Header Ads



புதிய பயங்கரவாத சட்டத்திற்கு எதிர்ப்பு, தமிழ் கட்சிகள் ஹர்த்தாலுக்கு அழைப்பு - முஸ்லிம்களின் நிலங்கள் அபகரிப்பு


உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் தாமதமடையலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். 


மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,


7 தமிழ்த்தேசியக் கட்சிகள்  இணைந்து ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.


கடந்த நான்கு தசாப்த காலமாக இருந்து வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்காகப் பல போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.


தமிழரசுக்கட்சி சார்பாகவும் நாம் பல போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வந்திருந்தோம்.

கடந்த வருடத்தில் கூட நாம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கையெழுத்துப் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம்.  

அந்தவகையில் தற்போது அந்தச் சட்டம் நீக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினை கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.


முன்னர் இருந்த சட்டத்தினை விட கொண்டுவரப்படவுள்ள உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்லதான நிலைப்பாடு காணப்படுகின்றது.


இந்த நிலையிலேயே நாம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.


இந்நிலையில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்திற்கு எதிராகப் பல எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் தமிழர் தரப்பு இணைந்து நாளையதினம் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் போராட்டம் காரணமாகவும் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் எற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.  


இந்தநிலையிலேயே நாளையதினம் உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினை பாராளுமன்;றத்திற்குக் கொண்டுவரும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கின்றது.


எனினும்  நாளையதினம் குறித்த சட்டமூலம் பாராளுமன்;றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.


எவ்வாறாயினும் எமது அழுத்தங்களின் அடிப்படையில்  நாளையதினம் கொண்டுவரப்படவில்லை என்றாலும்கூட அரசாங்கம் நினைத்தால் நாளை மறுதினமோ அல்லது வியாளக்கிழமையோ குறித்த சட்டமூலத்தினைக் கொண்டுவரமுடியும்.


ஆனாலும் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறுபட்ட தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் என்றால் குறித்த சட்டமூலம் பாதகமானது என்ற ஓர் செய்தியானது இதன்மூலம் சர்வதேசத்திற்கு தெரிவிக்கப்படுகின்றது.


எனவே மக்களது ஜனநாயகத்திற்குப் பாதகமான குறித்த சட்டமூலமானது எமது நாட்டினது எதிர்காலச் சந்ததியினைப் பாதிக்காதவாறு நாம் தற்போது செயற்பட வேண்டும்.


எனவே தான் நாம் நாடு தழுவிய ரீதியில் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். இதன் ஒரு அங்கமாகவே நாம் வடக்கு கிழக்கில் நாளையதினம் எமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.


இந்தநிலையில் நாட்டினது தற்போதைய நெருக்கடி நிலைமையில் கடைகள் மற்றும் கல்வி நிலையங்களை  மூடுவதால் பலருக்கும் பாதிப்புக்கள் ஏற்படும் என நினைக்கலாம். ஆனால் இந்த பயங்கரமான சட்டமூலத்தினைத் தற்போதே தடுக்காவிட்டால் எமது எதிர்கால சந்ததிகள் பல பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 


இந்த நிலையில் இந்தச் சட்டமூலம் முழு நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறினாலும் கடந்த கால அனுபவங்களைப் பார்த்தால் முழுவதுமாக தமிழ் மக்களே இந்தச் சட்டமூலத்தின் மூலம் பாதிக்கப்பட்டிருந்தமை அனைவருக்கும் தெரியும்.


எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டது தமிழர்கள் தான் என்பது அனைவருக்குமே தெரிந்த விடயமாகும்.


எத்தனையோ துன்பங்களை குறித்த சட்டத்திற்கூடாக தமிழர்கள் அனுபவித்திருந்தனர் என்பது அனைவருக்கும் தெரி

யும்.


மீண்டுமொருமுறை அதற்கான சந்தர்ப்பத்தினை நாம் வழங்குவதற்கு இடமளிக்கக்கூடாது. எனவே எமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவதன் மூலம் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்தினை நாம் எதிர்க்க வேண்டும்.


எனவே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் அனைத்து உறவுகளும் இணைந்து கொள்ள வேண்டுமென நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.


அத்துடன் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும் எமது எதிர்ப்புக்களை நாம் தெரிவிக்கவுள்ளோம்.


தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சகோதரர்களின் நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையிலேயே நாம் எமது வலுவான எதிர்ப்பினை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.