியஸ்தராக செயல்படவும் விழைந்தார்.


நேட்டோ உறுப்பினராக துருக்கி இருந்த போதிலும், ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் பாதுகாப்பு அமைப்பை அவர் வாங்கினார். துருக்கியின் முதல் அணு உலையைக் கட்டித்தர ரஷ்யாவை அவர் தேர்ந்தெடுத்தார்.


"சதிகள் மற்றும் இராணுவ ஆட்சிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது." என்பதே துருக்கி மக்களுக்கு எர்டோகன் விடுத்த செய்தி.


No comments

Powered by Blogger.