ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மாற்றப்பட போகிறாரா..?
(எம்.எப்.அய்னா)
கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ள மொஹம்மட் இப்ராஹீம் ஸாதிக் அப்துல்லாஹ், 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியா என்ற கோணத்தில் சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றினை மையப்படுத்தி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (சி.ரி.ஐ.டி.) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விசாரணைகளின் நிமித்தம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஸாதிக் அப்துல்லாஹ், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையாளர்களின் தடுப்புக் காவலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதற்காக 3 நாள் விஷேட தடுப்புக் காவல் அனுமதி, சி.ரி.ஐ.டி.யினரால் கொழும்பு நீதிவான் நீதிமன்றிடம் இருந்து, எம்.சி.44231/8/20 எனும் வழக்குக் கோவையின் ஊடாக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன் தினம் (25) முதல் ஸாதிக் அப்துல்லாஹ்விடம் நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள சி.ரி.ஐ.டி. தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஸாதிக் அப்துல்லாஹ்வுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் எச்.சி. 2272/21 மற்றும் புத்தளம் மேல் நீதிமன்றில் 10721/2021 ஆகிய இலக்கங்களின் கீழ் இரு குற்றப் பகிர்வுப் பத்திரங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தப்படும் நிலையில், கம்பளை நீதிவான் நீதிமன்றில் 432/18 ஆம் இலக்கத்தின் கீழும் வழக்கொன்று நிலுவையில் உள்ளது.
முன்னதாக ஏப்ரல் 21 தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்தியவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியமை குறித்த விசாரணைகளுக்காக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினர் எனக் கூறப்படும் அஹமட் தாலிப் லுக்மன் தாலிப் அவரது மகனான லுக்மான் தாலிப் அஹமட் எனும் அபூ அப்துல்லாஹ் ஆகியோரைக் கைது செய்ய ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த இருவர் உள்ளிட்ட 5 பேர் குறித்து சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்து , ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புகளை வெளிப்படுத்துமாறு கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி அப்போதைய சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அபு ஹிந், அஹமட் தாலிப் லுக்மான் தாலிப் அவரது மகனான லுக்மான் தாலிப் அஹமட் எனும் அபூ அப்துல்லாஹ், ரிம்சான், புலஸ்தினி மகேந்ரன் எனும் சாரா ஜஸ்மின் ஆகியோர் தொடர்பிலேயே இந்த சிறப்பு விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபரால் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே, பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் லுக்மான் தாலிப், அபூ அப்துல்லாஹ் ஆகியோரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் கோரியிருந்தனர்.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, தனது இறுதி அறிக்கையில், 17 ஆம் அத்தியாயத்தில் வெளிநாட்டு தலையீடுகள் எனும் தலைப்பின் கீழ் சிறப்பு விடயங்களை முன்வைத்துள்ளனர். ஆணைக் குழு அறிக்கையின் 244 ஆம் பக்கம் முதல் ஆரம்பமாகும் குறித்த விடயங்களில், 251 ஆம், 252 ஆம் பக்கங்களில் லுக்மான் தாலிப், அபூ அப்துல்லாஹ் தொடர்பில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அஹமட் தாலிப் லுக்மான் தாலிப் அவரது மகனான லுக்மான் தாலிப் அஹமட் எனும் அபூ அப்துல்லாஹ் ஆகியோர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களாவர். இவர்கள் மீது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார பிரதான சூத்திரதாரியான சாதிக் உள்ளிட்டோருடன் இலங்கையில் மேலும் 4 மாலைதீவு பிரஜைகளுடன் இணைந்து அடிப்படைவாத கலந்துரையாடல்களில் ஈடுபட்டமை தொடர்பிலும் ஆணைக் குழு அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளன.
எனினும் மேற்படி குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் லுக்மான் தாலிப்பும் அவரது குடும்பத்தினரும் மறுத்துள்ளதுடன் இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமது சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்திருந்தனர்.
இதனைவிட 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி, சாய்ந்தமருது வீட்டில் தற்கொலைதாரிகள் தற்கொலை செய்துகொண்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது அங்கிருந்து ஒரு தொகை அவுஸ்திரேலிய சிம் அட்டைகள் மீட்கப்பட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆணைக் குழுவுக்கு வழங்கியுள்ள சாட்சியத்தையும் ஆணைக் குழு விஷேடமாக கவனித்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அவுஸ்திரேலிய தகவல் ஒன்றினையும் மையப்படுத்திய விசாரணைகளுக்காக ஸாதிக் அப்துல்லாஹ்வை மீள தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்தும் விசாரணையாக இது பரவலாக பார்க்கப்படுகின்றது.- Vidivelli
Post a Comment