20,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டாரா 16 வயது மாணவி..?
மாணவியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 சந்தேக நபர்களில் 3 பேர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமமாலி ஹல்பண்தெனிய உத்தரவிட்டுள்ளார்.
மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்றைய தினம் (15-05-2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதியாக செயற்பட்டவர், சிறுமியின் நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த விடுதியின் உரிமையாளரது மனைவி 200,000 ரூபா சரீர பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை பகுதியில் உயிரிழந்த 16 வயதுடைய மாணவியின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த மாணவி, 20,000 ரூபா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்த குறித்த மாணவியின், நண்பியுடைய காதலன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடம் இருந்து 20,000 ரூபாவை கோரியுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று (15) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த இளைஞரின் கணக்கில் பிரதான சந்தேகநபர் 12,000 ரூபாவை வரவு வைத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment