1000 பேர் தொழக்கூடிய பள்ளிவாசல் மூடல், நீதிமன்றில் 9 வழக்குகள் - சமூகம் விழித்தெழுமா..?
கபூர் ஹாஜியாரினால் வக்பு செய்யப்பட்டு பல தசாப்த காலமாக சீராக இயங்கி வந்த கபூரிய்யா அரபுக்கல்லூரி இன்று சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. கபூரிய்யா வக்பு சொத்தல்ல அது குடும்பச் சொத்து என்று ஒரு குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில், கபூரிய்யா அரபுக்கல்லூரியும் அதன் வக்பு சொத்துகளையும் பாதுகாத்துக்கொள்வதற்காக சமூகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கபூரிய்யா அரபுக் கல்லூரி தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. வக்பு ட்ரிபியுனில் மூன்று வழக்குகளும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஐந்து வழக்குகளும், மாவட்ட நீதிமன்றில் ஒரு வழக்கும் விசாரணையின் கீழ் உள்ளன.
அண்மையில் நடாத்தப்பட்ட ‘கபூரிய்யாவைப் பாதுகாப்போம்’ எனும் விழிப்புணர்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தாமதியாது செயலுறுப்பெற வேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் அதிக கரிசனை கொண்டு கபூரிய்யாவையும் அதன் வக்பு சொத்துக்களையும் அழிவிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டும் இதுவே சமூகத்தின் அபிலாஷையுமாகும்.
அத்தோடு கல்லூரியில் மாணவர்கள் வருடக்கணக்கில் படித்துக்கொண்டிருந்த நிலையில் அவர்களது கல்வி தற்போது கல்லூரி நிர்வாகத்தினால் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உடனடியாக கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும். மேலும் வாராந்தம் சுமார் 1000 பேர் அளவில் ஜும்ஆ தொழுகைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த கபூரிய்யா பள்ளிவாசல் நம்பிக்கை பொறுப்பாளர்களால் இழுத்து மூடப்பட்டுள்ளது.
சமயக் கடமைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே முஸ்லிம் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களும் தூங்கிக்கொண்டிருக்காது விழித்தெழ வேண்டும் என்பதும் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
- Vidivelli -
Post a Comment