நிஜாம் படையினரின் வாரிசுகள் என கூறப்படும் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டது ஏன்..?
இவர்கள் வீடுகள் ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டதையடுத்து, இந்தக் குடும்பங்கள் தெருவில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
நடைபாதை அருகே இருக்கும் மரத்தின் நிழலில் அந்தக் குடும்பங்கள் நோன்பு அனுசரிக்கின்றன.
அவர்கள் வசிக்கும் பகுதிக்கு பிபிசி செய்தியாளர் சென்றார்.
அப்போது 7 குடும்பங்கள் கானுகா மரத்தின் கீழே தங்கியிருந்தன. சமையல் பொருட்கள், உடைகள் உட்பட அவர்களது உடைமைகள் அனைத்தும் அங்கிருந்தன.
அந்த மரத்தின் நிழலியே அவர்கள் சமைத்து உண்டு கொண்டிருக்கின்றனர்.
இரவு நேரத்தில் சாலையோரத்தில் படுக்கைகள் அமைத்து உறங்குகின்றனர்.
அவர்கள் பிபிசியிடம் பேசுகையில், எஞ்சிய குடும்பங்கள் அருகே இருக்கும் பகுதிகளில் வாடகை வீடுகளுக்கு குடிபெயர்ந்துவிட்டதாகக் கூறினர்.
மாலை நேரத்தில், அந்த நடைபாதையிலேயே அவர்கள் நோன்பை முடித்துக்கொள்கின்றனர்.
பிபிசி செய்தியாளர் அங்கு சென்ற போது வாளியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் 16 பெண்கள் முகம் கழுவிக்கொண்டு இருந்தனர்.
’’ரமலான் மாதம் தொடங்கியதிலிருந்து எங்களது நோன்பு இப்படித்தான் நடக்கிறது. நாள் முழுவதும் நாங்கள் நோன்பு இருக்கிறோம். மாலை நேரத்தில் நடைபாதையில் துணியை விரித்து அதில் அமர்ந்து எங்கள் நோன்பை முடிக்கிறோம். இங்கிருந்துதான் நாங்கள் அல்லாவை தொழுகிறோம்’’ என ஷமா என்ற பெண் பிபிசியிடம் கூறினார்.
இவர்கள் ஏன் சாலையில் வசிக்கிறார்கள்?
ஏசி கார்ட்ஸ் - பிஸ்டிவாடா இடையே சுமார் ஒரு ஏக்கர் அளவில் விளையாட்டு மைதானம் உள்ளது.
அங்கு பிஸ்டிவாடாவை நோக்கி கட்டடங்கள் இருந்தன.
ஏசி கார்ட்ஸை நோக்கிய பகுதியில் உள்ள வீடுகளில் சுமார் 35 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்துவந்தன. இங்கு வசித்தவர்களில் பெண்கள் வீட்டுவேலை செய்யக் கூடியவர்கள். ஆண்கள் கார் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டக்கூடியவர்கள்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அதிகாலை அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் தங்கியிருந்த வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டன.
உடமைகளுடன் சாலைக்குத் தள்ளப்பட்ட இந்தக் குடும்பங்கள் செல்வதற்கு வேறு இடமில்லாமல் நடைபாதையில் வசிக்கின்றன. இதில், பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய ஃபௌசியா சுல்தானா, ‘’எங்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் வழங்கும்படி கேட்டோம். நாங்கள் முதல் முறையாக அழைக்கப்பட்ட போது 17ஆம் தேதிவரை அவகாசம் அளிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். ஆனால், 14ஆம் தேதி காலை மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் அங்கு வந்தனர். உள்ளே நுழையைக் கூடிய மற்றும் வெளியே செல்வதற்கான அனைத்து வழிகளையும் அவர்கள் அடைத்தனர். யாரும் அந்தப் பகுதிக்குள் நுழையக் கூடாது என்பதற்காக ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியில் வைக்கப்பட்டனர். அதன் பிறகே எங்கள் வீடுகளை இடித்தனர். நாங்கள் அவர்களிடம் கோரிக்கை வைத்தும் எங்களுக்கு உதவவில்லை’’ என்றார்.
வாடகை வீடுகளுக்குச் செல்ல முடியாத குடும்பங்கள் இன்னும் நடைபாதையில்தான் வசித்துக் கொண்டுள்ளன.
’’அந்த இடத்தில் 3 முதல் 4 தசாப்தங்களாக நான் வசித்துவந்தேன். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு கூண்டுகள் செய்து அதை விற்ற பணத்தில் வாழ்ந்துவந்தேன். எங்கள் வீடு இரவோடு இரவாக அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுவிட்டது. தற்போது நடைபாதையில் வசிக்கிறேன். அருகே இருக்கும் பள்ளியின் முதல்வர் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி எங்களுக்கு உதவுகிறார்’’ என பிபிசியிடம் பேசிய முதியவர் சந்த் அலி தெரிவித்தார்.
ஏசி கார்ட்ஸ் பகுதி நிஜாம் படையில் இருந்த ஆப்ரிக்க குதிரைப்படை வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
சுமார் 300 இளைஞர்கள் ஆப்ரிக்காவில் இருந்து இங்கு வந்து நிஜாம் பாதுகாப்பு படையில் பணி செய்தனர்.
அவர்கள் பெரும்பாலும் குதிரைப்படை வீரர்களாக பணிபுரிந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அதில் 6 குடும்பங்களின் சந்ததிகளாக கூறும் 35 குடும்பங்கள் பிஸ்திவாடாவில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றன.
கடந்த 70 ஆண்டுகளாக இதே இடத்தில் அவர்கள் மூதாதையர்கள் வசித்துவந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் காட்டுகிறார்கள்.
இந்த இடம் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்று கூறி மாநகராட்சி அதிகாரிகள் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றியதாக இந்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலம் தொடர்பான பிரச்னை 1996ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தை அணுகி இங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு எதிராக தடை உத்தரவு வாங்கியிருந்தனர்.
பல ஆண்டுகளாக அவர்கள் கட்டிவரும் குடிநீர் வரி, மாநகராட்சி வரி, மின்சாரக் கட்டணத்திற்கான ரசீதுகளை பிபிசி செய்தியாளரிடம் அந்த மக்கள் காட்டினர்.
'’என்னுடைய தாத்தா 1951ஆம் ஆண்டு இங்கு நிலம் வாங்கினார். அப்போதிருந்தே நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். 1981ஆம் ஆண்டு நிலத்தை எங்கள் பெயரில் பதிவு செய்தோம். இத்தனை ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வசித்துவந்தோம். ஆனால், தற்போது அதிகாரிகள் இது ஏசி கார்ட்ஸ் அல்ல பிஸ்திவாடா என்கின்றனர்’’ என்றார் ஃபௌசியா சுல்தானா.
தற்போது அவரது மகள் பட்டப்படிப்பு படித்துவரும் நிலையில் வீடு இல்லாமல் என்ன செய்வது என்று ஃபௌசியா சுல்தானா குழம்பியுள்ளார்.
’’அருகில் இரண்டு அறைகளை நாங்கள் வாடகைக்கு எடுத்துள்ளோம். குளிப்பதற்காக பெண்கள் அங்கு செல்கிறார்கள். எங்கள் குழந்தைகளால் படிக்க முடியவில்லை. 2 , 3 குழந்தைகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறார்கள். தற்போது அவர்களால் எப்படி தேர்வு எழுத முடியும் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை’’ என்கிறார் அவர்.
உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறது?
நிலம் தொடர்பாக பிஸ்திவாடா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் தெலுங்கானா அரசு ஆகியவை வழக்கு தொடர்ந்துள்ளன.
உயர் நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று அந்த நிலத்தை விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கி தீர்ப்பளித்தது.
2012ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம், நிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 4 மாதங்களில் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், மாற்று ஏற்பாடு எதுவும் செய்யாமல் இரவோடு இரவாக அவர்களை வெளியேற்றியதே தற்போது அவர்களை நடைபாதையில் வாழும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
’’நீதிமன்ற உத்தரவின்படி பிஸ்திவாடாவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். இது விளையாட்டு மைதானம். அவர்கள் காட்டும் ஆவணங்கள் அனைத்தும் மோசடியானவை. அவர்களை வேறு இடத்தில் குடியேற்றம் செய்வது வருவாய்த்துறையின் பொறுப்பு’’ என்கிறார் ஹைதராபாத் மாநகராட்சியின் துணை ஆணையர் மோகன் ரெட்டி.
மண்டல வருவாய் அதிகாரி பர்வீனா பிபிசியிடம் பேசுகையில், வெளியேற்றப்படுவதற்கு முன்பே அனைவரும் வேறு இடத்தில் குடியேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
நடைபாதையில் வசிக்கும் குடும்பங்கள் குறித்து அவரிடம் கேட்ட போது, ‘’வருவாய்த்துறையின் அதிகாரிகள் குழுவை அனுப்பி எத்தனை பேர் நடைபாதையில் வசிக்கின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். பின்னர், இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்’’ என்றார்.
அந்த நிலத்தின் தற்போதைய நிலை என்ன?
ஹைதராபாத்
இடிந்த வீடுகள் இருந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சுவருக்கு மேல் ஆறடி உயரத்திற்கு வேலி போடப்பட்டுள்ளது.
வீடுகள் இடிக்கப்பட்டதற்கான தடயங்கள் இன்றும் அங்கு உள்ளன.
இது விளையாட்டு மைதானம் என்பதை தெரிவிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் இரண்டு தகவல் பலகைகளை வைத்துள்ளனர்.
’இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது, ஆக்கிரமிப்பாளர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று அந்தத் தகவல் பலகைகளில் எழுதப்பட்டுள்ளது.
Post a Comment