500 ஜனாஸாக்களையும், அதன் காணியையும் பாதுகாப்போம் - அபகரிக்க முயலும் பிக்குவின் சதியை முறியடிப்போம்
நாட்டில் சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் இனவாதத்தில் ஊறிப்போயுள்ள சில பெளத்த மதத் தேரர்கள் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதிகளை சிங்கள மயமாக்கும் முயற்சியே இது. திடீரென புத்தர் சிலைகள் ஆங்காங்கே தோற்றம் பெறுகின்றன. பாதுகாப்பு பிரிவினரும் அரச அதிகாரிகளும் இதற்குத் துணை நிற்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்களின் மையவாடிகளையும் சொந்தம் கொண்டாடி ஆக்கிரமிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றமை கவலைக்குரியதாகும். எமது நாட்டில் இனவாதம் அந்தளவுக்கு மலிந்து போயுள்ளது. பதவியில் இருக்கும் அரசாங்கம் பெளத்த தேரர்கள் சிலரது அடாவடித் தனங்களை கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
வரலாற்றுப் புகழ் மிக்க தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள கூரகலயில் பள்ளிவாசல் இதுவரை காலம் அமைந்திருந்த காணி தொல்பொருள் பிரதேசம் எனக் கூறி அப்பகுதி பெளத்த தேரர் ஒருவரால் அபகரிக்கப்பட்டு இன்று அவ்விடத்தில் பிரமாண்டமான தாது கோபுரம் அமைக்கப்பட்டு அப்பிரதேசம் பெளத்தர்களின் புனித பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இதற்குத் துணை போயிருக்கிறது. இந் நிலையில்தான் தென் மாகாணத்திலும் இவ்வாறு முஸ்லிம்களின் காணி ஒன்றினை அபகரிப்பதற்கான சூழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திஸ்ஸ மகாராம – கிரிந்த முஸ்லிம்
மையவாடிக்கு ஆபத்து
இனவாதத்தில் ஊறிப் போயுள்ள கிரிந்த பன்சலையின் தேரரினால் கிரிந்த முஸ்லிம் மையவாடிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பன்சலை கிரிந்த முஸ்லிம் மையவாடியிலிருந்து 500 மீட்டர் தூரத்திலே அமைந்துள்ளது. பன்சலையின் தலைமை குரு யடகல சப்தா மங்கள தேரர் ஆவார். இவர் தற்போது சுகயீனமுற்றிருப்பதால் அவருக்கு அடுத்தவரான யடகல வினித தேரர் பன்சலையை நிர்வகித்து வருகிறார். இந்த தேரரே முஸ்லிம் மையவாடிக் காணியில் 30 பேர்ச்சஸை சட்டவிரோதமாக பிடித்துக் கொண்டு சொந்தம் கொண்டாடி வருகிறார்.
கிரிந்த கிராமம்
அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமகாராம தேர்தல் தொகுதியில் கிரிந்த கிராமம் அமைந்துள்ளது. இங்கு 645 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு வாழ்வோரில் 99%மானவர்கள் மலே சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். ஒரு ஜும்ஆ பள்ளிவாசலும் மேலும் மூன்று பள்ளிவாசல்களும் இங்கு இயங்கி வருகின்றன. முஸ்லிம் மகா வித்தியாலயமொன்றும் இயங்கி வருகிறது.
ஒல்லாந்தர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் அவர்களுக்கு சிங்களவர் மீது நம்பிக்கையில்லாததால் இந்தோனேசியாவில் பட்டேவியாவிலிருந்து மலே சமூகத்தினருக்கு பயிற்சி வழங்கி இலங்கைக்கு அழைத்து வந்தனர். ஆங்கிலேயரினால் ஒல்லாந்தர் தோற்கடிக்கப்பட்ட பின்பு அவர்கள் மலே இராணுவத்தினரை வைத்துக் கொண்டார்கள். அம்பாந்தோட்டை உப்பு உற்பத்திக்கும், யால வன ஜீவராசிகள் சரணாலயத்தை உருவாக்குவதற்கும் பட்டேவியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மலே சமூகத்தினரே பயன்படுத்தப்பட்டனர். இந்தத் தொழிலாளர்கள் தங்குமிடமாகவே கிரிந்த கிராமம் உருவாக்கப்பட்டது என கிரிந்த ஜும்ஆ பள்ளிவாசல் முன்னாள் செயலாளரும் முன்னாள் உதவி கல்விப் பணிப்பாளருமான பி.ஜலால்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
மையவாடியின் வரலாறு
கிரிந்த முஸ்லிம் மையவாடி காணி பல தசாப்தங்களுக்கு முன்பு அப்துல் சலாம் எனும் ஒருவரின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவர் இக்காணியில் சேைனப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இக்காணி அரசாங்கத்துக்கு சொந்தமான காணியாகும். இப்பகுதி முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக அவர் பயிர்ச்செய்கையை நிறுத்தி காணியை வழங்கினார். அக்காலத்தில் தேசியப் பட்டியல் எம்.பி.யாக பதவி வகித்த மலே சமூகத்தைச் சேர்ந்த ஆமித் எம்.பி. அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி காணிக்கு உறுதிப்பத்திரம் இருக்கிறதா? என்று வினவினார். இல்லை என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடி காணியை நில அளவை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். நில அளவை செய்து எல்லைக் கற்களும் நடப்பட்டன. என்றாலும் காணி உறுதியில் மையவாடி எனக் குறிப்பிடப்படவில்லை.
அத்தோடு இக்காணியில் புசானா எனும் மலே இனத்தவர் 15 பேர்ச் நிலத்துக்கு மதில் கட்டியிருந்தார். இக்காணியில் ஆங்கிலேயர் 1932இல் துறைமுக பங்களா, வள்ளங்கள் தரித்து வைக்கும் கட்டிடம், களஞ்சியசாலை என்பனவற்றை நிர்மாணித்திருந்தனர். இவை அனைத்தும் சுனாமி அனர்த்தத்தின் போது அழிவுக்குள்ளாயின.
ஒரு குளமும் இருந்தது. சுனாமி காரணமாக அக்குளமும் மணலால் நிரம்பியது. குளம் மணலால் நிரம்பியதால் கிரிந்த கிராம மக்களின் வீடுகளுக்கு வெள்ளம் ஏற்படும் காலத்தில் ஆபத்து ஏற்படுகிறது. குளத்தின் மணலை அகற்றுவதற்கும் சம்பந்தப்பட்ட தேரர் அனுமதி வழங்குவதில்லை. குளமும் தமக்குச் சொந்தமானது என தேரர் வாதிக்கிறார்.
மையவாடி பெகோ இயந்திரம்
மூலம் துப்புரவு
மையவாடி காணி பன்சலைக்கு சொந்தமானது என கூறி யடகல வினித தேரர் கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று பெகோ இயந்திரம் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் ஸ்தலத்துக்கு வந்தார். இவர் ஏற்கனவே மையவாடியில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படும் போது பல தடவைகள் எதிர்ப்பினை வெளியிட்டவராவார்.
‘‘2022 ஆம் ஆண்டு அப்போதிருந்த திஸ்ஸமகாராம பிரதேச செயலாளர் மற்றும் கிரிந்த கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் குறிப்பிட்ட தேரர் போலி காணி உறுதியொன்றினை தயாரித்து உரிமை கொண்டாடியே காணியை டோசர் பண்ணுவதற்கு வருகை தந்ததாக’’ பள்ளிவாசல் பரிபாலன சபையின் முன்னாள் செயலாளர் பி.ஜலால்தீன் தெரிவித்தார்.
மையவாடி காணியில் 30 பேர்ச்சஸ் காணிக்கு அவர் உரிமை கொண்டாடியுள்ளார். இக்காணியில் ஜனாஸாக்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று மையவாடி காணியை டோசர் பண்ணுவதற்கு தனது சகாக்களுடன் வருகை தந்த தேரரை கிரிந்த முஸ்லிம்கள் தடுத்து நிறுத்தினர். பொலிஸாரின் தலையீட்டினால் அது நடைபெறவில்லை.
பின்பு பெருநாளையடுத்து திஸ்ஸமகாராம உதவி பொலிஸ் அத்தியட்சகர் இரு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடலொன்றினை நடாத்தினார். குறிப்பிட்ட தேரர் தனது பன்சலை நிர்வாக உறுப்பினர்களுடன் சமுகமளித்திருந்தார். பள்ளிவாசல் நிர்வாக சபையினரும் ஊர் பிரமுகர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கைகலப்பில் ஈடுபடவேண்டாம் அப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்க வேண்டியேற்படும் என்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்சரித்தார்.
இரு தினங்களின் பின்பு குறிப்பிட்ட தேரர் பெகோ இயந்திரத்தைக் கொண்டுவந்து பலாத்காரமாக மையவாடியை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டார். மையவாடியில் மரங்கள் இருக்கும் பகுதி டோசர் பண்ணப்பட்டது.
உடனடியாக பள்ளிவாசல் நிர்வாகம் ஊர் மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றினை ஒலிபெருக்கி ஊடாக விடுத்தது. மையவாடிக்கு ஆபத்து என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முழு ஊர் மக்களும் ஒன்று திரண்டார்கள். இதனை தடுத்து நிறுத்தும்படி கோரினார்கள். காணிக்கு உரிமை கோருவதற்கு பொலிஸார் அத்தாட்சி கேட்டார்கள். ஆங்கிலேயர் காலத்து காணியின் வரைபடம் எம்மிடமிருந்தது. நாம் பொலிஸாரிடம் முறையிட்டோம். எம்மிடம் வரைபடம் இருந்ததால் பொலிஸார் காணி டோசர் பண்ணப்படுவதை நிறுத்தும்படி உத்தரவிட்டார்கள். இதனையடுத்து டோசர் பணி நிறுத்தப்பட்டது எனவும் ஜலால்தீன் தெரிவித்தார்.
இதேவேளை சம்பந்தப்பட்ட தரப்பு நீதிமன்ற உத்தரவொன்றினைப் பெற்று கிரிந்த மையவாடியை டோசர் பண்ணுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
திலிப் வெத ஆரச்சி எம்.பி.
விஜயம்
பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆரச்சி கிரிந்த முஸ்லிம் மையவாடிக்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டார். பள்ளிவாசல் நிர்வாகிகளையும் அப்பகுதி முக்கியஸ்தர்களையும் சந்தித்து மையவாடி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினார். சம்பந்தப்பட்ட தேரரையும் சந்தித்துப் பேசினார். மாவட்ட செயலாளர் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். அத்தோடு பாராளுமன்றத்தில் இவ்விவகாரத்தை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.
பள்ளிவாசல் தலைவர் எல்.எம்.அரீஸ்
கிரிந்த முஸ்லிம் மையவாடி அபகரிக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொண்ட மையவாடியை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாதெனவும் கிரிந்த ஜும் ஆ பள்ளிவாசல் தலைவர் எல்.எம்.அரீஸ் தெரிவித்தார்.
இம்மையவாடியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை மையவாடி காணியை பாதுகாத்துக்கொள்வதற்காக நீதிமன்றில் மனுவொன்றினைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜனாஸாக்களின் இறப்புச் சான்றிதழ் பத்திரங்கள் சேகரிக்கப்பட்டு மையவாடி காணியை அபகரிக்கும் முயற்சிக்கு எதிராக நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக மையவாடியின் பயன்பாடு இடம்பெற்றுள்ளமை பற்றி நீதிமன்றில் சுட்டிக்காட்டப்படவுள்ளது.
மேலும் மணலால் நிரம்பியுள்ள குளத்தைப் புனரமைப்பதற்கு நீதிமன்றின் உத்தரவு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
சமூகத் தலைமைகளின் கடமை
50 வருட காலத்துக்கும் மேலான வரலாற்றினைக் கொண்ட, 500க்கும் மேற்பட்ட ஜனாஸாக்களை உள்ளடக்கியுள்ள கிரிந்த முஸ்லிம் மையவாடியை பாதுகாப்பதற்கு சமூகத் தலைமைகள் முன்வர வேண்டும். இது அவர்களது கடமையாகும்.
சமூகத்தின் அரசியல் தலைமைகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சிவில் சமூக அமைப்புகள் என்பன மையவாடியின் இருப்புக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.
இதேவேளை மாத்தறை, அம்பாந்தோட்டை பிரதி பொலிஸ் மாஅதிபர் சம்பந்தப்பட்ட பெளத்த தேரர்கள் நீதிமன்ற உத்தரவின்றி முஸ்லிம் மையவாடி மீது எவ்வித ஆக்கிரமிப்புகளையும் முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தேரர்களை அறிவுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.- Vidivelli
Post a Comment