கபூரிய்யாவுக்கு எவ்வாறு உதவப்போகிறீர்கள்..?
இந்த முக்கிய கூட்டத்திற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், முஸ்லிம் சட்டத்தரணிகள், சமூக ஆர்வளர்கள் என முக்கியமான ஆளுமைகள் என சுமார் 150 முக்கிய பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அஷ்ஷெய்க் ஹஸன் பாரிஸ் (கபூரி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாவத்துக் கூறி, இறையச்சத்தையும், இறைவனின் அத்தாட்சிகளையும் எடுத்துக் கூறி இறைவசனங்களோடு கூட்டத்தை ஆரம்பித்துவைத்து, வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்தின் நோக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கூட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர் எம்.ஹிஷாம் தெளிபடுத்தினார். தொடர்ந்து, 92 வருட வரலாற்றைக் கொண்ட மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி அதன் வரலாறு, அதன் அடைவு அதற்கான பழைய மாணவர்களது பங்களிப்பு மற்றும் தற்போது கல்லூரி எதிர்நோக்கும் சவால்கள் என்பவற்றை விளக்கும் விதமான மூன்று கட்ட கானொலிகள் காண்பிக்கப்பட்டன.
92 வருட வரலாற்றைக் கொண்ட இக்கல்லூரியின் அடைவும், அது அனுபவிக்கும் மரணவேதனையையும் சித்தரிப்பதாக குறித்த கானொலி அமைந்திருந்தமையும், அது பலரது உள்ளங்களை தொட்ட ஒன்றாக அமைந்திருந்ததையும் பலரும் சிலாகித்து பேசினர்.
தொடர்ந்து அஷ்ஷெய்க எஸ்.எச்.எம்.பழீல் (நழீமீ) அவர்களது, “இஸ்லாமியப் பார்வையில் வக்புடமைகளும், அதன் சிறப்பு, அதனைப் பாதுகாக்க வேண்டிய சமூகக் கடமைகள்” குறித்து இரத்தினச் சுருக்கமான ஒரு சிறப்புரை ஒன்று இடம்பெற்றது. மேலும் அவர் தனதுரையில் “இலங்கையில் பல மத்ரஸாக்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றின் உருவாக்கத்திற்கு கபூரிய்யா அரபுக் கல்லூரியில் கற்ற உலமாக்களின் பங்களிப்பு அளப்பரியது. ஜாமிஆ நழீமிய்யாவின் உருவாக்கத்திலும், அதன் கல்விக் கொள்கையை வகுப்பதிலும் ஆரம்ப முன்னோடிகளாக இருந்தவர்கள் கபூரிய்யா பட்டதாரிகளே. எனவே இலங்கை சமூகத்தின் இஸ்லாமிய கல்வி வளர்சியில் கபூரிய்யா அரபுக் கல்லூரி ஆற்றியுள்ள பங்களிப்பு காலத்தால் அழியாதது. எனவே இவ்வாறான ஒரு மிகப் பழமை வாய்ந்த கல்லூரியை இழப்பதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.”
“இங்கு வந்திருக்கின்ற அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், சமூக ஆர்வளர்கள் அனைவரும் இன்றைய இந்த ஒன்றுகூடலில் கபூரிய்யா அரபுக் கல்லூரியை பாதுகாப்பதற்கான ஒர் உடன்பாட்டிற்கு அவசரமாக வந்து, மிக அவசரமாக அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்” என அனைவரையும் வழித்தார்.
விஷேட உரையினைத் தொடர்ந்து “கல்லூரி அன்மைக்காலமாக எதிர்நோக்கும் வழக்குகளின் நிலைப்பாட்டினையும், கபூரிய்யா அரபுக் கல்லூரி மற்றும் அதன் உடமை குறித்தான சட்டப் பார்வையையும்” சிரேஷ்ட சட்டத்தரனி ருஷ்தி ஹபீப் விளக்கமொன்றை வழங்கினார்.
சுட்டத்தரனியின் பேச்சின் நடுவிலே பழைய மாணவர் சங்கத்தால் தயாரிக்கப்பட்டிருந்த கீழ் கானும் மஹஜரின் பிரதி வருகை தந்திருந்த அனைவருக்கும் மும்மொழிகளிலும் வழங்கப்பட்டது”
01- மர்ஹ{ம் அல்ஹாஜ் என்.டீ.எச்.அப்துல் கபூர் அவர்களால் இலங்கை முஸ்லிம்களின் சன்மார்க்க கல்விக்காக வழங்கப்பட்டதே, மஹரகமையில் 17.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கபூரிய்யா அரபுக் கல்லூரியாகும்.
02- கொழும்பு கிராண்ட்பாஸ் (முன்னர் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த) இடத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரிக்;கு வழங்கப்பட வேண்டியதாகும்.
03- சகல விதமான பொருளாதார மற்றும் பௌதீக வளங்களைக் கொண்டுள்ள மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி நவீன மயப்படுத்தப்பட்டு இலங்கை முஸ்லிம்களின் சன்மார்க்க கல்விக்கான ஒரு பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேண்டும்.
04- அஸ்மத் கபூரும் அவர் சார்ந்தவர்களும் “கல்லூரியினதும், அதன் மாணவர்கள், பழைய மாணவர்கள் குறித்து கூறிவரும் உண்மைக்கு புறம்பான அப்பட்டமான பொய்களையும், அவதூறுகளையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.”
05- குறுகிய இலாபங்களை மாத்திரம் கருத்திற்கொண்டு, அல்லாஹ்வின் உடமையொன்று அபகரிக்கப்படுவதற்கும், இழக்கப்படுவதற்கும் காரணமாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும் சமய, சமூக, சிவில் அமைப்புக்கள், சட்டத்தரனிகள், சங்கங்கள், அமைப்புக்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
06- கல்லூரியையும் அதன் உடமையையும் பாதுகாப்பதற்கும், வளர்த்தெடுப்பதற்கும் கல்லூரியின் பழைய மாணவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியும், தான் கற்ற கல்லூரிக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டுமென்பதற்காகவும் இதுவரை போராடி தம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்துள்ளனர்.
07- மர்ஹ{ம் அல்ஹாஜ் என்.டீ.எச்.அப்துல் கபூர் ஹாஜியாரின் நான்காவது பரம்பரையில் வந்த ஒருசிலரால் கல்லூரிக்கும் அதன் உடமைக்கும், அதன் இருப்பிற்கும் ஆபத்தேற்பட்டிருப்பதை கருத்திற்கொண்டு முஸ்லிம் அரசியல் மற்றும் மார்க்க, சிவில் அமைப்புக்களின் தலைமைகள் கபூரிய்யா அரபுக் கல்லூரியையும், அதன் உடமையையும் பாதுகாப்பதற்கும், வளர்தெடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
08- 1980களில் கபூரிய்யா அரபுக் கல்லூரியின் நிலப்பரப்பு அரசுடமையாக்கப்பட்டபோது அன்றிருந்த எமது முஸ்லிம் அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் ஒன்றிணைந்து போராடி கல்லூரியையும் அதன் நிலப்பரப்பையும் மீட்டெடுத்தனர். அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. எம்மோடுள்ள இன்றைய எமது தலமைகளே! நீங்கள் இன்றைய கபூரிய்யா அரபுக் கல்லூரிக்கு எவ்வாறு உதவப்போகிறீர்கள்?
09- மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியும் அதன் கிராண்ட்பாஸ் இடமும் இன்று சவாலுக்குட்படுத்தப்பட்டு, பேரழிவை சந்தித்துக் கொண்டிருப்பதை பாதுகாத்து மீட்டுத்தர வேண்டிய பொறுப்பும் கடமையும் எம் அனைவரினதாகும். எனவே இவ்விவகாரத்தை உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவது எமது அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களின் கடமையாகும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹகீம் பேசும் போது, “வக்பு சொத்துக்கள் சம்பந்தமாக அஷ்ஷெய்க் பழீல் அவர்களது உரையினை செவிமடுத்த போது, வக்பு சொத்துக்கள் பரிபோவது எவ்வளவு ஆபத்தானது என்பதும், அரசியல் தலைமைகளாக இருக்கக் கூடிய நாம் மற்ற எல்லோரையும் விடவும் இதுவிடயத்தில் பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக உள்ளோம், எனவே விஷேட பிரேரனை ஒன்றின் ஊடாகவேனும் பாராளுமன்றத்தில் ஒரு தெரிவுக்குழுவை உள்வாங்கி வக்புடமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்தல் அவசியம்” என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கும் போது “முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து உயர் நீதிமன்றத்தில் விஷேட பிரேரனை ஒன்றின் மூலமாகவேனும் ஒரு வழக்கை தொடர்ந்து, இந்த கல்லூரியையும் அதன் உடமைகளையும் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்தும் அங்கு வந்திருந்த பலரும் “கபூரிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரகள் கல்லூரியையும் அதன் உடமைகளையும் பாதுகாப்பதற்கு எடுக்கும் முயற்சியை பாராட்டியதோடு, இது அவர்களது பிரச்சினை மட்டுமே என்று பொறுப்பற்று இருந்துவிட முடியாது. அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சமூகமாக நாம் என்ன செய்திருக்கிறோம். வெருமனே பேசிவிட்டு களைந்து செல்வது இதற்கு தீர்வாக முடியாது. எனவே இன்றைய தினம் இதற்கான சமூகம் சார்ந்த தீர்வொன்று இங்கு எட்டப்பவேண்டும்” தெரிவித்தனர்.
தீர்மானமாக “தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து உயர்நீதிமன்றத்திலோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றிலோ ஒரு வழக்கை தொடர்வதற்கான சட்ட விடயங்களை ஆராய்வதற்கான ஒரு குழுவை அவசரமாக தெரிவு செய்தல், மேலும் சிவில் அமைப்புக்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும், ஒரு நடுநிலை தரப்பாக நின்று நம்பிக்கையாளர்களுடன் ஒரு சமரச பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்து தீர்மாணிப்பதும், மேலும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து ஒரு தெரிவுக்குழுவை உள்வாங்கி வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்” என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக அஷ்ஷெய்க் எம்.எஸ்.ஏ.எம்.ஷஹ்ரின் (கபூரி) அவர்களது நன்றி உரையோடும் கப்பாரதுல் மஜ்லிஸ{டன் கூட்டம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இராப் போசனம் பரிமாரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Post a Comment