இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும்
குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச மனித உரிமை தரங்களைப் பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைதியான விமர்சகர்களின் குரலை ஒடுக்குவதற்கும் சிறுபான்மையினரை குறிவைக்கும் செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை உறுதிப்படுத்தும்,புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் உருவாக்கப்படும் வரையில், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் பூரண தடை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்த சட்டமூலத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தும் வரையில், ஐக்கிய நாடுகள் சபை , ஐரோப்பிய ஒன்றியம் , ஜப்பான், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான நிலைமைகள் GSP+ வரிச்சலுகையையும் பாதிக்கலாம் என்பதை ஐரோப்பிய ஒன்றியமும் தெளிவுபடுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment