Header Ads



ஜனாதிபதி அலுவலகத்தினால் 7 செயலணிகள்


வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அலுவலகத்தினால் 07 செயலணிகள் 


நாட்டில் "வர்த்தக  நட்பு சூழலை" உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது.


முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும், அதற்குத்  செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கவும், தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, செயலணிகளுக்கு  முறையான  பொறுப்புகள் வழங்கப்படுவதோடு   அதற்கான நிலையான முறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வர்த்தகப் பிரவேசத்தை இலகுபடுத்துவதற்காக கம்பனி பதிவாளர் அலுவலக  சட்ட கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை  மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதற்காக  வர்த்தக பதிவுக்கான  செயலணி  உள்ளடக்கப்படும்.


இந்த செயலணியின் ஊடாக டிஜிட்டல் கையொப்ப கட்டமைப்பை உருவாக்குதல், கம்பனி சட்டத்திற்கு  இறுதிப் பயனாளிகளின் உரிமையை இணைத்தல் மற்றும் கம்பனி பதிவாளரினால் (RoC) பயன்படுத்தப்படும் படிவங்களை எளிமைப்படுதல் உள்ளிட்ட முக்கிய சேவைகளை வழங்கும்.


காணிப் பதிவு, தேவையான சான்றிதழ்கள் மற்றும் தொடர்புடைய கொடுப்பனவுகள் பற்றிய நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'சொத்துப் பதிவு' குறித்த செயலணியொன்றும்  அமைக்கப்பட உள்ளது. நில அளவைத் திணைக்களம், கொழும்பு மாநகர சபை, மேல்மாகாண வருவாய் திணைக்களம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் உட்பட ஏழு நிறுவனங்களை இந்த  செயலணியில் உள்ளடக்கும்.


காணி உறுதி விபரங்களை  தேடல், இலத்திரனியல்  உறுதிப் பதிவு மற்றும் கட்டிடம்/வீதி எல்லைச் சான்றிதழைப் பெறுவதற்கான நேரம், செலவு மற்றும் நடைமுறைகளைக் குறைக்க ஈ-காணி  முறைமை  இந்த செயலணியின் ஊடாக மேற்கொள்ளப்படும்.  


இந்த செயலணி முதன்மையாக கொழும்புப் பகுதியில் அந்தச் செயற்பாடுகளை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, காணிப் பதிவேட்டு தரவுகளை பெற ஒன்லைன் வசதி அளித்தல், முத்திரைக் கட்டணத்தைக் கணக்கிடுவதற்கும், பத்திரங்களைப் பதிவு செய்வதற்கும் ஒன்லைன் வசதிகளை வழங்குதல், காணி ஆவணத்தில் உள்ள திட்ட விபரங்களை இணையதளத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


மேல்மாகாணத்துடன் தொடர்புடைய காணிகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய இணைய சேவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு காணி பதிவு அலுவலகத்தில் காணி உரித்து தொடர்பான தகவல்களை தேடுவதற்கான ஒன்லைன் வசதி, மேல் மாகாண வருவாய்த் திணைக்களத்திற்கான தானியங்கி முத்திரைக் கட்டணக் கணக்கீட்டு முறை மற்றும் கொழும்பு காணிப் பதிவேட்டில் பத்திரங்களைப் பதிவு செய்வதற்கான தானியங்கி  முறைமை  உள்ளிட்ட சேவைகளை வழங்க இந்த  செயலணி  மேற்கொள்ளும். இந்த செயற்பாடுகள் 2023 இறுதிக்குள் பூர்த்திசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செயலணிக்கு  அதன் இலக்குகளை அடைவதற்கு வசதியாகவும், நிறுவனங்களுக்கு இடையேயான  இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் சிக்கல்களைத் தீர்க்கவும் தொழில்நுட்ப அமைச்சு தேவையான ஒத்துழைப்பை வழங்கும்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

03.05.2023

No comments

Powered by Blogger.